சீனாவில் இணையவழி பட்டப் படிப்புகள்: மாணவர்கள் கவனமாக இருக்க யுஜிசி, ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

சீனாவில் இணையவழி பட்டப் படிப்புகள்: மாணவர்கள் கவனமாக இருக்க யுஜிசி, ஏஐசிடிஇ அறிவுறுத்தல்
Updated on
1 min read

சீனப் பல்கலைக்கழகங்கள் முன்அனுமதியின்றி வழங்கும் இணையவழி படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாது என்று யுஜிசி, ஏஐசிடிஇ அறிவித்துள்ளன.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:

சீன நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் உயர்கல்விக்கான பல்வேறு பட்டப் படிப்புகள் சார்ந்த மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதேநேரம், கரோனா தொற்று பரவலுக்கு பின்னர் சீன அரசு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனுடன் 2020 நவம்பர் முதல் விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பதை மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த கட்டுப்பாடுகளால் ஏராளமான இந்திய மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு சென்று தங்கள் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது. இதுவரை கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வும் வழங்கப்படவில்லை. மேலும்,பாடங்கள் இணையவழியில் கற்றுத்தரப்படும் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய விதிமுறைகளின்படி, முன்அனுமதியின்றி இணையவழியில் மட்டும் கற்பிக்கப்படும் படிப்புகளுக்கு யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகள் அங்கீகாரம் வழங்குவது இல்லை.

இதை கருத்தில் கொண்டு, உயர் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் சிக்கல்கள் ஏற்படாதவாறு, தங்கள் உயர்கல்வியை எங்கு தொடர வேண்டும் என்பதை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in