Published : 23 Apr 2019 11:04 am

Updated : 23 Apr 2019 11:04 am

 

Published : 23 Apr 2019 11:04 AM
Last Updated : 23 Apr 2019 11:04 AM

கரும்பலகைக்கு அப்பால்... 17 - அடையாளம்

17

பெரியார் குறித்த பாடம் எனில் சுதந்திரப் போராட்டம், மதுவுக்கு எதிரான போராட்டம், பெண்ணுரிமை என்று சில தகவல்கள் வருடங்களுடன் இருக்கும். இப்போது ஒன்பதாம் வகுப்பு புதிய புத்தகத்தில் தமிழரின் சிந்தனை மரபு என்று ஓர் இயல். அதில் பெரியாரின் சிந்தனைகள் குறித்த பாடம். பெரியாரின் சிந்தனைகள் குறித்துப் பல்வேறு கலந்துரையாடல்களை நிகழ்த்த ஏதுவான பாடம்.

கரும்பலகையில் ‘பெரியார்’ என்று எழுதினேன்.

இந்த வார்த்தையைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோணுதோ அதைக் குறிப்பேட்டில் எழுதுங்க என்றேன். ஏறத்தாழ நாற்பது பேரில் ஆறு பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பெரியார் பேருந்து நிலையம் குறித்த நினைவுகளை எழுதியிருந்தார்கள். மதுரை பெரியார் பேருந்து நிலையம் மூடப்பட்டு பழைய கட்டிடங்களை இடிக்கத் தொடங்கியுள்ளனர். மதுரை மக்களைப் போலவே மாணவர்களின் மனதிலும் அதே நினைவு.

பெரியார் என்ற வார்த்தைக்கு முன் தந்தை என்று எழுதினேன். இப்போது தந்தை பெரியாரைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறாய்? என்பதை எழுதுங்கள் என்றேன்.

பெரியார், நாட்டு விடுதலைக்காகப் போராடினார். கடவுள் இல்லை என்று சொன்னார். என்பவையே அதிகம் எழுதப்பட்டிருந்தன. அவர் ஏன் கடவுள் இல்லை என்று சொன்னார்? வேறு என்ன செய்தார்? என்பவை குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பது சிலரின் ஆவல்.

ஒருசில செய்திகள் குறித்துக் கலந்துரையாடிய பின் பெரியாரிடம் வருவோம் என்று சொன்னேன்.

‘அறிவு’ அப்படின்னா என்ன? என்று கேட்டேன்.

சிந்தனை, யோசித்தல், மூளையைப் பயன்படுத்துதல், திறமை, படிப்பு, கண்டு பிடித்தல், பகுத்தறிவு, புரிந்து செய்தல் போன்ற பல்வேறு அர்த்தங்களைச் சொன்னார்கள்.

பகுத்தறிவு என்றால் என்ன? என்றேன்.

அறிவுக்குச் சொன்ன அனைத்தயும் சொன்னார்கள். இரண்டு புதிய அர்த்தங்களும் கிடைத்தன. அவை, ஆராய்தல் மற்றும் அறிவைப் பயன்படுத்துதல்.

மகிழ்ச்சி. இரண்டு வார்த்தை களுக்கு நிறைய அர்த்தங்கள் கிடைச்சிருக்கு. ஒரு படம் பார்த்து விட்டுப் பிறகு பேசுவோம். என்று சொல்லி Identity என்ற படத்தைத் திரையிட்டேன். ஏறத்தாழ இரண்டு நிமிடங்கள். சிந்திக்கத் தூண்டும் கதை.

படம் பார்த்ததும் என்ன தோன்றியது? என்று உரையாடலைத் தொடங்கினேன்.

குழந்தையைப் பார்த்தவுடனேயே அவங்களுக்கு அவங்க பிள்ளை மாதிரியே இருக்கு. முகம், மூக்கு எல்லாம் அவங்க மாதிரியே இருக்குன்னு கொஞ்சுறாங்க. பேரெலாம் முடிவு பண்றாங்க. ஆனா கடைசியில் குழந்தை மாறிடுது. பயங்கர வருத்தமா ஆயிடுறாங்க.

கதையெல்லாம் சரி. கதையிலிருந்து உனக்கு என்ன தோணுது? என்றேன்.

மொதல்ல கிருஷ்ணான்னு பெயர் வைக்குறாங்க. ஆனா குழந்தை முஸ்லிம் பெற்றோரிடம் மாறிடுது.

ம்… சரிதான். அப்போ என ஆச்சு? என்று கேட்டேன்.

மதம் வேறயா ஆயிடுச்சு. என்ற பதில் வந்தது.

அட, ஆமா! மதம் மாறிடுச்சு. மதம் என்றால் என்ன? என்று கேட்டேன்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன் என்று வேகமாகப் பலரும் சொன்னார்கள்.

என்னென்ன மாதங்கள் என்று கேட்கல. மதம்னா என்ன? என்றேன்.

கடவுளை வெச்சு அடையாளம்.

மனிதர்கள் வச்சுக்கிட்ட பெயர்தான் மதம்.

மதம் ஒரு தொழில்.

ஒவ்வொரு மதத்துக்கும் நிறைய அடையாளங்கள் இருக்கு.

போன்ற பதில்கள் கிடைத்தன. விளக்கமாக எதுவும் தெரியவில்லை என்று பலரும் சொல்லத் தொடங்கியதும் உரையாடலை முடித்துக்கொண்டேன்.

மதம் என்று சொன்னதும் நமக்கு மூன்று மதங்கள் தான் உடனே நினைவுக்கு வருது. பௌத்தம், சமணம், சீக்கியம் போன்ற மதங்கள் நமது நாட்டில்தால் தோன்றின. கடவுள் இல்லாத மதங்களும் நிறைய இருக்கு. உலகம் பூராவும் நூற்றுக்கணக்கான மதங்கள் இருக்கு. இவ்வளவு போதும். மதம் என்பதை ஓர் அடையாளம், வழிமுறை என்று வைத்துக்கொள்ளலாம். எனக்குத் தெரிந்தவரை எல்லா மதங்களுமே சக மனிதன், உயிர்கள், இயற்கை மீதான அன்பையே வலியுறுத்துகின்றன. வேறு ஒரு வாய்ப்பில் இன்னும் விரிவாகப் பேசுவோம்.

இப்போ அடுத்து ஒரு கேள்வி. ஜாதி என்றால் என்ன? என்றேன்.

அதுவும் ஒரு அடையாளம்தான் என்று உடனே ஒரு மாணவர் கூறினார்.

எனக்கு ரொம்ப காலமாகவே ஒரு கேள்வி இருக்கு. மதம் ஒரு அடையாளம். அது பிறப்பால் வந்தாலும் வேறு மதத்துக்கு மாறிவிட முடியும். ஜாதியும் பிறப்பால் வரும் ஓர் அடையாளம் என்றால் ஏன் மாறவே முடியவில்லை? என்று கேட்டேன். வகுப்பறை அமைதியானது.

பாடவேளை முடிந்ததென்று மணியோசை சொல்லியது. எனது கேள்வியை யோசிங்க. நாளை பேசுவோம் என்று சொல்லி வெளியேறினேன்.

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கரும்பலகைக்கு அப்பால்குறும்படம் அறிமுகம்மொட்டுக்காTamil Short Film Identity Short Film அடையாளம் குறும்படம்சர்ஜுன் குறும்படம்Sarjun short film

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author