Last Updated : 28 May, 2019 11:25 AM

Published : 28 May 2019 11:25 AM
Last Updated : 28 May 2019 11:25 AM

தொடக்கம் இனிதாகட்டும் 01: பள்ளித் திறப்புக்குத் தயாராவோம்!

தேர்தல் முடிவுகள் நாட்டைப் பரபரக்க வைத்ததுபோல பள்ளித் திறப்பை முன்னிட்டு வீடுதோறும் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது. நீண்ட கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்புவதில் மாணவர்களும் பெற்றோரும் மும்முரமாக இருப்பார்கள்.

தொடக்கம் இனிமையாக அமைவது அடுத்தடுத்த இலக்குகளை அடைய உதவும் அல்லவா? பள்ளித் திறப்பை முன்னிட்டு மாணவர்களைத் தயார்படுத்துவதில் ஒளிந்திருக்கும் பல்வேறு சிக்கல்களை அறிந்துகொண்டு, அவற்றை முறையாகக் களையத் தயாராவோம்.

வார நாட்களில் பலராலும் வெறுக்கப்படும் நாளாகத் திங்கட்கிழமை இருக்கிறது. சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து அலுவலகம் திரும்பும் பெரியவர்களின் மனநிலை இதுவென்றால், கொண்டாட்டமும் குதூகலமுமாகக் கழித்த கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்குச் செல்வதில் மாணவர்களிடம் சுணக்கம் தென்படுவதும் இயல்பானதே.

இந்தத் தயக்கத்தைக் களையப் பள்ளி திறப்பதற்குக் குறைந்தது ஒரு வாரம் முன்பிருந்தே குழந்தைகள் மத்தியில் பள்ளி தொடர்பான நினைவூட்டலை நேர்மறையாகத் தொடங்கலாம். உதாரணமாக, புதிய பை, சீருடைகள், எழுது பொருட்களை வாங்கும் வேலைகளில் அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். மனதளவில் அவர்கள் மெல்லப் பள்ளிக்குத் திரும்பத் தொடங்குவார்கள்.

உடல் ரீதியிலான தயக்கங்கள்

மாணவர்களின் வயது, தனித்தன்மை, சூழலைப் பொறுத்து அவர்கள் பள்ளிக்குத் திரும்பும் மனநிலை அமைந்திருக்கும்.பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவதை எளிதாக எடுத்துக்கொள்வார்கள். உடல்,

மனம், சூழல் சார்ந்த பிரச்சினைகளால் பள்ளிக்குச் செல்ல சிலர் தயக்கம் காட்டுவார்கள். இதில் உடல் சார்ந்த காரணங்கள் கோடையுடன் தொடர்புடையதாக இருக்கும். 10-15 வயதுகு உட்பட்ட அதிகம் வெளியில் சென்று விளையாடுபவர்களில் சிலருக்கு வெயில் தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் மறைந்திருக்கும். விடுமுறை, ஓய்வு காரணமாக அவற்றை இதுவரை வெளிப்படுத்தி இருக்க மாட்டார்கள்.

பள்ளித் திறப்பு என்றதும் உடல் சோர்ந்து தயக்கத்துடன் தென்படுவார்கள். அம்மாதிரியான குழந்தைகளுக்கு அம்மை, கண் அழற்சி உள்ளிட்ட உடல் பாதிப்புகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்து உறுதிசெய்வது நல்லது. தொடர் மருத்துவப் பராமரிப்பில் ஏற்கெனவே மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் மாணவர்களாக இருந்தால், பள்ளித் திறப்புக்கு முன்பாக உரிய மருத்துவரிடம் அழைத்துச் சென்று முழுமையாகப் பரிசோதித்துத் தேவையான ஆலோசனைகள், புதிய மருந்துகளைப் பெறுவது நல்லது.

மனம், சூழல் சார்ந்த தடுமாற்றங்கள்

ஊர் மாறுவது, பள்ளியை மாற்றுவது, மாநில - மத்தியப் பாடத்திட்டங்களுக்கு இடையே மாறுவது போன்றவையும் அதையொட்டிய பெற்றோரின் அதிகப்படியான அழுத்தங்களும் மாணவர்களைப் பாதிக்கக்கூடும். விடுதியில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் புதிய தனிமையை எதிர்கொள்வார்கள். இவர்களுக்கு ‘ஹோம் சிக்னஸ்’ ஏற்படுவது இயல்பு. உரிய அரவணைப்பு கிடைத்தால் இந்தத் தொடக்கத் தடுமாற்றங்கள் விரைவில் அகன்றுவிடும்.

“பள்ளித் திறப்பை முன்னிட்டு ஏற்படும் பதற்றத்தைப் படிப்படியாகக் குறைப்பது நல்லது. இதற்குப் பள்ளித் திறப்பைக் குடும்பத்தினர் ஒரு கொண்டாட்டமாக வரவேற்கத் தொடங்குவது உதவும்” என்கிறார் தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மாணவருக்கான உளவியல் ஆலோசகர் என். ரஹ்மான் கான்.

இதன்காரணமாக பள்ளித் திறப்புக்கான ஆயத்தங்கள் அனைத்திலும் மாணவரைச் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக எழுதுபொருட்கள் வாங்குவதில் அவர்களது விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தரலாம். புதிய வகுப்பு, புதிய பாடங்கள் தொடர்பாக ஏதேனும் அச்சம் தென்பட்டால், சீனியர் மாணவர்கள், விருப்பமான ஆசிரியர்களிடம் உரையாட வாய்ப்பை உருவாக்கித் தரலாம்.

பள்ளிக்கு ஒருமுறை ஜாலியாகச் சென்று சுற்றிப் பார்க்க வைக்கலாம். மூச்சுப் பயிற்சி, உடலைத் தளர்த்தும் பயிற்சி, பள்ளிக்குச் செல்வது தொடர்பான நேர்மறை விஷயங்களைக் கற்பனை செய்தல் போன்றவையும் மனத்தடைகளைக் களைய மாணவர்களுக்கு உதவும்.

பள்ளித் திறப்பை முன்னிட்டுப் பெரியவர்கள் பதற்றம் அடைவது, படிப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளைத் தொடக்கத்திலேயே திணிப்பது போன்றவை மாணவர்கள் பள்ளி செல்வதை மேலும் கசப்பாக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

 

மாணவர்கள் கையில் ஸ்மார்ட் ஃபோன்      

பள்ளித்-திறப்புக்குத்-தயாராவோம் 

புதிய பாடத்திட்டத்தின்கீழ் பாடநூலில் ஆங்காங்கே பாடம் சார்ந்த வீடியோ விவரங்களை ‘க்யூ.ஆர் கோட்’ மூலமாக அணுகும் வசதி தரப்பட்டுள்ளது. வரவேற்புக்குரிய இந்தத் தொழில்நுட்ப வசதியைப் பள்ளி மாணவர்கள் முறையாக அணுகப் பெற்றோருக்குச் சில யோசனைகள்:

மாணவர்களுக்கு எனத் தனிப்பட்ட ஸ்மார்ட் ஃபோன் ஏற்பாடு செய்து தரலாம். பயன்பாட்டில் உள்ள பழைய ஸ்மார்ட் ஃபோனை மாணவர்களுக்கு வழங்கும் முன்னர் அதன் தகவல்கள், கோப்புகள், தேடல் வரலாறு உள்ளிட்ட அனைத்தையும் அழித்த பிறகு தருவது நல்லது.

அல்லது பெற்றோர் பயன்படுத்தும் ஸ்மார்ட் ஃபோனையே அவ்வப்போது தருவதாக இருந்தால், மாணவர் பயன்பாட்டுக்கு எனத் தனியான மின்னஞ்சல் கணக்கைத் தொடங்கி அவர்களை அனுமதிக்கலாம்.

யூ டியூப் பரிந்துரைகள் பலவும் முந்தைய நமது தேடல், பார்வைகளை முன்னிட்டு அதன் முகப்பில் வழங்கப்படுவது வழக்கம். இந்த அநாவசியப் பரிந்துரைகளால் மாணவர்களின் கவனம் சிதறலாம். எனவே தனிக் கணக்கு ஆரம்பிப்பதுடன், செட்டிங்ஸில் Restriction Mode என்பதை ON செய்வதும் உதவும்.

Diksha, QR Code Reader, Cam Scanner உள்ளிட்ட பல்வேறு ஆண்டிராய்டு செயலிகளைத் தரவிறக்கி அவற்றின் வாயிலாகக் கற்றலை விரிவாக்குவதும் மாணவர்களுக்கு அவசியமாகிறது.

இவற்றைப் பயன்படுத்தும்போது தேவையற்ற செயலிகள் குறித்த வயதுக்கு ஒவ்வாத பரிந்துரைகள் குறுக்கிடவும் வாய்ப்புண்டு. அவற்றைத் தவிர்க்கச் செயலிகளைத் தரவிறக்கும் Play Store செட்டிங்ஸில் சென்று பயனர் வயது வரம்பை 7+ அல்லது 12+ என்பதாக நிர்ணயித்துக்கொள்ளலாம்.

அலைபேசியின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டையும், மாணவருக்குத் தேவையில்லாத கோப்புகள், செயலிகள் போன்றவற்றை App Lock போன்ற செயலிகள் உதவியுடன் பாஸ்வேர்டு கொண்டு கட்டுப்படுத்துவதும் உதவும். சிறுவர்களின் யூ டியூப் பயன்பாட்டுக்கு ’YouTube Kids’ என்ற தனிச் செயலியையும் பயன்படுத்தலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x