Last Updated : 27 Jun, 2017 11:14 AM

Published : 27 Jun 2017 11:14 AM
Last Updated : 27 Jun 2017 11:14 AM

பயனுள்ள ஆப்ஸ்: பாடம் சொல்லித் தரும் செயலிகள்

இப்போதெல்லாம் கட்டுப்படியாகும் செலவிலேயே உள்ளங்கையில் அடங்கும் கைப்பேசிகள் சந்தையில் கிடைத்துவிடுகின்றன. அந்தக் கைப்பேசிகளில் பலவகையான செயலிகளை நிறுவிக்கொண்டால் மட்டுமே கைப்பேசிகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவோர் தங்களது அன்றாடப் பாடம், தேர்வு, திட்டமிடல், உடல்-மனநலப் பராமரிப்பு போன்றவற்றுக்கு உதவியாக உள்ள செயலிகள் சிலவற்றை பார்ப்போம்.

செயலி சூழ் உலகு

ஸ்மார்ட் ஃபோன், டேப்லட், மடிக் கணினி ஆகியவற்றில் நிறுவிக்கொள்வதற்கான பல செயலிகள் கிடைக்கின்றன. எவை நமக்குத் தேவையானவை என்பதைக் கண்டறிந்து அவற்றை நிறுவிக்கொள்வது சவாலான செயல்தான். ஆண்ட்ராய்டு, ஆப்பிள், பிளாக்பெரி, விண்டோஸ் எனச் செயலிகள் அடிப்படையில் ஸ்மார்ட் ஃபோன்கள் வேறுபட்டாலும், இங்கே பெருவாரி பயன்பாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளே தரப்பட்டுள்ளன. அவற்றை ஒட்டியே இதர பயனர்கள் தங்களுக்கான செயலிகளையும் அடையாளம் காணலாம்.

திட்டமிட்ட தயாரிப்புகளுக்கு

பாடம் தொடர்பான குறிப்புதவி, தேடல், பிரதியெடுத்தல் ஆகியவற்றுடன் அன்றாடச் செயல்களைத் திட்டமிட்டு மேற்கொள்வதற்கும் நினைவூட்டுவதற்கும் உதவும் செயலிகள் மாணவர்களுக்கு அடிப்படையானவை. பெரும்பாலானோர் அறிந்திருக்கும் இந்தச் செயலிகளின் பட்டியலில் EverNote, Google Keep, Pocket, AnyDo, MyGenda போன்றவை முக்கியமானவை.

மொபைல் கேமரா கொண்டு குறிப்புதவி நூல்களைப் பிரதி எடுப்பதோடு ஆவணப்படுத்தவும் CamScanner, DocScanner ஆகியவை உதவும். இதே கேமரா உதவியுடன் கணிதச் சமன்பாடுகளைத் தீர்க்க PhotoMath அவசியம். கேமரா மூலம் வகுப்பறை வெண்பலகையின் குறிப்புகளைப் படமெடுத்து அவற்றை PDF, Word கோப்புகளாகச் சேமிக்க Office Lens உதவும். குரல் பதிவு மற்றும் பாடக் குறிப்புகளை ஒருசேரச் சேமிக்கவும், அவற்றை ஒத்திசைவுடன் பயன்படுத்தவும் கட்டணப் பதிப்பாக AudioNote செயலி உதவுகிறது. அன்றாடப் படிப்பு, வீட்டுப் பாடம், பருவத் தேர்வுகளுக்கான தயாரிப்பு ஆகியவற்றுக்கு Timetable, My Class Schedule, My Homework செயலிகள் உதவும்.

அதிகப்படியான பாடம் சார்ந்த செயல்பாடுகளை மொபைல் ஃபோனில் இலகுவாக்க Native Clipboard முக்கியம். உங்களது கைப்பேசியை டேப்லட் மற்றும் இதர கணினிகளுடன் இணைத்துப் பயன்படுத்தவும், கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளவும் AirDroid உதவும். Dictionary.com பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அவசியமானது. கணிதப் பாடத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ளவும், பிரத்யேக வீட்டுப் பாடங்களுக்கும் MathWay உதவும்.

திருப்புதலும் தேர்வு ஆயத்தமும்

சிறிய பிரேக், காத்திருப்புகள் என எந்நேரத்தையும் பொன்னாக்கும் விதமாகப் படித்ததை விரைவாகத் திருப்பிப் பார்ப்பதற்கு StudyBlue, GoConqr செயலிகள் உதவும். பாடக்குறிப்புகள், ஃபிளாஷ் கார்ட்ஸ், மன வரைபடம், ஸ்லைடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலான திருப்புதலை இவற்றில் பெறலாம். Tcy Exam Prep என்ற தலைப்பின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான பாட உதவிகள், JEE, CAT, GATE, GRE தேர்வுகளுக்கான தயாரிப்புகள் கிடைக்கின்றன.

Bench Prep செயலி சமூக வலைத்தள அடிப்படையில், பாடக் குறிப்புகள் மற்றும் விநாடி வினா பாணியில் தேர்வு தயாரிப்புக்கு உதவும். கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வுக்கான நூற்பட்டியலை இணைக்கும் பணியைப் புத்தகத்தின் ‘பார்கோடு’ உதவியுடன் முடித்துத் தருகிறது Easybib செயலி. பிரெஞ்சு, ஜெர்மன் உட்பட 20-க்கும் மேற்பட்ட மொழிகளைக் கையாளவும், கற்றுக் கொள்ளவும் DuoLingo உதவும்.

பாதுகாப்புக்கான செயலிகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தங்கள் பாதுகாப்புக்காகவும், அவசரகால உதவியாகவும் பயன்படுத்திக்கொள்ள ஏராளமான செயலிகள் உள்ளன. அவற்றில் பிரதானமான Circle of 6 போன்ற செயலிகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். டெல்லி நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் பெண்களுக்கு எனப் பிரத்யேகச் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அறிமுகமில்லாத புதிய இடங்களுக்குச் செல்லும்போதும், பாதுகாப்பில் ஐயம் எழும்போதும் பெற்றோர் அல்லது நம்பகமானவர்களுடன் தொடர்பில் இருப்பது, காவல் துறையினர் உதவியைப் பெறுவது உள்ளிட்ட உதவிகளை My Safety Pin, bsafe, React mobile, chilla, women safety, smart 24x7, Shake2Safety, Raksha போன்ற செயலிகள் மூலம் பெறலாம். இந்தச் செயலிகளில் ஒவ்வொன்றாக நிறுவிப் பார்த்துத் தனக்கு உகந்ததை இறுதியாக முடிவுசெய்வது நல்லது.

Google Maps அவ்வப்போது அப்டேட் செய்துகொள்வது படிப்பு நிமித்தம் புது ஊரில் புழங்குபவர்களுக்கு அவசியமானது. வங்கிக் கணக்கை மொபைல் ஆப் வாயிலாக அணுகுவது அலைச்சலைத் தவிர்க்கும். கல்லூரி மாணவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் Toshl உதவும்.

ஆரோக்கியம் பேணல்

உணவு, உறக்கம், உடல்நலம் என ஆரோக்கியப் பேணலுக்கும் செயலிகள் உண்டு. காலையில் சரியான நேரத்துக்கு எப்படியாவது எழுப்பிவிடும் செயலி Alarmy. அலார ஒலியை அமர்த்தப் பல தொடர்ச்சியான செயல்பாடுகளைத் தந்து தூக்கத்தைத் துரத்தும் செயலி இது. மேலும் அன்றைய தட்பவெப்ப நிலையை முன்கூட்டியே கணித்தும் உதவும். SleepCycle தூக்கத்தைக் கண்காணிக்கவும், உரிய நேரத்தில் நம்மை எழுப்பி விடவும் உதவும். உடல் நலன், எடைக் கண்காணிப்பு போன்றவற்றை MyFitness Pal, MyPlate Calorie Tracker, My Diet Coach ஆகியன பார்த்துக்கொள்ளும். குறைந்த நேர முதலீட்டில் அதிகப்படி உடல் ஆரோக்கியம் பேணலுக்கு 7 Minute Workout உதவும். மன அழுத்தம் தவிர்க்க HeadSpace உதவியுடன் பரிச்சயம் இல்லாதவர்களும் தியானம் செய்யலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x