

இ
ந்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார்,தேசியக் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி. ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்திவருகின்றன. அறிவியல் மனப்பான்மையை, மாணவர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு முதல் ஆண்ட்ராய்டு செயலி மூலம் இந்த அறிவியல் விழிப்புணர்வுத் திறனறிதல் தேர்வானது நடைமுறைக்குவருகிறது.
இத்தேர்வு நாடு முழுவதும் ஒரே நாளில் இணையவழியில் நடத்தவும், ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட், மடிகணினி மூலமும் எழுதப் புதிய முறை அமலாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் 6 முதல் 11 வகுப்புவரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் தேர்வெழுதலாம்.
இத்தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், “www.vvm.org.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ.100. பள்ளி மூலம் தேர்வு எழுத முடியாத தனித்தேர்வர்கள் 9942467764 என்ற வாட்ஸ் அப் எண், அல்லது vvmtamilnadu@gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஸ்மார்ட் போன், டேப்லட், மடிகணினி ஆகியவற்றைப் பயன்படுத்தித் தேர்வு எழுதலாம்” என்றார் வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன், மாநில ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான்.
இத்தேர்வை எழுதுபவர்களில் மாவட்ட அளவில் (6 முதல் 11- ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்புக்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுக்கப்பட்டு, அவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவோர் மாவட்ட அளவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் இருக்கும்.
இதில் தேர்வு செய்யப்படுவோருக்குச் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும். இதில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும். இவர்கள், தேசிய அளவிலான ஒரு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
6 முதல் 11-ம் வகுப்புவரை முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் தேசிய அளவிலான முகாமுக்கு அழைக்கப்படுவர். அங்கு நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்கலாம். அதில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களில் 3 பேர் வீதம் தேர்வுசெய்யப்பட்டு முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே ரூ.25000, ரூ.15000, ரூ.10000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துகளைத் தெரிந்துகொள்ள வழிகாட்டப்படுவார்கள்.