Published : 08 Aug 2017 11:47 AM
Last Updated : 08 Aug 2017 11:47 AM

உட்கார்ந்திருந்தது போதும்!

னதை ஒருமுகப்படுத்தி அறிவுபூர்வமான செயலில் ஈடுபட முதலில் ஒரு இடத்தில் உட்காரத்தான் இதுவரை அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம். பள்ளியில் பாடம் படிப்பது, பரீட்சை எழுதுவது, அலுவலகத்தில் வேலைபார்ப்பது இப்படி மூளை வேலை செய்யும் அத்தனை விஷயங்களிலும் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பதும் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், சமீபத்திய ஆய்வு ஒன்று, அதிகப்படியாக ஒரே இடத்தில் அமர்ந்து ஒரு செயலைச் செய்வது மூளையின் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் என்கிறது.

காரணம், உடல் எடையில் வெறும் 2 சதவீதம்தான் மூளை என்றாலும் மொத்த உடலுக்குத் தேவையான ஆற்றலில் மூளைக்கு மட்டும் 20 சதவீத ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் குளுக்கோஸ் மூலமாகத்தான் மூளைக்குக் கிடைக்கும். இந்த குளுக்கோஸின் அளவு மிகவும் குறைந்தாலோ அதிகரித்தாலோ மூளை அணுக்கள் சிதைந்துபோகும். இதனால் மறதி, கவனச் சிதறல், கற்றல் குறைபாடு, தொடர்பாற்றல் துண்டிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகும். நடப்பது, ஓடுவது மூலமாக மட்டுமே உடலில் ஆற்றல் உண்டாகும். இவற்றுக்கு உட்காருதல் எதிர்மறையான செயல் அல்லவா!

மூளைக்கு அவசியம்

பல மணிநேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி படிப்பதையோ பணிபுரிவதையோவிட அவ்வப்போது ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு அவற்றைச் செய்யும்போது பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், நியூ மெக்சிகோ ஹைலாண்ட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேர்மறையாகச் சொல்வதானால், நடைப்பயணத்தின்போது காலடி ஏற்படுத்தும் அழுத்தமானது ரத்தத்தை மூளைக்கு உந்தித்தள்ளுவதன் மூலம் குளுக்கோஸை மூளைக்குள் செலுத்துகிறது. இதனால், மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. அதனால் உட்காரும் நேரத்தைக் குறைத்தல் மூளையின் ஆரோக்கியத்துக்கு அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நம்முடைய பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் நின்றுகொண்டும், நடந்தபடியும் பாடம் நடத்துகிறார்கள். ஆனால், வகுப்பறையில் மாணவர்கள் தாங்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுந்து நிற்கக்கூட ஆசிரியர்கள் அவர்களை அனுமதிப்பதில்லை.

கிட்டத்தட்ட அலுவலகங்களும் மறைமுகமாகத் தொழிலாளர்களை ஒரே இடத்தில் ஒரே கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு வேலைபார்க்கும்படிதான் நிர்ப்பந்திக்கின்றன. இத்தகைய சூழலில், நமது கல்வி நிலையங்களையும் அலுவலகங்களையும் மூளையின் நண்பனாக மாற்ற முடியுமா?

கற்பிக்கும் முறையை சீரமைக்க வேண்டும்

நிச்சயமாக முடியும் என நிரூபித்துவருகிறார்கள் மதுரையில் ‘கலகல வகுப்பறை’ நடத்துநரும் ஆசிரியருமான சிவா, சென்னை ஜோகோ நிறுவனத்தின் புராடக்ட் மேனேஜ்மெண்ட் இயக்குநரான ராஜேஷ் கணேசன் போன்றவர்கள்.

6CH_Rajesh ராஜேஷ்

குழந்தைகளால் அதிகபட்சம் 20 நிமிடங்களுக்கு மேலே ஒரே இடத்தில் உட்கார்ந்து பாடத்தைக் கவனிக்க முடியாது. இது அவர்களுடைய குறை அல்ல, அறிவியல். அவ்வளவு ஏன் ஆசிரியர்களுக்கான வாராந்திரக் கூட்டம் நடத்துகிறோமே அதில் அவர்களால் ஒரு மணி நேரம் உட்கார்ந்திருக்க முடிகிறதா என்கிற கேள்வியோடு தொடங்குகிறார் சிவா.

 “தற்போது தமிழகக் கல்வி பாடத்திட்டத்தைச் சீரமைக்கும் பணி நடைபெறுகிறதே, அதில் பாடங்களை மாற்றுவதற்குத் தரப்படும் முக்கியத்துவத்தைப் பாடம் நடத்தப்படும் முறைக்கும் அளிக்க வேண்டும். அதிலும் நவீனப்படுத்துகிறோம் என்கிற பெயரில் கணினி தொழில்நுட்பத்தைத் தொடக்க நிலைப் பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறார்களே அது ஆசிரியருக்கு வேண்டுமானாலும் பணியைச் சுலபமாக்குகிறது.

ஆனால், வளரிளம் குழந்தைகளின் செயல்பாட்டை முடக்குகிறது. ஓடி, ஆடி பாடம் கற்பதுதான் மிகச் சிறந்த முறை. அதைவிட்டுவிட்டு ஒரே இடத்தில் இருந்தபடி கணினித் திரையில் தோன்றும் வண்ணமயமான காட்சிகளைப் பார்ப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைபட்டுப்போகிறது. செயல்வழிக் கல்விக்காக உலகப் புகழ்பெற்ற பின்லாந்து, இத்தாலியின் ரெகியோ எமிலியா நகர மாதிரிப் பள்ளிகள் போல இங்கு அனைத்துப் பள்ளிகளிலும் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முறைகள் அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆனால், பல தனியார் பள்ளிகள் அந்தப் பெயரைச் சொல்லி இங்கு ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம், ‘புராஜெக்ட்’ என்கிற வார்த்தையைச் சொல்லி எல்.கே.ஜி.-யிலிருந்தே இதைச் செய் அதைச் செய் என்கிறார்கள். ஆனால், அவற்றில் மாணவர்களின் கற்பனைத் திறனை, படைப்பாற்றலை ஊக்குவிப்பதற்கான எந்த வழிமுறையும் இல்லை. பூ பூத்த செடியை சார்ட்டில் வரைந்தால் அதைக் குழந்தை உணர முடியுமா? நேரடியாகக் குழந்தையே செடி நட்டு, தினந்தோறும் நீர்ப்பாய்ச்சி, அதில் மொட்டுவிடுவதைப் பார்ப்பதுதான் உண்மையானக் கல்வி.

1 முதல் 10 வகுப்புவரை மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியர் நான். மொழி மீது ஆர்வத்தை உண்டாக்க வகுப்புக்கு ஏற்றமாதிரி அவர்களுக்கு காமிக்ஸ் புத்தகம், நாவல், சுற்றுச்சூழல் பற்றிய புத்தகம் போன்றவற்றை அறிமுகப்படுத்துகிறேன். புத்தகத்தில் உள்ள மொழிப் பாடங்களை நாடகமாக இயற்றி மாணவர்கள் நடிக்கப் பயிற்சி அளிக்கிறேன், அவர்களுடைய அன்றாட நிகழ்வுகளை நாட்குறிப்பாக எழுதச் சொல்லி அதன்மூலம் அவர்களுடைய கையெழுத்தைத் திருத்துவது, வாக்கியம் அமைக்கும் ஆற்றலை உயர்த்துவது போன்ற முயற்சிகளை எடுக்கிறேன்.

சொல்லப்போனால் கணிதப் பாடம் உட்பட அத்தனை பாடங்களையும் நாடகமாக மாற்றி நடித்து, ஆடி, பாடிக் கற்பிக்க முடியும்” என்கிறார் ‘கலகலவகுப்பறை’ என மாற்று வகுப்பறை முயற்சிகளை மேற்கொண்டுவரும் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியரான சிவா.

உயிர்ப்புடன் பணிபுரியலாம்

தங்களுடைய ஊழியர்களை வருடம் இருமுறை சுற்றுலா அழைத்துச் சென்றால் அவர்கள் மகிழ்ச்சியோடு பணி புரிவார்கள் என இன்றைய கார்ப்பரேட் அலுவலகங்கள் நம்புகின்றன. ஆனால், பணிச் சூழலையே சுவாரசியமாக மாற்றினால் தினந்தோறும் புதுப்பொலிவுடன் பணி புரியலாம் என்கிறார் ராஜேஷ் கணேசன் “எங்களுடைய அலுவலகத்தின் தாரக மந்திரம் ‘நம்பிக்கை மூலம் சுதந்திரத்தை வென்றெடுங்கள்’ என்பதாகும்.

எங்களுடைய அலுவலகத்தில் இத்தனை மணி நேரம் பணி புரிய வேண்டும் என்கிற மாதிரிகூட எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. மேலாளருக்கும் அவர் கீழே பணி புரிபவர்களுக்கு இடையில் நட்புரீதியான உறவு உண்டு அதிகாரம் செலுத்தும் முறை கிடையாது.

6CH_Shiva சிவா

குறிப்பாக இன்று பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் ஒரு குழுவினர் மற்ற குழுவினரோடு ஒரே தளத்தில் பணி புரிவதில்லை. பாதி வேலை அவுட் சோர்ஸ் செய்யப்படுகிறது. இதனால் தனித் தனித் தீவுகளாக வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.

ஆனால், எங்களுடைய அலுவலகத்தில் மென்பொருளை வடிவமைப்பவர்களும் அதற்குக் கோடிங் உருவாக்குபவர்களும், அதைச் சோதனை செய்யும் குழுவும், இறுதியாக புராடக்ட்டை உருவாக்கும் குழுவும் அதற்கான விளம்பரத்தைத் தயாரிக்கும் குழுவும் இணக்கமாக ஒரே நேரத்தில் இணைந்து பணிபுரியும் சூழலை உருவாக்கி உள்ளோம்.

இதனால் அந்நியப்பட்டுப்போகாமல் உயிர்ப்புடன் அனைவரும் ஒன்றுகூடித் தங்களுடைய தனிப்பட்ட கருத்தை அவர்கள் உருவாக்கும் பொருளில் வெளிப்படுத்துகிறார்கள். அலுவலக உள்கட்டமைப்பு உற்சாகம் தரும்விதமாக டென்னிஸ் கோர்ட், நூலகம் ஆகியவற்றையும் அமைத்துள்ளோம்” என்கிறார் ராஜேஷ்.

“இப்படி ஆடிக்கிட்டிருந்தா எப்படிப் படிப்பு வரும்” என இத்தனை நாட்கள் சொன்னவர்களிடம் இந்தக் கட்டுரையைக் காட்டுங்கள்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x