Last Updated : 11 Jun, 2019 12:33 PM

 

Published : 11 Jun 2019 12:33 PM
Last Updated : 11 Jun 2019 12:33 PM

கரும்பலகைக்கு அப்பால்... 23 - எழுத்தென்ற ஓவியம்

பள்ளி திறந்தாச்சு. கல்வியாண்டின் தொடக்கத்தைக் கல்விப் புத்தாண்டு என்று கொண்டாடுவது வழக்கம். நாம் எவ்வளவு கொண்டாட்டமான மனநிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். மாணவர்கள் என்ன எதிர்பார்ப்புகளோடு பள்ளிக்கு வருகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பதே முக்கியம் என்று தோன்றியது. புதிய இடம், புதிய முகங்களைப் பார்க்கும் ஆர்வம் மாணவர்களின் முகங்களில் மின்னியது.

“தம்பிகளா, ஒன்பதாம் வகுப்புப் பாடப் புத்தகங்கள் கொடுத்தாச்சு. புத்தகத்தை வீட்டில் போய்த் திருப்பிப் பாருங்கள். படங்களைப் பாருங்கள். எதையாவது வாசிக்க வேண்டும் என்று தோன்றினால் வாசித்துப் பாருங்கள். இந்த வாரம் முழுவதும் நிறையப் பேசலாம். அவ்வப்போது காணொலிக் காட்சி அறைக்குச் சென்று படங்கள் பார்க்கலாம்” என்றேன்.

நேரம் கிடைக்கும்போது கதை

இரண்டாம் நாள் மொழி குறித்து உரையாடலைத் தொடங்கினேன்.

“தம்பிகளா, மொழி என்றால் என்ன?”

“லாங்குவேஜ்” என்று வந்த பதிலைத் தொடர்ந்து சிரிப்பலை.

“பதில் சரிதான். நீங்க பெரிய பசங்க. இந்த வயசுல இன்னும் கொஞ்சம் யோசிக்கலாம். மொழி என்றால் என்ன, ஏன் மொழியைக் கண்டுபிடிச்சாங்க, அதோட தேவை என்ன என்பது போன்ற கேள்விகளுக்குப் பதில் தேடுவோமா!” என்றேன்.

ஒரு செய்தியைச் சொல்வது.

நான் நினைப்பதை அடுத்தவருக்குப் புரியும்படி சொல்வது. அப்படிச் சொல்லும் மொழி கேட்பவருக்கும் தெரிஞ்சிருக்கணும்.

எழுத்துகளும் மொழிதான் என்று ஒரு பதில். பாடுவது, கவிதை, இசை, கதை எல்லாமே மொழிதான் என்று மற்றொரு பதில்.

“ஆமாம். பேச்சைத் தொடர்ந்து எழுத்துகள் உருவாயின. பேச்சில் இருந்த படைப்புகள் எழுத்து வடிவில் மாறின. எப்படி எழுத்துகளைக் கண்டுபிடித்தார்கள்?” என்றேன்.

ஓவியம் மூலம் என்று ஒரு மாணவன் சொன்னான்.

“அட, இதைக் கேட்டதும் எனக்கு ‘வேள்பாரி’ நாவல் ஞாபகம் வருது. கபிலர் என்ற புலவருக்கும் பழங்குடி இளைஞனுக்கும் ஓர் உரையாடல். அவருக்கு எழுத்துகளைப் பற்றித் தெரியாது. எழுத்து என்றால் என்ன என்று கேட்கிறார். ஒலியை ஓவியமாகத் தீட்டுவதே எழுத்து என்று கபிலர் சொல்வதாகக் கதையில் எழுதிருக்காங்க.

முதலில் ஒலி வடிவமாக இருந்ததை வரி வடிவமாக எழுதுவது எழுத்து என்று இலக்கணம் சொல்லுது. நமக்கு நல்லா தெரிஞ்ச மொழி தமிழ். அதில் பேச எல்லோருக்கும் தெரியும். நாம் வாசிக்கவும் எழுதவும் பழகப்போகிறோம்” என்றேன்.

அடுத்த பாடவேளையில் கதைப் புத்தகங்கள் கொண்ட பெட்டியோடு வகுப்பறைக்குச் சென்றேன். ஆளுக்கொரு புத்தகத்தைக் கொடுத்து, “தம்பிகளா, இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் கதையை வாசிங்க. சின்னப் புத்தகம்தான். வாசித்து முடித்துவிட்டால் மற்றவருடன் மாற்றிக்கொள்ளுங்கள். இன்று பள்ளி முடியும்வரை முடிந்த அளவுக்குக் கதைகளை வாசிங்க. வாசிக்கத் தெரியாதவங்க படம் பாருங்க. ஒவ்வொரு எழுத்தா தெரியுதான்னு வாசிக்க முயற்சி செய்யுங்க” என்றேன்.

‘எழுதத் தெரியாதது நோயா?’

மறுநாள் காணொலிக் காட்சி அறையில் Scribbling குறும்படத்தைத் திரையிட்டேன். எழுதும் திறன் குறைவுடைய குழந்தைக்கு அவளுடைய தாய் எவ்வாறு எழுதச் சொல்லித்தருகிறார் என்பதே படம்.

படத்தைப் பார்த்ததும், “எழுதத் தெரியாதது ஒரு நோயா சார்?” என்று  ஒரு கேள்வி எழுந்தது.

நோய் இல்லை. அது ஒரு குறைபாடு. பயிற்சியால் எழுதிப் பழகிவிட முடியும்.  “சிலருக்கு ஏன் எழுதத் தெரியல?” என்று கேட்டேன்.

எழுத்து தெரியல என்ற பதிலைத் தொடர்ந்து, சொல்லித் தந்தா எழுதலாம் என்று ஒரு குரல் எழுந்தது.

“சரிதான். சொல்லித் தர்றேன். எழுத்து தெரியாமல் வாசிக்கத் தெரியாமல் நமக்கு எழுதத் தெரியாது என்று நாமே முடிவு செய்து எழுதாமலே இருந்துடுறோம். இவை எல்லாமே  பழகினா வந்துடும்னு எனக்குத் தோணுது. நாளை வரும்போது உங்களைப் பற்றிய சிறு குறிப்பை எழுதிட்டு வாங்க. உங்களைப் பற்றிய அறிமுகம், உங்களோட திறன்கள், ஆசைகள், கேள்விகள் என்று எது வேணாலும் எழுதலாம்.

என்ன கொம்பு வரும்? துணைக்கால் வருமா வராதா? எந்த எழுத்து என்ற சந்தேகம் வரும்போது, லேசா யோசிங்க. எது சரின்னு தோணுதோ அதை எழுதுங்க. நிச்சயமாக நீ சரி என்று எழுதியதைத் தவறென்று திருத்த மாட்டேன். மற்றவர்களுக்கும் வாசித்துக் காட்டாமல் ரகசியமாக வைத்துக்கொள்வேன் என்றதும் சில முகங்கள் மலர்ந்தன.

கல்விக் காலத்துக்குப் பிறகு எப்போதோதான் எழுதுகிறோம். ஆனால், படிக்கும் காலத்தின் பெரும்பகுதி பார்த்தும், மனப்பாடம் செய்தும் எழுதுவதிலேயே கழிகிறது. எழுத்தைச் சடங்கிலிருந்து மீட்டு படைப்பாற்றலாக மாற்றும் வழி களைத்தானே யோசிக்க வேண்டும்!

கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x