Last Updated : 18 Sep, 2018 11:45 AM

Published : 18 Sep 2018 11:45 AM
Last Updated : 18 Sep 2018 11:45 AM

அக்கினிக்குஞ்சு 11: படிப்பு வேறு, அறிவு வேறு!

‘எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்

இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்

இலவச நூற்கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்’

என்றார் பாரதிதாசன்.

கட்டாயக் கல்வியும் இலவசக் கல்வியும் அவசியம் என்று வலியுறுத்தி 1929 பிப்ரவரி 18 அன்று செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார்.

இலவசக் கல்வி எனும்போது கல்விக் கட்டணச் சலுகையை மட்டுமின்றிப் புத்தகம், உணவு, உடை முதலியவற்றையும் மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பெரியாரின் கல்வி குறித்த சிந்தனையையே மேலே குறிப்பிடப்பட்ட பாடலில்  பாரதிதாசன் எதிரொலித்தார்.

ஒரே ஒரு கவிஞனை மட்டுமல்ல; தன்னுடைய கொள்கையாலும் செயற்பாட்டாலும் உலகில் அனேகரின் சிந்தனையைச் செதுக்கியவர் ஈ.வெ.ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட பெரியார். ஆதிக்கச் சாதியினரின் வீதிக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்களுக்கு ஆலயம் முதல் பாடசாலைவரை பிரவேசிப்பதற்கான உரிமையைப் போராடிப் பெற்றுத்தந்தவர் அவர்.

அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு

1920-களில் வெறும் 7 சதவீத எழுத்தறிவு பெற்ற மக்களைக் கொண்டிருந்த தேசத்தில், கல்வி வழங்குவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்களின் அதிகாரம் அல்ல, அது அரசாங்கத்தின் கடமை என்று குரல் கொடுத்தார் பெரியார். தன்னுடைய இடைவிடாத முயற்சிகளாலும் பரப்புரைகளாலும் சாதிப் பாகுபாடு வேரூன்றி இருந்த இந்தியச் சமூகத்தில் 1928-லேயே அன்றைய மதராஸ் மாகாணத்தில் (தமிழகத்தை உள்ளடக்கியது) அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டு முறை அமல்படுத்த அரசை உந்தித்தள்ளினார். இன்று இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்வதற்கு அவர் ஆற்றிய பங்கு கணிசமானது.

பகுத்தறிவு என்ற அடித்தளத்தின் மேல் அறிவார்ந்த சமூகத்தைக் கட்டமைக்கக் கனவு கண்டார். வயிற்றுப் பிழைப்பு, சுயமரியாதை, சுதந்திரம், அன்பு, பரோபகாரம் முதலியவற்றோடு கண்ணியமாக உலக வாழ்க்கையை நடத்தத் தகுந்த அறிவைத் தருவதே கல்வி என்றார். அத்தகைய கல்வியை ஜனநாயகப் படுத்தக் குலக் கல்வித் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். 1952 ஏப்ரல் 10 அன்று அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜி 15 ஆயிரம் பள்ளிகளில் 6 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளை மூடி குலக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அத்திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் பேசியும் எழுதியும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பெரியார். பலவகைப் போராட்டங்களை நடத்தினார். மக்களின் எதிர்ப்பு பெருகவே 1954-ல் ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து விலகி, காமராஜர் முதல்வரானார். 1954 மே 18 அன்று குலக் கல்வித் திட்டத்தைக் காமராஜர் ஒழித்தார்.

சிறந்தது இருபாலர் கல்வி

ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குக் கல்வி அத்தியாவசியம் என்றார் பெரியார். கிட்டத்தட்ட 22 வயதுவரை பெண்களுக்குக் கல்வி அளித்து வேலை பெறுவதற்குரிய தகுதி யையும் வருமானம் ஈட்டுவதற்கான வழிவகையையும் செய்துதர வேண்டியது பெற்றோரின் கடமை. இருபாலர் கல்வி முறையே சிறந்தது. அப்படித்தான் ஆணுக்கு நிகராகச் செயலாற்றக்கூடியவர்களாகப் பெண்களை உருவாக்க முடியும் என்றார்.

ஆசிரியர், மாணவர்களுக்கு சுயமரியாதை, சமத்துவம், அன்பு, தேசப்பற்று ஆகியவற்றைக் கற்றுத் தர வேண்டும். அதிலும் துளிர் பருவத்தினருக்குக் கல்வி போதிக்கும் வேலை முழுவதும் பெண்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். மாணவர்கள் படிப்பைத் தவிர வேறெதிலும் கவனம் சிதறாமல் தீவிரமாகக் கல்வி பெற வேண்டும் என்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வலியுறுத்தியவர் பெரியார்.

அப்படி அவர் ஆற்றிய சில உரைகளின் சுருக்கம்:

பட்டமெல்லாம் கல்வியாகுமா?

என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருஷக் காலந்தாம் நான் பள்ளியில் படித்திருப்பேன். அப்போதும் என் கையெழுத்தைப் போடக் கற்றுக்கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே, கல்வி முறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் உங்களுக்கு சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டியவரையில் சில வார்த்தைகளைச் சொல்கிறேன்.

சாதாரணமாக, ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாம் என்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள் அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள்.

எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். நீங்கள் இருவரும் எப்படிக் குழந்தைகளைப் படிப்பிக்கின்றீர்களோ அப்படியே அவர்கள் தேசத்துக்கும், தேச நன்மைக்கும், ஒழுக்கத்துக்கும் உரிய மக்களாய் வாழக்கூடும். எனவே தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்பேர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ, நமது நாட்டில் பிள்ளைபெறும் இயந்திரங்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்கு சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக்கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்புடன் இருக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்; தேசாபிமானத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றில் ஏதாவது உங்களால் கற்றுக் கொடுக்கப்படுகிறதா?

இந்தப் பட்டமெல்லாம் கல்வியாகுமா? இதைப் பெற்றவர்களெல்லாம் படித்தவர்களாவார்களா?

சலவைத் தொழிலாளி,  சிகை அழகு நிபுணர், தச்சுத் தொழிலாளி, கொல்லர், செருப்பு தைக்கும் தொழிலாளி முதலியோர் எப்படித் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ அப்படியே பி.ஏ., எம்.ஏ. என்று படித்தவர்கள் என்போரும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள்.

சலவைத் தொழிலாளிக்கு எப்படிச் சரித்திரப் பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்கும் தொழில் தெரியாது. செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்பு தைக்கத் தெரியாது.

ஆகவே இந்தத் தொழிலாளிகளைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒருவிதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்துக்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர அறிவாகாது. இந்தப் புரிதலோடு நீங்கள் மக்களின் உண்மையான ஆசிரியராக இருக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

-போளூரில், 24-4-1927-ல் நடந்த ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் சொற்பொழிவு, ‘குடிஅரசு’ 1-5-1927

படிப்பே பிரதானம்

மாணவர்களே! நீங்கள் படிப்பை ஒழுங்காகக் கவனித்துப் படியுங்கள்; உங்கள் பெற்றோர் கடன் வாங்கி, எப்படியாவது நீங்கள் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்கிற ஆசையால் செலவழித்து, உங்களைப் படிக்கவைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது நீங்கள் படிப்பைத் தவிர வெளி விஷயங்களில் கலந்துகொள்ளாதீர்கள்.

சாதாரண மாணவர்களைக் கிளர்ச்சிக்கு அல்லது மற்றக் காரியங்களுக்குத் தூண்டுவதே தவறு. அவர்கள் உலக அனுபவம் இல்லாதவர்கள்; எதையும் எளிதில் நம்பிவிடுவார்கள்; உள்ளத்தின் வேகத்தில் எதுவும் செய்துவிடுவார்கள். அவர்களை இந்த முறையில் பழக்கி அவர்களைச் சிலர் கேடு அடையச் செய்யக்கூடாது.

-சென்னையில், 5-12-1952-ம் தேதி சொற்பொழிவு, ‘விடுதலை’ 11-12-1952

இப்படி பெரியார் சிந்தனையிலும் செயலிலும் கடும் உழைப்பைச் செலுத்தியதன் பலனை, இன்று நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். இன்று அனைவருக்கும் கல்வி என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவதில் தமிழகப் பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதன்மூலம் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்துவருகிறார்கள். இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தீண்டாமைக் கொடுமை சட்டரீதியாக தடை செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x