Published : 25 Jun 2019 10:35 AM
Last Updated : 25 Jun 2019 10:35 AM

தொழிற்திறனை இழந்துவிட்டதா பொறியியல் கல்வி?

ஏப்ரல், 2019-ல் பொறியியல் துறையில் பட்டம் பெற்று கல்லூரிகளிலிருந்து வெளி யேறும் மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்குத் திறன்வளர்ப்புத் திட்டமொன்றை மத்திய மனிதவள அமைச்சகம் தொடங்கியுள்ளது.

தேசிய இளைஞர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு ‘ஷிரியாஸ்’ (உயர்கல்வி படித்த இளைஞர்களுக் கான தொழிற் பயிற்சி, தொழிற்திறன் திட்டம்) என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வரும் மாணவர்களின் முதன்மையான விருப்பங்களில் ஒன்றாகப் பொறியியல் கல்வி இன்றும் உள்ளது. இருந்தபோதும், பொறியியல் துறையில் பட்டம்பெற்று வெளியேறும் மாணவர்களின் வேலைவாய்ப்பு என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. கல்லூரிப் படிப்பு அவர்களுக்குப் பட்டங்களை அளித்திருக்கிறதே தவிர, தொழிற் திறனை வளர்த்தெடுக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.

கதை வடிவில் குளறுபடிகள்

தேசிய அளவில் ஆண்டுதோறும் அதிக அளவில் பொறியியல் பட்டதாரி களை உருவாக்கும் தமிழகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டில் குளறுபடிகள், போதிய ஆசிரியர் இல்லாததால் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட பொறியியல் கல்லூரி களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்காதது என்று சமீபத்திய செய்திகள் பொறியியல் கல்வித் துறையில் பல்கலைக்கழகங்கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கின்றன என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

இந்த அலட்சியங்கள் இன்றோ நேற்றோ உருவானதல்ல. தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பரவ ஆரம்பித்த 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கேடான சூழல் வளர்த்தெடுக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டு கிறது த.ஜெ.பிரபு எழுதி யுள்ள ‘விடியலை நோக்கி முடிவற்ற பயணம்’ நாவல்.

பொறியியல் பேராசிரியரான த.ஜெ.பிரபு, மெக்கானிக் கல் டிசைன் குறித்த பாடநூல்களால் அத்துறை சார்ந்த மாணவர்களிடையே பிரபலமானவர். எழுபதுகளில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், இளம் பொறியாளர்கள், இளம் ஆராய்ச்சி யாளர்களை மையப்படுத்தி அவர் எழுதிய இந்த நாவல், பொறியியல் கல்வியின் போதாமைகளையும் அனைவரும் அறிந்தே அனுமதிக்கும் அறிவுத் திருட்டையும் படம்பிடித்துக்காட்டுகிறது.

பொறியியல் மாணவர்கள் இறுதியாண்டில், ஒரு புராஜெக்ட் செய்ய வேண்டும் என்பது தேர்வுமுறையின் ஒரு பகுதியாக இருக்கிறது. மாணவர்கள் தங்களது பாடநூல்களிலிருந்து பெற்ற அறிவைச் சோதித்துப் பார்க்க வேண்டும், அதிலிருந்து நடை முறைக்குச் சாத்தியமான ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் புராஜெக்ட்டின் நோக்கம். ஆனால், நடைமுறை அதற்கு முற்றிலும் நேரெதிராகவே இருந்துவருகிறது.

வெறும் பத்து சதவீத மாணவர் களே தங்களது புராஜெக்ட்களைத் தாங்களே உருவாக்குகிறார்கள். பெரும்பகுதியினர் அவற்றை விலைகொடுத்து வாங்குகிறார்கள் என்பதுதான் உண்மை.

பொறியியல் மாணவர்களுக்கு புராஜெக்ட் செய்து தருவது என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு தொழில்துறையைப் போல இயங்கிவருகிறது. புராஜெக்ட்டுக்குத் தகுந்தபடி பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இவை விலை கொடுத்துத்தான் வாங்கப்படுகின்றன என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும்கூட, பேராசிரியர்களும் அதை அனுமதிக்கவே செய்கிறார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் மற்ற கல்லூரிப் பேராசிரியர்களும் அதைக் கண்டுகொள்வதில்லை.

இவ்வாறு அடுத்தவரின் அறிவில் பட்டம்பெறும் பொறியாளர்கள், புதிதாக என்ன கண்டுபிடிக்க முடியும்? ஐம்பதாண்டுகளுக்கு முன்பே இதற்கு விதைபோடப்பட்டுவிட்டது. எப்போது அதைச் சரிசெய்யப் போகிறோம் என்பதுதான் த.ஜெ.பிரபு எழுப்பும் கேள்வி.

தரத்தை மேம்படுத்துவது எப்போது?

பொறியியல் படிப்பின் இத்தகைய போதாமைகளும் தவறுகளும்தாம் படிப்பை முடித்து வெளியே வரும் மாணவர்கள் எதிர்கொள்கிற வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. பொறியியல் படிப்பவர்களுக்கு இன்னமும் வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால், அவர்களில் பெரும்பாலானவர்கள் டெக்னிக்கல் கிளார்க், மேஸ்திரி வேலைகளைத்தான் பார்க்கிறார்களே அல்லாமல், ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. அதுவும், ஒப்பீட்டளவில் தங்கள் நாட்டுத் தொழிலாளர்களைக் காட்டிலும் நம் நாட்டு பொறியியல் பட்டதாரிகளுக்குக் குறைவான ஊதியத்தையே வெளிநாடுகள் கொடுக்கின்றன.

எந்தவொரு கல்வித் துறையிலும் பட்டம்பெற்று வெளியேறும் மாணவர்கள் அனைவருமே ஆராய்ச்சியாளர்களாக தேவையெதுவும் இல்லைதான். ஆனால், தொழிற்படிப்புகளைப் பொறுத்தவரை அத்துறையில் பணியாற்றுவதற்கான தொழில்திறனைப் பெற்றிருப்பது அவசியத்  தகுதி.

பொறியியல் கல்லூரிகளுக்குத் தரவரிசையை வழங்கும் பல்கலைக்கழகங்கள், அந்தக் கல்லூரிகள், பொறியியல் கல்வியின் அடிப்படைகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை மட்டும் கேள்விக்கு உட்படுத்துவதே இல்லை.

பல்கலைக்கழகங்களை நிர்வகிக்க வேண்டிய மனித வள அமைச்சகமும் இதுவரை இந்த விஷயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தொழில்திறன் பயிற்சித் திட்டங்களும் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளுக்குக்கான ஒரு தீர்வாகத்தான் முன்னெடுக்கப் பட்டிருக்கிறதே தவிர, பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக அல்ல.

கல்வித் தகுதியைப் பெறுவது மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கிவிடாது. தேர்ந்தெடுத்துப் படித்த பாடத்தில் முறையான தேர்ச்சியையும் பெற்றிருக்க வேண்டும். தொழிற்படிப்புகளின் அடிப்படையே அதுதான்.

அதை வெளிப்படையாகத் தவறவிடுகிறபோது, வேலைத் திண்டாட்டத்தைத் திட்டமிட்டு உருவாக்கிய பழியும் களங்கமும் கல்வி நிறுவனங்களையும் அவற்றுக்குச் சான்று தருகிற பல்கலைக்கழகங்களையும் அவற்றை அனுமதிக்கும் அரசையுமே முழுமையாகச் சாரும்.

விடியலை நோக்கி முடிவற்ற பயணம்...

த.ஜெ. பிரபு

வெளியீடு: ஜெ. அனிதா பிரபு

ப்ளாட் 45, வள்ளலார் தெரு, செல்லி நகர், சேலையூர்,

சென்னை-73.

தொலைபேசி: 9840117920

விலை: ரூ.250

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x