Published : 14 May 2019 11:39 AM
Last Updated : 14 May 2019 11:39 AM

பொறியியல் படிப்புகள்: எதைத் தேர்ந்தெடுப்பது?

‘ஒரு கால் இந்தியாவில் மற்றொரு கால் ஏர் இந்தியாவில்’ எனப் புகழ்பெற்ற இந்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிக்கும் மாணவர்களை, அவர்களின் அயல் நாட்டு வாய்ப்புகளுக்காகக் குறிப்பிடுவதுண்டு.

நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அவசியம். எனவே, பொறியியல் படிப்புக்கான தேவையும் வேலைவாய்ப்புகளும் எப்போதும் பசுமையாகவே இருக்கின்றன. தரமான பொறியியல் கல்வியும் போதுமான பயிற்சியும் பெற்ற எந்த மாணவருக்கும் வேலைவாய்ப்பு கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறது.

மருத்துவப் படிப்பைப் பொறுத்த வரை பட்டமேற்படிப்பில்தான் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், பொறியியல் துறையில் இளநிலைப் படிப்பிலேயே பிரிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொறியியல் புரிதல்

பள்ளிக்கூட மாணவர்களுக்குப் பொறியியலைப் பற்றிய புரிதல் இல்லாத சூழலில் தனக்கு உகந்த பொறியியல் பிரிவைத் தேர்ந்தெடுக்க பெரும்பாலானோர் தடுமாறுகிறார்கள்.

மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிகல் என மூன்றே பிரிவுகள் மட்டுமே பொறியியலில் முன்பிருந்தன. இவற்றை ஆயில், சாயில் (மண்), காயில் (மின் கம்பி) எனக் குறிப்பிட்ட காலம் மாறி, இளநிலைப் பொறியியல் படிப்பில் ஏறக்குறைய 50 பொறியியல் பிரிவுகள் உள்ளன. ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. எதைத் தேர்ந்தெடுப்பது?

எது உங்களுக்குச் சிறுவயது முதல் கனவாக இருக்கிறதோ எத்துறையில் சாதிக்க வேண்டுமென்ற தீராத வேட்கை உள்ளதோ அந்தத் துறையைக் கண்ணை மூடிக்கொண்டு தேர்ந்தெடுக்கலாம். ஏனெனில், கனவும் உத்வேகமும் இருப்ப வர்கள் எத்துறையிலும் ஜெயிக்கலாம்.

பசுமை மாறா படிப்புகள்

எந்தவிதமான விருப்பு வெறுப்பும் இல்லை. என்ன செய்வது?

ஏற்ற இறக்கம் காணும் பொறியியல் துறையில் இயந்திரப் பொறியியல், மின்னணு, தகவல் தொடர்பியல் ஆகியவை வற்றாத ஜீவ நதிகள். எல்லாக் காலத் திலும் இந்தத் துறைகளுக்கான தேவையும் வேலை வாய்ப்பும் பசுமை மாறாமலேயே இருக் கின்றன.

ராட்டினச் சுழற்சி

சமூகப் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப பொறியியல் துறைகளுக்கான போட்டி மாறுவதுண்டு. கவனிப்பாரற்றிருந்த கட்டுமானப் பொறியியல் இப்போது மெல்ல உச்சம் நோக்கி நகர்கிறது. கூடவே கட்டிடக்கலைப் படிப்பும்.

உச்சத்திலிருந்த கணினிப் பொறி யியல் துறைசார்ந்த படிப்புகள் கீழிறங்கிக்கொண்டிருக்கின்றன. துறைகளைத் தேர்வுசெய்யும்போது இவற்றையும் கருத்தில் கொள்ளுங்கள்.

அடிப்படைப் படிப்பா, சிறப்புப்படிப்பா?

பொறியியல் படிப்புகளில் அடிப்படைப் பிரிவுகளும் உண்டு (Core branches)  சிறப்புப் பிரிவுகளும் உண்டு (Specialisations). உதாரண மாக, இயந்திரப் பொறியியல் ஒரு அடிப்படைப் பிரிவு. வாகனப் பொறியியல் (Automobile Engineering), உற்பத்திப் பொறியியல் (Production Engineering) ஆகியவை சிறப்புப் பிரிவுகள். 

இளநிலைப் படிப்பில் அடிப்படைப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதும் பட்ட மேற்படிப்பில் சிறப்புப் பிரிவைத் தேர்ந்தெடுப்பதும் பொறியியல் அறிவை ஆழமாக்கும். மட்டுமன்றி அடிப்படைப் பிரிவுகளுக்கே அதிக வேலைவாய்ப்புகளும் உண்டு.

வேலைவாய்ப்புகள்

பொறியியல் பிரிவைத் தேர்ந்தெடுக்கும்போது அப்பிரிவுக்கான வேலைவாய்ப்புகளை அலசிப் பார்ப்பது நல்லது. இணையத்தில் அத்துறைக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கின்றன என ஒரு தேடுதல் வேட்டை நடத்துங்கள்

மாயைகள்

விமானத் துறையிலும் விண்வெளித் துறையிலும் இந்தியா நிகழ்த்திவரும் சாதனைகளைப் பார்த்து விமானப் பொறியியல் (Aeronautical Engineering) அல்லது விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering) பிரிவுகள் மீது திடீர் மோகம் வந்திருக்கிறது. உண்மையில் விமானத் துறையில் சாதிக்க விமானப் பொறியியல் படிப்பு தேவையில்லை.

இந்துஸ்தான் விமானவியல் நிறுவனம் (HAL), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உள்ளிட்ட பிரபல விமானத்துறை நிறுவனங் களில் விமானப் பொறியியல் படித்தவர்களைவிட இயந்திரப் பொறி யாளர்கள்தாம் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகிறார்கள். மின்னணு, மின் பொறியியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களும் உண்டு. இதே நிலைதான் இஸ்ரோ நிறுவனத்திலும்.

இப்படிப்பட்ட மாயை களிலிருந்து மீளத் துறை சார்ந்த நிபுணர்களையோ பேராசிரியர்களையோ கலந்தாலோசிப்பது நல்லது.

எதிர்காலத் தொழில்நுட்பப் போக்கு

படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்த பிறகு உங்கள் துறை இறங்குமுகம் கண்டால் என்ன செய்யலாம், வேலையின்றி முடங்கிவிடாமல் எப்படி முன்னேறுவது என்பன போன்ற சந்தேகங்களை நிவர்த்தி செய்ய  அடுத்த 20 ஆண்டுகளுக்கு உலகை ஆளப் போகும் தொழில்நுட்பங்கள் எவை எனப் பல்வேறு நிறுவனங்கள் ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ளன.

முப்பரிமாண அச்சு (3D Printing), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோட்டிக்ஸ், ஆளில்லா விமானங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy) உள்ளிட்ட பல தொழில்நுட்பங்கள் இதில் உண்டு. இணையத்தில் வலைவீசினால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும். இந்தத் தொழில்நுட்பங்களைச் சார்ந்த பொறியியல் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

கல்லூரியா பாடப் பிரிவா?

நீங்கள் விரும்பும் பாடப் பிரிவு நீங்கள் விரும்பும் கல்லூரியில் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையெனில் என்ன செய்வது? விருப்பமான கல்லூரியில் விருப்பமில்லாத பாடப்பிரிவில் சேர்வதா? எப்போதும் பாடப்பிரிவுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் எதிர்காலப் பணியும் வாழ்வும் பெரும்பாலும் பாடப் பிரிவைச் சார்ந்ததே. அரசுத் துறைகளில் பணியில் சேர அங்கீகரிக்கப்பட்ட படிப்புதான் அடிப் படைத் தகுதியே தவிரக் கல்லூரி அல்ல.

தூரமா, அருகிலா?

வீட்டுக்கு அருகிலுள்ள கல்லூரியே போதும் எனப் பெரும்பாலான பெற்றோர் முடிவு செய்கின்றனர். தரமான கல்லூரிக்கு அருகில் உங்கள் வீடு இருந்தால் அது சரியான முடிவு! தரமான கல்லூரியில் விரும்பிய பாடப் பிரிவு கிடைக்கும் பட்சத்தில் தூரத்தை வைத்து நிராகரிக்கக் கூடாது. பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்குத் தூரம் ஒரு தடையாகிவிடக் கூடாது. பெண் குழந்தைகளுக்கும் இது பொருந்தும்.

கட்டிடமா, கல்வியா?

கல்லூரிகளை ஒப்பிடும்போது பளபளப்பான கட்டிடங்களையும் கல்லூரிப் பேருந்துகளின் எண்ணிக்கை யையும் தாண்டி, பேராசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வித் தகுதி, ஆய்வகங்கள், நூலகம், அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் கருத்து ஆகிய வற்றைப் பரிசீலித்து முடிவெடுப்பது நலம்.

கல்லூரி, பாடப் பிரிவு இவற்றைத் தாண்டி, படிப்பில் சேர்ந்த பிறகு நான்காண்டுகள் எப்படி உழைக்கிறீர்கள் என்பதே உங்கள் உயரத்தைத் தீர்மானிக்கும். தேர்வில் பெறும் மதிப்பெண்களோடு, ஆய்வகங்களில் அதிக நேரம் செலவிடுவதும், கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதும், பொறியியல் கண்காட்சிகள், தொழிற்சாலைகளைப் பார்வையிடுவதும், திட்ட வேலையை உயிர்ப்புடன் செய்வதும், ஊன்றிப்படித்து பாடங்களை உள்வாங்கிக்கொள்வதும், பரந்துபட்ட தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்வதுமாக உங்களின் தனி அடை யாளத்தை வளர்த்துக் கொண்டால் தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தின் அத்தனை கதவுகளும் உங்களுக்காகத் திறந்திருக்கும்.

- வி.டில்லிபாபு

விண்ணைத் தொடும் வெற்றிப் பயணம் விண்ணப்பத்தோடு தொடங்கட்டும்!

கட்டுரையாளர்:

இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானி.

தொடர்புக்கு: dillibabudrdo@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x