

சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களின் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் கட்டாயம் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. இது வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது.
நம் நாட்டில் உயர்கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கை - 2020 அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பாடத் திட்டம், தர மதிப்பீட்டு கல்வி வங்கி, பொது நுழைவுத் தேர்வு உட்பட ஏராளமான அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அவற்றைமத்திய கல்வி அமைச்சகம் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இத்திட்டம் 2022-23 கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தமிழ், இந்தி, கன்னடம் உட்பட 13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படும். இதற்கானவிண்ணப்ப பதிவு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கும். கூடுதல் விவரங்கள் https://nta.ac.inஎன்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியதாவது:
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல், பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலம் ஜூலையில் இத்தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 என்சிஇஆர்டி பாடத் திட்ட அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்படும். தேர்வு 2 பிரிவுகளாக நடைபெறும்.
இத்தேர்வை எழுத பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் போதும். ஆனால், பல்கலைக்கழகங்கள் விரும்பினால் சேர்க்கையில் பங்கேற்க தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்கலாம். சியுஇடி மதிப்பெண்அடிப்படையில் மாநில, தனியார் உட்பட இதரபல்கலை.களும் சேர்க்கை நடத்தலாம்.
இந்த நடைமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக வடகிழக்கு மற்றும் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும். பெற்றோரின் நிதிச்சுமை குறையும். தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பொது கலந்தாய்வில் பங்கேற்க அவசியம் இருக்காது.
அதேநேரம், பல்கலைக்கழகங்களின் இடஒதுக்கீடு மற்றும் ஒழுங்குமுறைகளில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால் இடஒதுக்கீட்டு கொள்கையில் பின்னடைவும் வராது.
இதேபோல, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் சியுஇடி தேர்வு முறையை பின்பற்ற அனைத்து மத்திய பல்கலை.களும் ஆர்வம்காட்டுகின்றன. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய தேசிய கல்விக் கொள்கை திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதை ஏற்காத உயர் கல்வி நிறுவனங்களுக்கு மானியங்களை நிறுத்தி வைக்க யுஜிசி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை வடிவமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான குழு அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.