

கல்வியாண்டின் தொடக்க வாரங்களில் பாடங்களை மெல்லத் தொடங்குவதே வழக்கம். அதிலும் நடப்பாண்டு புதிய பாடப் புத்தகங்களின் தாமதத்தால் வகுப்புகளில் பாடங்கள் தொடங்குவது தாமதமாகி வருகிறது. இந்த ஆரம்ப அவகாசத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க எளிய யோசனைகள்.
தானே கற்கலாம்
பாடங்களை ஆசிரியர்கள் நடத்திய பிறகுதான் படிப்போம் என மாணவர்கள் காத்திருக்கத் தேவையில்லை. கையில் பாடப் புத்தகம் கிடைத்ததும் அதை ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்து விரும்பிய தலைப்புகளை வாசித்துப் பழகலாம். புதிய பாடத்திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட பாடங்களில் பெரும்பகுதி ஆசிரியர் உதவியுன்றி மாணவர்கள் தாமே கற்கும் வகையில் தயாராகி இருப்பதும் இதற்கு உதவும்.
மேலும் கீழ் வகுப்புகளின் அடிப்படையான பாடக்கருத்துகள், இலக்கணம், கணித சூத்திரங்கள், வாய்ப்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள், விதிகள் எனத் திருப்புதல் மேற்கொள்ளலாம். ஆங்கிலத்திலும் தமிழிலும் தினசரி ஓரிரு பக்கங்கள் எழுதுதல், வாசித்தல் நல்லது.
ஆசிரியர் அபிமானத்தை வெல்லலாம்
மாணவர்கள் குழு விவாதத்தில் ஈடுபடலாம், ஒன்றுகூடி வாசித்துப் பழகலாம். இதுபோன்ற முன்கூட்டிய தயாரிப்புகளால், வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை எளிமையாகவும் விரைவாகவும் புரிந்துகொள்ள முடியும். மேலும், ஐயங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு அவற்றை ஆசிரியரிடம் தெளிவு படுத்திக்கொள்ளவும் உதவியாகும். இவையனைத்தும் மாணவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், புதிய ஆசிரியரின் அபிமானத்தைத் தொடக்கத்திலேயே வெல்லவும் உதவும்.
‘செயலி’ வழிக் கற்றல்
குழந்தைகள் செல்ஃபோனில் செயலிகள் நிறுவுவதில் பெரியவர்களின் அனுமதியும் கண்காணிப்பும் அவசியம். அதேநேரத்தில் மேற்கண்ட முன் தயாரிப்புகளை ஸ்மார்ட்ஃபோன் வாயிலாகவும் தொடரலாம். “பாடம் தொடர்பான யூடியூப் வீடியோக்கள், செயலிகள் பல உள்ளன. Maths Tricks என்ற தலைப்பில் உள்ளிட்டுத் தேடினால் கணிதப் பாடக்கருத்துகள் தொடர்பான ஏராளமான செயலிகள் கிடைக்கும். அவற்றிலிருந்து தனக்கானதை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
மேலும், அறிவியலுக்கு Science facts என்ற தலைப்பிலும், வரலாற்றுக்கு Indian map, world map என்று தேடிக் கண்டடையலாம். ஸ்மார்ட்ஃபோனில் நிறுவப்பட்டிருக்கும் கூகுள் மேப்பில் தேசங்கள், மாநிலங்களின் தலைநகரங்கள் உள்ளிட்டவற்றைத் தேடுவதும் பாட ஆர்வத்தை வளர்க்க உதவும். மற்றபடி தேர்வு நோக்கில் படிப்பதற்கும், தயாராவதற்கும் பாட நூல்களை மட்டுமே வழிகாட்டியாகப் பின்பற்றுவது அவசியம்” என்கிறார் பத்தாம் வகுப்பு ஆசிரியர் சக்திவேல்.
மேல்நிலைப் பாடத் தேர்வில் கவனம்
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மேல்நிலை வகுப்பு சேர்கையில் உரிய பாடப்பிரிவைத் தேர்வு செய்வதில் அதிகக் கவனம் தேவை. இதற்கு பிளஸ் 2-க்குப் பிறகான உயர்கல்வி வாய்ப்புகளை ஓரளவேணும் அறிந்துகொள்வது அவசியம். உதாரணத்துக்கு, உயர்கல்வி வாய்ப்புகளில் மருத்துவம், பொறியியலுக்கு அப்பால் பி.எஸ்சி. அக்ரி சேர்ந்து படிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். அம்மாதிரியானவர்கள் பிளஸ் 1-லேயே நேரிடையாக அக்ரி பிரிவில் சேர்ந்தால், உயிரி-கணிதம், அறிவியல் பிரிவுகளில் கிடைப்பதைவிட அதிக மதிப்பெண்களைப் பெறுவது எளிதாகும்” என்கிறார் பிளஸ் 2 ஆசிரியரான ப்ரீவா.
மதிப்பிழக்காத மதிப்பெண்
ஆசிரியர் ப்ரீவா மேலும் கூறுகையில், “நீட் போன்ற பொது நுழைவுத் தேர்வுகள் வந்த பிறகு பள்ளி இறுதித் தேர்வில் ஓரளவு மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்தால் போதும் என்ற அலட்சியம் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மத்தியில் பரவலாகத் தென்படுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பாகத் தயாராவது பின்னாளில் பலவிதப் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகளுக்கும் உதவும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும், பொதுநுழைவுத் தேர்வுகளின் 80 சதவீத வினாக்கள் மேல்நிலை வகுப்புகளின் பாடப்பகுதியில் இருந்தே கேட்கப்படுகின்றன. இதனுடன் பிளஸ் 2 மாணவர்கள் அவகாசம் கிடைக்கும்போதெல்லாம் பிளஸ் 1 புத்தகங்களை அவ்வப்போது திருப்புதல் செய்வது மேற்படி நுழைவுத் தேர்வுகளுக்கான தயாரிப்பாகவும் அமையும்” என்றார்.
சேகரிப்புகளைச் செய்யலாம்
பிளஸ் 2 செல்லும் மாணவர்கள் கல்வியாண்டின் இடையிலேயே பலவிதமான நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும். கல்வியாண்டின் தொடக்கத்திலேயே அவை குறித்து முன்கூட்டியே திட்டமிடுவதும் உதவும். மேல்நிலை வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ‘செயல்முறைத் திட்டம்’ வகையிலான கற்றல்-கற்பித்தலுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தருவதால், மாதிரிகள் சேகரிப்பு, ஹெர்பாரியம், படங்கள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே சேகரிப்பதும் உதவிகரமாக அமையும்.