Last Updated : 23 Apr, 2019 11:17 AM

 

Published : 23 Apr 2019 11:17 AM
Last Updated : 23 Apr 2019 11:17 AM

+2வுக்குப் பிறகு: ஏற்றம் தரும் படிப்புகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அடுத்த என்ன படிக்கலாம் என்பதே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி. ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை மாணவர்களின் முதல் விருப்பத் தேர்வாகப் பொறியியலும் மருத்துவமும் இருந்தன. ஆனால், இன்று அந்த நிலை மாறிவருகிறது.

பொறியியல், மருத்துவம் மட்டுமல்லாமல்; மாணவர்களின் விருப்பத் தேர்வாக அறிவியல் படிப்புகளும் கலை படிப்புகளும் இன்று உள்ளன. ஒருவகையில் இது ஒரு ஆரோக்கியமான மாற்றமே. நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பில் என்ன பாடத்தைத் தேர்வுசெய்து படித்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கான மேற்படிப்பு வாய்ப்புகள் விரிகின்றன.

அறிவியல் பிரிவு

பி.சி.பி.எம் (Physics / Chemistry / Biology / Maths) குரூப், பி.சி.பி. (PCB) குரூப், பி.சி. எம் (PCM) குரூப் ஆகியவை அறிவியல் பிரிவில் அடங்கும். பன்னிரண்டாம் வகுப்பில் இதைப் படித்தவர்கள் பொறியியல், மருத்துவம் தவிர்த்து பி.எஸ்சி. – இயற்பியல் / வேதியியல் / கணிதம், பி.எஸ்சி. – பார்மஸி, பி.எஸ்சி. – பயோ டெக்னாலஜி, பி.எஸ்சி. – டயரி டெக்னாலஜி, பி.எஸ்சி. – அகுவா கல்ச்சர் / அக்வா இன்ஜினீயரிங், பி.நாட். இன் நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ் ஆகியவற்றில் உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.

வணிகவியல் பிரிவு

கல்வி முறையின் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வணிகவியல். வர்த்தகம், நிதி, பொருளாதாரம், வங்கியியல், அரசியல் ஆகியன இந்தப் பிரிவில் அடங்கும். இதைப் படித்தவர்கள் பி.காம்., பி.பி.ஏ., சி.ஏ., பி.எம்.எஸ்., பி.பி.எஸ்., பி.ஏ.ஃப்., சி.எஸ், ஆகியவற்றைப் படிக்கலாம். இவை அனைத்தும் மூன்று ஆண்டுகாலப் படிப்புகள்.

கலைப் பிரிவு

அறிவியல், வணிகவியல் ஆகியவை தவிர்த்து ஏனைய அனைத்தும் கலைப் பிரிவில் அடங்கும். வேலையைக் குறி வைத்தே இதன் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சமூக வளர்ச்சிக்கும் மனித மேன்மைக்கும் தேவையான படிப்புகள் பல இந்தப் பிரிவில் உள்ளன. சட்டப் படிப்பு, அனிமேஷன் மற்றும் மல்டி மீடியா, ஃபேஷன் டெக்னாலஜி, விஷுவல் ஆர்ட்ஸ், லைப்ரரி ஆர்ட்ஸ், பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், ஏவியேஷன் & ஹாஸ்பிட்டல் மேனஜ்மெண்ட், ஹோட்டல் மேனெஜ்மெண்ட், ஃபிலிம் & மாஸ் கம்யுனிகேஷன், மொழிப் படிப்புகளான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், சோஷியல் வொர்க், கவின் கலை ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இவை அனைத்தும் மூன்று ஆண்டு படிப்புகள்.

உங்களுக்கு ஏற்ற பொறியியல் படிப்பு எது?

இப்போது பொறியியல் படிப்பு சர்க்கியூட் கோர்சஸ் (‘Circuit Courses’), நான்-சர்க்கியூட் கோர்சஸ் (‘Non-Circuit Courses’) என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றைச் சார்ந்த படிப்புகள் சர்க்கியூட் படிப்புகள். மெக்கானிக்கல், சிவில் போன்றவற்றை உள்ளடக்கிய மற்ற அனைத்தும் நான்-சர்க்கியூட் வகைக்குள் அடங்கும்.

வேலைவாய்ப்பின் அடிப்படையில் சர்க்கியூட் வகை படிப்புதான் பலருடைய விருப்புத் தேர்வாக உள்ளது. ஆனால், இன்று எந்தப் பிரிவுக்கு வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்ற அடிப்படையில் படிப்பைத் தேர்வுசெய்வதைவிட நான்கு வருடங்கள் கழித்து எந்தப் பிரிவுக்குத் தேவையிருக்கும் என்ற அடிப்படையில் தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.

தடை ஏதும் இல்லை

படிப்பது கற்றலின் சிறு அங்கம். கற்றதை நடைமுறையில் செயல்படுத்தினால் மட்டுமே கற்றல் முழுமையடையும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வழங்கப்படும் அடிப்படைக் கல்வியைத் தாண்டி, தாங்கள் படிக்கும் துறைக்கு ஏற்ற நடைமுறைக் கல்வியையும் அதற்கான திறன்களையும் கண்டறிந்து அதை மேம்படுத்திக்கொள்வது மாணவர்களின் வெற்றிக்கு அவசியம். மாணவர்களின் கனவு நனவாக இன்று தடை எதுவும் இல்லை. படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உந்துதலும் இருந்தால், மாணவர்களின் வாழ்வு ஏற்றம் பெறுவதுடன் தேசத்தின் வாழ்வும் வளம் பெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x