Last Updated : 18 Jun, 2019 10:02 AM

 

Published : 18 Jun 2019 10:02 AM
Last Updated : 18 Jun 2019 10:02 AM

பொறியியல் கலந்தாய்வு: எப்படித் தேர்ந்தெடுப்பது?

இந்தியாவின் மிக முக்கிய நிகழ்வுகளான தொலைத்தொடர்புப் புரட்சி, அணுசக்திச் சோதனைகள், மெட்ரோ ரயில் சாதனைகள், அக்னி-பிரம்மோஸ் ஏவுகணைகள், சந்திரயான், மங்கள்யான் ஆகியவை பொறியியல் துறை சார்ந்தவையே.

இவற்றோடு தொடர்புடைய அப்துல்கலாம் உள்ளிட்ட ஆளுமைகளும் அடிப்படையில் பொறியாளர்களே. நமது அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் பேரளவு நுழைந்துவிட்ட இந்த நூற்றாண்டில், பொறியாளர்களின் சேவை மனிதகுலத்துக்குப் பெரிதும் தேவை.

அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றத்தின் (AICTE) 2018-19 புள்ளிவிவரப்படி, இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்வி நிலையங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. எனவே, பொறியியல் கல்வி வாய்ப்புகள் தமிழகத்தில் மிக

அதிகம். இதனால் எந்தக் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சற்றுக் கூடுதல் குழப்பம் ஏற்படலாம். சரி, எப்படித் தேர்ந்தெடுப்பது?

எளிமையான தெரிவு

கல்லூரிக்கான தேடலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளைச் சேர்ந்த மூன்று கல்லூரிகள் சுலபமான தெரிவுகள். அடுத்த நிலையில் கோயம்புத்தூரிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம். பிறகு அரசு அல்லது அரசு உதவிபெறும் மற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒன்றைப் பரிசீலிக்கலாம். (தமிழகத்தில் 10 அரசுப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன).

அடுத்தகட்டமாகப் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 13 உறுப்புக் கல்லூரிகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இவையும் கைமீறினால், தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒன்றைத் தேர்வுசெய்யலாம் (இக்கல்லூரிகளின் பட்டியல் அண்ணா பல்கலைக்கழக வலைத்தளத்தில் கிடைக்கும்).

எந்தக் கல்லூரி?

மேலே குறிப்பிட்ட கல்லூரிகளில் கிடைக்காவிட்டால், அடுத்த தளம் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள். அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் சுயநிதியோ நிகர்நிலையோ எதிலும் படிக்கலாம்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி வசதிகளும் அதற்கான கட்டமைப்புகளும் இருக்கும். பெரும்பாலும் இவ்வசதிகள் பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்ட மாணவர்களுக்குத்தான் அதிகம் பயன்படும். எனவே, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில், இளநிலைப் பொறியியல் பயில்வதில் எவ்விதத் தயக்கமும் தேவையில்லை.

தமிழகத்தில் ஏறக்குறைய 450 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் இருக்கும் குளிரூட்டப்பட்ட வகுப்பறையோ கல்லூரிப் பேருந்தோ படிப்பை மேம்படுத்தப் போவதில்லை. கற்றுக்கொடுக்கப்படும் பொறியியல் படிப்பின் தரம்தான் மிக முக்கியம். தரத்தை எப்படி ஆராய்வது?

அண்ணா பல்கலைக்கழகத் தரவரிசை

தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்களின் சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. (https://aucoe.annauniv.edu/passpercentndrnkdetails.htm)

இந்தப் பட்டியல் தேர்வு வெற்றியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. வெற்றிபெற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. வேலைவாய்ப்பு, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள், கல்லூரியின் கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றின் அடிப்படையில் கல்லூரிகளைத் தரம் பிரிப்பது எப்படி?

தேசியத் தரப்பட்டியல்

கற்பித்தல், கற்றல், ஆராய்ச்சி, தொழில்ரீதியான நடைமுறைகள், வேலைவாய்ப்பு, கல்லூரியைக் குறித்த பொதுவான கருத்து உள்ளிட்ட பல தரவுகளின் அடிப்படையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (‘நிர்ஃப்’) என்ற தரவரிசையை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

(https://www.nirfindia.org/2019/EngineeringRanking.html). இந்த ஆண்டில் தெரிவு செய்யப்பட்டிருக்கிற 200 இந்தியப் பொறியியல் கல்வி நிறுவனங்களில், 40 கல்வி நிலையங்கள் தமிழகத்தில் உள்ளன.

பொறியியல்-கலந்தாய்வு

அங்கீகாரம்

தரவரிசைப் பட்டியலைத் தாண்டி, கல்வி நிலையங்களுக்கான தர அங்கீகாரமும் உண்டு. பல்கலைக்கழக மானியக் குழுவின்கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான, தேசிய மதிப்பீடு, அங்கீகார அவை (NAAC) கல்வி நிலையங்களுக்குத் தர அங்கீகாரத்தை வழங்குகிறது.

பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, ஆராய்ச்சி, புதுமைகள், கட்டமைப்பு வசதி, மாணவர்களின் மேம்பாடு, கல்லூரி நிர்வாகத்திறன், நிறுவன மதிப்பீடுகள் உள்ளிட்ட பன்முக அம்சங்களை நேரடியாக ஆய்வுசெய்து இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அங்கீகாரத் தரநிலையைப் பார்த்தும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம் (‘நாக்’ வரிசை பார்க்க: https://assessmentonline.naac.gov.in/public/index.php/hei_dashboard).

தேசிய அங்கீகாரக் குழு

அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி மன்றத்தால் உருவாக்கப்பட்டுப் பின்னாளில் தன்னாட்சி அமைப்பாக மாறிய தேசிய அங்கீகார வாரியத்தின் (The National Board of Accreditation - NBA) அங்கீகாரமும் குறிப்பிடத்தக்கது. என்.பி.ஏ. அங்கீகாரம் படிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, ஒட்டுமொத்தக் கல்லூரிக்கு அல்ல.

உதாரணமாக, ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திர, மின், மின்னணுப் பாடப் பிரிவுகள் இருந்தால், என்.பி.ஏ. அங்கீகாரம் ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் பெறப்பட வேண்டும். நீங்கள் விரும்பும் பாடப் பிரிவுக்கு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை நுட்பமாகக் கவனித்துக் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (என்.பி.ஏ விவரம் அறிய: http://www.nbaind.org/accreditation-status.aspx).

பட்டியலில் இல்லாத கல்லூரிகள்

தேசியத் தரவரிசைப் பட்டியலிலும் அங்கீகாரப் பட்டியலிலும் இடம்பெற கல்லூரிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க வேண்டும். புதிதாகத் தொடங்கப்பட்ட கல்லூரிகள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பின்னரே விண்ணப்பிக்க முடியும். எனவே, இந்தப் பட்டியல்களில் இடம்பெறாத கல்லூரிகள் பல உண்டு.

இந்தக் கல்லூரிகளைப் பற்றி இணையத்தில் ஆராய்ந்தும், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்களோடு கலந்துரையாடியும் முடிவெடுக்கலாம். தேர்வு செய்த கல்லூரிகளை நேரில் ஒரு முறை பார்த்துவிட்டு, இறுதி முடிவுக்கு வருவது நல்லது.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எதைத் தேர்வு செய்வது? ‘நாக்’, ‘என்.பி.ஏ.’ அங்கீகாரங்களைப் பயன்படுத்திப் பகுத்தறியலாம். ‘நிர்ஃப்’ தரவரிசைப் பட்டியலைப் பார்வையிட்டால் தெளிவு கிடைக்கும்.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ‘புதுமை, தொழில்முனைவு மேம்பாடு’ அடிப்படையில் அடல் தரவரிசையை வெளியிட்டுள்ளது (Atal Ranking of Institutions on Innovation Achievements - ARIIA). இந்த வகையில் இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மூன்று பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் உள்ளன (https://www.ariia.gov.in/Ranking2019.html).

மாணவர் ‘சேர்க்கை’

குழந்தைகளின் மீதான பாசத்தைக் கல்விக்காக வீண்செலவு செய்வதில் பெற்றோர் காட்ட வேண்டியதில்லை. எந்தக் கல்லூரியில் குறைந்த செலவில் தரமான கல்வி கிடைக்கிறதோ, அந்தக் கல்லூரியைத் தேர்வு செய்வதே சாலச்சிறந்தது. குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பை உணர்த்துங்கள். கல்விக்கடன் பெறுவதாக இருந்தால் வாரிசுகளை வங்கிக்கு அழைத்துச் செல்லுங்கள்.

கல்லூரியில் மாணவர் சேர்க்கை முடிந்ததும் கடமை முடிந்ததெனப் பெற்றோர் ஒதுங்கிவிடக் கூடாது. பள்ளிக்கூடத்திலிருந்து கல்லூரிக்குச் செல்லும் குழந்தைகள் அங்கே கிடைக்கும் திடீர் சுதந்திரத்தில் வழிமாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடுத்த நான்காண்டுகளில் நேரத்தை அவர்கள் எப்படிச் செலவழிக்கிறார்கள் என்பதே, அவர்களின் எதிர்கால வெளிச்சத்தைத் தீர்மானிக்கும். கலந்தாய்வு சிறக்கட்டும்!

ஐ.எஸ்.ஓ. கல்வித் தரம் அல்ல

பல பொறியியல் கல்வி நிறுவனங்கள் ஊடகங்களில் வசீகர விளம்பரங்களை வெளியிடுகின்றன. ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்று என்பது நகைக்கடைகள், ரயில் நிலையம், காவல் நிலையம் என எல்லா நிறுவனங்களுக்குமான பொதுவான தர மேலாண்மைச் சான்று. எனவே, இச்சான்றைப் பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரத்துக்கு உத்தரவாதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

கட்டுரையாளர்,

இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி - மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானி.

தொடர்புக்கு: dillibabudrdo@gmail.comஐ.எஸ்.ஓ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x