Last Updated : 15 Aug, 2017 11:44 AM

Published : 15 Aug 2017 11:44 AM
Last Updated : 15 Aug 2017 11:44 AM

சுதந்திர தினக் கட்டுரை: காந்தியின் கனவு நனவாகும் வளாகம்

தங்குமிடம், உணவு போன்ற அத்தியாவசியங்களில் தொடங்கி அதிநவீனத் தொலைத்தொடர்பு வசதிகள்வரை அனைத்துக்கும் அடியுரமாக உடலுழைப்புத் தொழிலாளர்கள்தான் உள்ளனர். ஆனால், “இப்பவெல்லாம் எங்கே நல்ல தச்சர் கிடைக்கிறாங்க?”, “ஒரு பிளம்பரைத் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு நிறைய சிரமப்பட்டேன்” எனச் சொல்லும் நிலைதான் உள்ளது.

15chsrs_thakkar55right

கோடிக்கணக்கான எண்ணிக்கையில் நம் பார்வையிலேயே படாமல் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பையும் இழந்து நமது தேசத்தை நாள்தோறும் கட்டிக்கொண்டிருப்பது இந்த உடலுழைப்புத் தொழிலாளர்கள்தான்.

‘ஒயிட் காலர்’ என்று சொல்லப்படும் வேலைகளுக்கு இருக்கும் அந்தஸ்தையும் சம்பளத்தையும் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு அளிக்கிறோமா? இல்லையென்பதுதான் துயரமான பதில்.

இப்பின்னணியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த கட்டணத்தில் ஏழை மாணவர்களுக்குத் தொழில்நுட்பப் பயிற்சிகளை அளித்துவரும் தக்கர் பாபா வித்யாலயாவின் செயல்பாடுகளை தமிழகம் போற்ற வேண்டியது.

ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் உடலுழைப்பு

இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக உடலுழைப்பையும் கைவினைத் தொழில்களையும் அணுகியவர் காந்தி. மனிதர்களுக்கு இடையே தோன்றிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான முதன்மை ஆயுதமாக அவர் உடலுழைப்பையே கருதினார். அந்த அடிப்படையில் அவர் 1933-ல் சென்னை கோடம்பாக்கத்தில் நிறுவிய தொழிற்பயிற்சி மையம் இது. அவர் உருவாக்கிய ஹரிஜன சேவா சங்கத்தின் ஒரு பிரிவாக இது தொடங்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அவர்களுக்குச் சில திறன்களைக் கற்றுக்கொடுப்பது அவசியம் என்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு இது. ஹரிஜன் சேவா சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராகவும் பொறியாளராகவும் இருந்த தக்கர் பாபாவின் சேவைகளைக் கவுரவிக்கும் வகையில், 1946-ல் தற்போது இருக்கும் இடத்துக்கு ‘தக்கர் பாபா வித்யாலயா’ என்று காந்தியடிகள் பெயரும் சூட்டினார்.

நாலரை ஏக்கர் பரப்பளவில் எளிமையான கட்டிடங்களுடன் அமைதி சூழ்ந்திருக்கும் இந்த வளாகம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, ஏழ்மையான குடும்பச் சூழலிலிருந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு உத்தரவாதமிக்க எதிர்காலத்தைப் பல ஆண்டுகளாக வழங்கிக்கொண்டிருக்கிறது.

எலெக்டிரிசியன், ஃபிட்டர், வயர்மேன், ரெஃப்ரிஜிரேஷன் மெக்கானிக் அண்ட் ஏர்கண்டிஷனிங், கார்ப்பெண்டரி அண்ட் உட்வொர்க்கிங், வெல்டிங், டெய்லரிங் ஆகிய பயிற்சிகளை முடித்த மாணவர்கள் வளாகத் தேர்வு மூலம் 100 சதவீதம் வேலைவாய்ப்பும் பெற்றுவிடுகின்றனர். மாதம் 500 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெல்டிங், டெய்லரிங் படிப்புக்குக் கல்வித் தகுதி எதுவும் அவசியம் இல்லை.

தொழிற்கல்வியோடு ஒழுக்கக் கல்வி

அரசு கவுன்சலிங் வாயிலாக வருபவர்களுக்கு அரசே இந்தப் பணத்தைக் கட்டிவிடுகிறது. இந்தப் பயிற்சிகளில் பெரும்பாலானவற்றுக்குத் தேசிய, மாநிலத் தரச்சான்றிதழும் உண்டு. காலப்போக்கில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் தொழிற் பட்டறை, கணினி வசதிகளை மாணவர்களுக்குத் தந்து மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் இந்த நிறுவனம் ஈடுபாடு காட்டிவருகிறது.

15chsrs_thakkar44சென்னையில் தயாராகும் நவராத்திரி சிலைகள்ஜப்பானின் டோக்கியோ வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட 18 கணினிகளில்தான் இனி இந்த மாணவர்கள் தங்கள் எழுத்துத் தேர்வுகளை எழுதவுள்ளனர். “இங்கே செயல்வழிக் கல்விக்கு அதிகக் கவனம் கொடுக்குறாங்க. குடும்பத்தினர் போல எங்களை நடத்துறாங்க. நான் ஒரு நல்ல எலெக்ட்ரிசியன் என்கிற நம்பிக்கை இங்கே வந்தபிறகு வந்திருக்கு” என்கிறார் எலெக்ட்ரிசியன் பயிற்சி மாணவர் காமராஜ்.

 

வெளியூர்களிலிருந்து வந்து படிப்பவராக இருந்தால் 20 மாணவர்கள்வரை இந்த வளாகத்திலேயே தங்கிப் படிக்கலாம். தொழிற்பயிற்சி வகுப்பு தொடங்குவதற்கு முன்பாகத் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வளாகத்துக்கு முன்பு உடற்பயிற்சியில் அனைத்து மாணவர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

“இங்கே வரும் மாணவர்கள் குடிசைப்பகுதிகளிலிருந்தும் தொலைதூரக் கிராமங் களிலிருந்தும் வருபவர்கள். ஒற்றைப் பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகளும் இங்கே படிக்கிறார்கள்.

பத்தாவது படித்திருந்தாலும் சரியாக எழுதப் படிக்கத் தெரியாமல் பலர் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்களுக்கு வாசிப்பு, எழுத்து, தொழிற்பயிற்சியோடு அன்றாட ஒழுக்கக் கல்வியையும் போதிக்கிறோம்.

அதே நேரத்தில் இங்குத் தொழிற்கல்வி முடித்தால் நாங்களே வளாகத் தேர்வு மூலம் பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கிக் கொடுத்துவிடுகிறோம். இங்குப் படித்து விட்டுச் செல்லும் மாணவர்களுக்குத் தொழில்துறையில் மதிப்பும் இருக்கிறது” என்கிறார் தக்கர் பாபா வித்யா சமிதியின் செயலாளர் மாருதி.

கைத்திறனுக்கு மரியாதை

உடலுழைப்புத் தொழிலுக்கும் கைத்திறனுக்கும் தக்கர் பாபா வித்யாலயா சமிதி அமைப்பு கொடுக்கும் மரியாதையை அதன் உத்யோகசாலையில் பார்க்க முடிகிறது.

மேற்கு வங்கத்தில் நவராத்திரிக் கொண்டாட்டத்துக்கான துர்க்கையின் சிலைகள் செய்வதற்காக அந்தக் கலைஞர்களுக்கு இங்கேயே இடம்கொடுத்துள்ளனர். வெறும் வைக்கோலிலிருந்து மண்ணால் மெழுகப்பட்டு அற்புதமாக உருவாகும் சிலைகள் அவை.

இந்தியா முழுவதும் இன்றைய தொழில்துறைத் தேவைகளுக்கும் பொருளாதார நிலைக்கும் ஏற்ப கல்விக்கொள்கைகளை மாற்றுவதற்கான தேவைகள் எழுந்துள்ளன. ஏட்டுப்படிப்பு மட்டுமின்றி நேரடி அனுபவக் கல்வியை உடலுழைப்புத் திறன், கைவினைத் திறன் அடிப்படையில் அளிக்க வேண்டும் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கனவு கண்ட ஒரு தீர்க்கதரிசியின் தரிசனம் இங்கே நனவாகிக்கொண்டிருக்கிறது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x