Published : 09 Apr 2019 01:03 PM
Last Updated : 09 Apr 2019 01:03 PM

பிளஸ் 2-வுக்குப் பிறகு: இஸ்ரோ என்ற இலக்கை அடைய!

எனக்கு இஸ்ரோவில் பணியாற்ற ஆசை. இப்போதுதான் பிளஸ் 2 முடித்திருக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்?” என்று பல மாணவர்கள் கேட்கிறார்கள். முதலில் இஸ்ரோ என்னவெல்லாம் செய்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், அதன் பின்னர் அந்தப் பணியில் சேர என்ன திறன்கள் தேவை, அதற்குரிய படிப்புகள் என்ன என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இஸ்ரோ என்றதுமே முதலில் நினைவுக்கு வருபவை ராக்கெட்டும் செயற்கைக் கோளும்தான். ராக்கெட், செயற்கைக்கோள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படை இயந்திரப் பொறியியல்.

ராக்கெட் ஏவுதளத்தைக் கட்டுவது, பராமரிப்பது ஆகிய கட்டுமானப் பணிகளும் முக்கியமானவை. உதாரணத்துக்கு, செயற்கைக்கோளில் எடுத்துச்செல்லும் ஆண்டனாவைச் சோதனை செய்து பார்க்க எதிரொலி இல்லாத அறையை வடிவமைக்க வேண்டும்.

உப்புமாவும் எரிபொருளும்

நம் வீட்டில் உள்ள மின்னணுக் கருவியில் தூசு தும்பு படிந்தால் அவ்வப்போது சுத்தம் செய்துகொள்ளலாம். ஆனால், விண்வெளிக்கு அனுப்பிய பிறகு செயற்கைக்கோளில் உள்ள மின்னணுக் கருவிகளைச் சுத்தம் செய்ய முடியாது.

அதிலும் விண்வெளியில் தூசு தும்பு பறந்தால் மின்சாரம் கசிந்து தீவிபத்து ஏற்படக்கூடும். எனவே, செயற்கைக் கோளைக் கட்டமைக்கும் இடத்தில் தூசு தும்பு இல்லாமல் சுத்தமான காற்று மட்டுமே இருக்க வேண்டும். இதற்கு குளிர்சாதனப் பொறியியல் நிபுணர் அவசியம்.

ராக்கெட்டை விண்ணில் ஏவ திட, திரவ எரிபொருளுடன் கிரையோஜனிக் எரிபொருளும் தற்போது பயன்படுத்தப் படுகிறது. எரிபொருளின்அடிப்படை வேதியியல், வேதிப் பொருளை எரிபொரு ளாகப் பயன்படுத்தத் தேவையான அளவிலும் ஒரே தரத்திலும் அதைத் தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, உப்புமா செய்யும்போது சற்றே கட்டி தட்டி போனால் மென்று தின்று சாப்பிட்டு விடலாம். ஆனால், ராக்கெட்டில் திட எரிபொருள் கட்டி தட்டிப் போனால்? அந்தப் பகுதி எரியும்போது ஒன்று கூடுதல் வேகத்தில் ஆற்றலை வெளிப்படுதலாம் அல்லது தாறுமாறாக ஆற்றல் வெளிப்படலாம். சீராக ஆற்றல் வெளிவந்தால்தான் ஏவிய திசையில் சீராகச் செல்லும். இதையெல்லாம் சரிபார்த்துக் கட்டமைக்க வேதியியல், வேதிப் பொறியியல் படித்தவர்கள் தேவை.

வேளாண்மைக்கும் இடம்

விண்ணில் பறக்கும் ராக்கெட்டை இயக்க அதனுடன் தகவல் தொடர்பு கொள்ள வேண்டும். அதேபோல விண்ணில் சுழலும் செயற்கைக்கோளை ரிமோட் பொம்மை காரைப் போல அவ்வப்போது இயக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதைத் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள இஸ்ரோ பொறியாளர்கள் மேற்கொள்வார்கள். இதற்குத் தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் தேவை.

தகவல் தொடர்பு மின்னணுக் கருவிகள், ஒளிப்படம் எடுப்பதற்கான கேமரா, தொலையுணர்வு நிறமாலைமானி, வெப்பம், முடுக்குவேகம், மிச்சமுள்ள எரிபொருள் போன்ற பல்வேறு தரவுகளை உணர்ந்து தகவல் தரும் கருவிகள் ஆகியவை செயற்கைக்கோளுக்குள் பொருத்தப்படுகின்றன. மின்னணு தொடர்பான இவற்றை இயக்க மின்னணுப் பொறியாளர்கள், மின்னணு அறிவியலாளர்கள் தேவை.

செயற்கைக்கோளை எதற்கெல்லாம் பயன்படுத்துகிறோம்? தொலைத்தொடர்பு, வானிலை ஆய்வு, தொலையுணர்வு, புவிக்கோளத் தகவல் அமைப்பு (GIS) ஆகியவற்றுக்கு மட்டுமின்றி விவசாய உற்பத்தி குறித்த ஆய்வுக்கும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் பயன்படுகிறது. அதாவது வேளாண்மை படித்தவர்களும் இஸ்ரோவுக்குத் தேவை.

isro-23jpg

புதியன படைப்போம்

விண்ணில் பறக்கும் ராக்கெட், செயற்கைக்கோள் செல்லும் பாதையைக் கணக்கிடக் கணிதப் புலமை அ்வசியம். செயற்கைக்கோள் சேகரிக்கும் தகவல்களைப் பதிவுசெய்து ‘டேட்டா பேங்க்’ உருவாக்க வேண்டும். மேலும், இந்தத் தரவுகளைச் சீராகத் தொகுக்க வேண்டும். இதற்கு டேட்டா அனலிஸ்ட், டேட்டா மேலாண்மை வல்லுநர்கள் தேவை. ஆக, கணிதம், கணினி அறிவியல் போன்ற பல்வேறு துறை சார்ந்த நிபுணர்களும் தேவை.

இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்து ராக்கெட் தயாரித்து விண்ணில் ஏவுவது மட்டுமே இஸ்ரோவின் பணி அல்ல. ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் புதிய தொழில்நுட்பங்களைப் படைப்பதும் இதன் முக்கிய அம்சமாகும். எடுத்துக்காட்டாக, விண்ணில் எடுக்கும் ஒளிப்படங்களைப் பூமிக்கு அப்படியே அனுப்பினால் போதிய ‘பேண்ட்வித்’ இருக்காது.

எனவே, அவற்றை ‘கம்ப்ரெஸ்’ செய்ய வேண்டும். எப்படியெல்லாம் கம்ப்ரெஸ் செய்யலாம் என்பது ஒருவகைத் தொழில்நுட்ப ஆய்வு. விண்வெளியில் மின்கலங்கள் தேவை. கைக்கடிகார பேட்டரி தீர்ந்துவிட்டால் அதை மாற்றிவிடலாம். விண்ணில் உள்ள செயற்கைக்கோளில் அவ்வாறு மாற்ற முடியாதே! எனவே, நீண்ட காலம் சீராக உழைக்கும் மின்கலங்களைத் தயாரிக்க வேண்டும்.

கலாம் செய்த கலம்

குறிப்பிட்ட எடையைத்தான் ராக்கெட் பொதியாக விண்வெளிக்குக் கொண்டு செல்ல முடியும். எளிதான, அதேநேரம் உறுதியான காம்போசிட் பொருள்களைத் தயார் செய்வது மெட்டீரியல் சயின்ஸ் என்ற ஆய்வுத்துறை. இத்தகைய ஆராய்ச்சிகளின் மூலமாகத்தான் எடை குறைவான செயற்கைக்கோள்களை டாக்டர் அப்துல் கலாம் தயாரித்தார்.

அவரைப் போன்ற பல விஞ்ஞானிகள் இஸ்ரோவில் பணியாற்றிவருகிறார்கள். வானவியலுடன் தொடர்புடையது விண்வெளி. எனவே, வானவியல், வான் இயற்பியல் சார்ந்த ஆய்வுகளும் இஸ்ரோவில் நடைபெறுகிறது.

இஸ்ரோவுக்குத் தேவையான திறன்வாய்ந்த நிபுணர்களை உருவாக்க திருவனந்தபுரத்தில் இந்திய விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Space Science and Technology) செயல்பட்டுவருகிறது. இங்கு பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். https://www.iist.ac.in/admissions/undergraduate என்ற இணையதளத்தில் இதற்கான தகவல்கள் உள்ளன.

எனினும், இந்த நிறுவனம் மட்டுமே இஸ்ரோவுக்குத் தேவையான எல்லா மனித வளத்தையும் அளித்துவிடாது. மின்னியல், கட்டுமானவியல், இயந்திரவியல், மின்னணுவியல், கணினியியல் படித்தவர்கள் இந்நிறுவனத்துக்குத் தேவை. ஆக, ஐ.டி.ஐ. முதற்கொண்டு பொறியியல் படித்தவர்கள், கணிதவியல், வேதியியல், இயற்பியல் துறைகளில் முனைவர் பட்டம் அல்லது குறைந்தபட்சம் முதுநிலை் படித்தவர்கள் உட்பட பல்வேறு நிலைகளில் திறன்வாய்ந்தவர்கள் இஸ்ரோ இயங்கத் தேவை. இஸ்ரோ என்ற இலக்கை அடைவதற்கான முதல் அடியை இனி இதன் அடிப்படையில் எடுத்துவையுங்கள்!

கட்டுரையாளர்: அறிவியல் எழுத்தாளர், விக்யான் பிரசார்,
முதுநிலை விஞ்ஞானி, புது டெல்லி.
தொடர்புக்கு: vv123@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x