Published : 09 Jul 2019 11:11 AM
Last Updated : 09 Jul 2019 11:11 AM

அறிவியல் தொழில்நுட்பத்தில் அசத்தும் மாநகராட்சிப் பள்ளி

அறிவியலின் உச்சமாக விண்வெளி அறிவியல் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய அதிநவீன அறிவியலைக் கற்கும் வாய்ப்பு வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்ற பொதுப்புத்தி உள்ளது.

அதுவும் பள்ளிப் பருவத்திலேயே இவற்றை அறிந்துகொள்ள ஒரு மாணவர் ஆசைப்பட்டால் அவர் தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே சாத்தியப்படும் என்று எண்ணம் நிலவுகிறது. ஆனால், உலகை ஆளும் அறிவியல் தொழில்நுட்பத்தை மிக வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் திருப்பூரில் உள்ள மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி  மாணவர்கள்.

ஜூலை 15 அன்று அதிகாலை 2.51 மணிக்கு,  விண்ணில் ஏவப்பட உள்ள சந்திராயன் -2ஐ நேரில் காண இந்தப் பள்ளியில் இருந்து 4 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள். 5-ம் வகுப்பு மாணவர்கள் முஹமது தாஹிர், சந்தோஷ்,   6-ம் வகுப்பு மாணவர்கள் மணிகண்டன், ஹரிகிருஷ்ணா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இதுபோக, மண்டல அறிவியல் மையமும் உலக ரோபோட்டிக் அமைப்பும் இணைந்து 2018-ல் நடத்திய ரோபோட்டிக் கண்காட்சியில் இந்தப் பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவர்கள் தமீப், அரசு ஆகியோர் பங்கேற்றனர்.

கோவையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இரண்டு நாட்கள் பங்கேற்ற ஒரே அரசு நடுநிலைப் பள்ளி இது மட்டுமே. பள்ளி மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் தொழில்நுட்பம் ஒற்றைக் குடையின் கீழ் கிடைக்கக் களத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் இப்பள்ளியின் ஆசிரியர் சி. சரவணன்.

திருப்பூர் நகருக்கு மத்தியில் உள்ளது மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி. 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தப் பள்ளியில் தற்போது 300 மாணவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பள்ளியின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளைக்  கண்டு, கேட்டுச் சுற்றுப்புறத்தில் உள்ள பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் இருந்து விலக்கி, இந்த அரசுப் பள்ளியில் படிக்க வைக்கத் தீவிர முனைப்பு காட்டுகின்றனர்.

பிளிக்கர்ஸ் கார்டு திட்டம்

QRCode போலக் காணப்பட்டும் பிளிக்கர்ஸ் கார்டு (Plickers Card) மூலம் கேள்வி-பதில் நேரம் வகுப்பில் நடைபெறுகிறது. ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு அட்டை மூலமாகச் சூட்சுமமாகப் பதிலளிக்கும் இந்த முறையால் பாடநேரம் சுவாரசியமாக மாறுகிறது.

அது சரி,  ஒரு வகுப்பில் 60 குழந்தைகள் படிக்கிறார்கள் என்றால், அவர்கள் பிளிக்கர்ஸ் அட்டை வழியாகப் பதில் அளிக்கும்போது, யார் சொன்னது சரி என்பதைக் கண்டறிவது எப்படி? தவறான பதில் சொன்னவர்கள் யார் என்பது ஸ்மார்ட் போர்டில் உடனே தெரிகிறது.

கூகுள் டூடுளும் அங்கீகாரமும்

கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய ‘டூடுள்’ (DOODLE) போட்டியில் இந்தப் பள்ளியின் 5-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்புவரை உள்ள மாணவர்களில் 20 பேர் தேர்ச்சி பெற்று ‘டூடுள்’ விளம்பரம் வரைந்தார்கள். இதில் யாரும் தேர்வாகவில்லை. ஆனால், அவர்கள் ‘டுடூள்’ என்ன என்பதைக் கற்றுக்கொண்டார்கள் எனப் பெருமிதம் கொள்கிறார்கள் பள்ளி ஆசிரியர்கள்.

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வருவதைப் போல், அதில் சில்லறை நாணயங்கள் வரும்படி மாதிரி ‘சிடிஎம்’ எனப்படும் ‘காயின் வெண்டிங்’ இயந்திரத்தை 2019 பிப்ரவரியில் வடிவமைத்துள்ளனர் இந்தப் பள்ளி மாணவர்கள். இதற்காகக் கூகுள் நிறுவனம் இந்தப் பள்ளிக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

இதுபோகத் தனியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றின் உதவியோடு டெலஸ்கோப் வாங்கி, ‘வானத்தை உற்று நோக்கும்’ நிகழ்வை அண்மையில் நடத்தியுள்ளனர். மாணவர்கள், பெற்றோர் மட்டுமின்றிப் பொதுமக்களும் நள்ளிரவுவரை இந்நிகழ்வில் பங்கேற்று வானியல் அதிசயங்களை உற்றுநோக்கி ரசித்தனர்.

வெள்ளத்தில் கைகொடுத்த தொழில்நுட்பம்

இப்பள்ளியின் 5-ம் வகுப்பு மாணவி ஜோதிலட்சுமி, தும்பா ராக்கெட் ஏவுதளத்துக்கு அண்மையில் சென்று திரும்பியுள்ளார்.

 “இஸ்ரோ ராக்கெட் ஏவும்போதெல்லாம் நாங்கள் அதை நேரலையாகப் பள்ளியின் ஸ்மார்ட் போர்ட்டில் பார்த்துள்ளோம். இதுதவிர மாதந்தோறும் நடத்தப்படும் ‘சவுண்டிங் ராக்கெட்’ ஏவப்படுவதை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அப்போது விக்ரம்சாராபாய் தொடங்கி இஸ்ரோவின் தற்போதைய இயக்குநர் சிவன்வரை பல்வேறு விண்வெளி ஆளுமைகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன்.  சென்னையின் பெருவெள்ளம் சூழ்ந்தபோது, தொலைத்தொடர்புகள் பல நாட்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஹேம் ரேடியோ (HAM RADIO) எனப்படும்  பேரழிவு மேலாண்மைச் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் எந்த அளவு பயன்பட்டது என்பதை எல்லாம் அங்கே சென்று தெரிந்துகொண்டேன்” என்கிறார் ஜோதிலட்சுமி.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாகத் தற்போது சந்திராயன் 2 ஏவப்படுவதைக் காணும் பூரிப்பிலும் பெருமிதத்திலும் உள்ளனர் இப்பள்ளியின் இளம் விஞ்ஞானிகள். விண்ணில் சீறிப்பாயும் ராக்கெட்டை அண்ணாந்து பார்ப்பது போல் பார்க்கவைக்கிறது அறிவியல் தொழில்நுட்பத்தில் அசத்தும் இந்த மாநகராட்சிப் பள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x