Last Updated : 19 Mar, 2019 11:40 AM

 

Published : 19 Mar 2019 11:40 AM
Last Updated : 19 Mar 2019 11:40 AM

புரிதலின்மையால் இழக்கப்படும் மேதைகள்

பிரதமர் நரேந்திர மோடி, கரக்பூர் ஐ.ஐ.டி. மாணவர்களுடன் அண்மையில் நடத்திய உரையாடல் இந்தியர்கள் பலரை ‘டிஸ்லெக்ஸியா’ என்ற சொல்லுக்கான அர்த்தத்தைத் தேடவைத்திருக்கிறது.

ஆங்கிலத்தில் ‘டிஸ்’ என்றால் கடினம் , ‘லெக்ஸியா’ என்றால் மொழி. ஒரு மொழியைப் படிப்பதில் உள்ள சிரமம்தான் ‘டிஸ்லெக்சியா’. ஆடல், பாடல், விளையாட்டு, ஓவியம் வரைதல் எனக் கலைகளில் சிறந்து விளங்கினாலும் படிப்பில் மட்டும் மந்தமாகச் சில குழந்தைகள் இருக்கக் காரணம் இதுவே.

இத்தகைய கற்றல் குறைபாடு உள்ளவர்கள் எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு புரியாததால் சொற்களை வாசிக்கச் சிரமப்படுவார்கள். உடலமைப்பிலும் அனைத்துச் செயல்பாடுகளிலும் சாதாரணமாகத் தோன்றும் இவர்கள் பிறவியிலேயே மூளை நரம்பு செல்களின் இணைப்பில் சிறு குறைபாடு (நோய் அல்ல) கொண்டவர்கள். இதனால் பாடத்தைப் படித்து மதிப்பெண் பெற மட்டும் சிரமப்படுவார்கள். இதைப் புரிந்துகொள்ளாமல் ‘சோம்பேறி’, ‘முட்டாள்’ என்று அவர்கள்மீது முத்திரை குத்திவிடுகிறோம்.

அறிகுறிகள்

தொடக்கக் கல்வி காலங்களில் b- யை d-போல எழுதுவதும், was -யை saw - எனப் படிப்பதும், no - வை on - என்று படிப்பதும் நிகழும். குறிப்பாக, தமிழை வாசிக்க, எழுதச் சிரமப்படுவதும், எழுத்துப் பிழைகள் அதிகம் ஏற்படுவதும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற அடிப்படைக் கணக்குகளை போடுவதில் சிரமப்படுவதும் சில அறிகுறிகள்.

கவனச் சிதறலும் அதிகமிருக்கலாம். சிறிது நேரம் படித்ததும் எழுதியதும் மூளை களைப்படைந்து விடுவதால் ‘கை வலிக்குது, பசிக்குது, தண்ணி வேணும், பாத்ரூம் போகணும்’ என அதிலிருந்து விடுபடக் காரணம் கூறுவார்கள். கரும்பலகையைப் பார்த்து எழுதுவதில் சிரமம், அடிக்கடி அழுவது, மழலைத்தனப் பேச்சு போன்ற பல அறிகுறிகள் உள்ளன. இத்தனையும் ஒரே குழந்தையிடம் இருக்க வேண்டுமென அவசியமில்லை. ஆனால், சில அறிகுறிகள் காணப்படலாம்.

ஆரம்ப காலத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் இவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது சுலபம். இல்லையென்றால் வயது ஏற ஏறக் கோபப்படுவது, எரிச்சலடைவது, எதிர்த்துப் பேசுவது, பள்ளி செல்ல மறுப்பது போன்ற நடத்தைப் பிரச்சினைகள் உருவாகலாம்.

குணப்படுத்த முடியுமா?

இது நோய் அல்ல, பிறவியிலேயே இருக்கக்கூடிய நரம்பியல் குறைபாடு என்பதால் இதை முழுமையாகக் குணப்படுத்த மருந்து, மாத்திரைகள் கிடையாது. ஒலிக்கும் எழுத்துக்கும் இடையிலான தொடர்பில் ஆரம்பித்துப் பார்த்தல், கேட்டல், உடல் அசைவுகள், தொடுதல் (Visual, Auditory, Kinesthetic, Tactile - VAKT ) போன்ற முறைகளில் கற்றுக்கொடுப்பது சிறந்த பலனளிக்கும். அதோடு இவர்களுக்கு இருக்கும் தனித்திறமைகளை ஊக்குவித்தால் உலக அளவில் புகழ் பெற்றவர்களாக இவர்கள் மாறுவார்கள். எடிசன், அகதா கிறிஸ்டி, வின்ஸ்டன் சர்ச்சில், பில் கேட்ஸ், டாம் க்ரூஸ், ஜிம் கேரி எனக் கற்றல் குறைபாடுகள் இருந்தும் புகழ்பெற்றவர்களின் பட்டியல் நீளமானது.

பெற்றோரே முதல் ஆசிரியர்

இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, “யார் உன்னை என்ன சொன்னாலும் கவலைப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்” என்ற தைரியமும் நம்பிக்கையுமே பெற்றோர் கொடுக்கக்கூடிய மிகப் பெரிய பலம். ஆடல், பாடல் போன்ற தனித்திறன் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பினால் நேரம் வீணாகும், கவனம் சிதறும் எனச் சொல்லி முடக்கிவிடுவது மிகவும் தவறான அணுகுமுறை. அடித்தால் படிப்பார்கள் என்பதோ விடுதியில் சேர்த்துவிட்டால் சரியாகிவிடுவார்கள் என்பதோ அறிவீனம். குறைகளைச் சுட்டிக்காட்டுவதைவிட நிறைகளைத் தட்டிக்கொடுப்பது நன்மை பயக்கும்.

சமீப காலத்தில் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது போன்றதொரு மாயத்தோற்றத்துக்கு ஆசிரியர்களின் கற்பித்தலில் உள்ள குறைபாடும் முக்கியக் காரணம். சந்தேகம் கேட்கும் மாணவரிடம் 'இது கூடத் தெரியாதா, முட்டாள்' என்பது போன்று எதிர்மறை வார்த்தைகளை ஒரு ஆசிரியர் வீசலாம். அதன்பிறகு அந்த மாணவர் மீண்டும் யாரிடமும் சந்தேகமே கேட்காமல் காலம் முழுவதும் பேசாமல் இருக்க அந்த ஆசிரியர் காரணமாகிவிடுகிறார். மாறாக, மாணவர்களின் பலத்தின் ஊடாக அவர்களது பலவீனத்தைப் போக்குபவரே ஆசான்.

திட்டவட்ட அணுகுமுறை

கற்றல் குறைபாட்டை, லேசான, மிதமான, தீவிரமான என்று மூன்று நிலைகளில் பிரித்தால், தொடக்கப் பள்ளியிலேயே ஒரு சிறப்பாசிரியரைப் பணியமர்த்தி லேசான, மிதமான குறைபாடுள்ளவர்களுக்கு உதவ முடியும். தீவிரக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே சிறப்புப் பள்ளி தேவைப்படும்.

அக்குழந்தைகளின் பெற்றோரைத் தனியாக அழைத்து இக்குறைபாடு பற்றிப் புரியவைத்துச் சிறப்புப் பள்ளியில் ஓரிரு ஆண்டுகள் பயிற்சி பெறச்செய்து மீண்டும் தம் பள்ளியில் சேர்த்துக்கொள்ள உத்தரவாதம் தருவதே நல்ல பள்ளிகளுக்கு அழகு. படிக்கவில்லையென மாற்றுச் சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டுத் துரத்திவிடுவது சமூக அக்கறையற்ற பள்ளிகளின் நிலைப்பாடு.

puridhal-2jpg

அவசியமான நடவடிக்கை

கற்றல் குறைபாட்டுடன் எழுதச் சிரமப்படுபவர்களுக்கு ‘ஸ்கிரைப்’ சலுகை பெற மருத்துவச் சான்றிதழ் அவசியம். ஆனால், இந்தச் சான்றிதழைப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களால், தேர்வில்

தன்னுடைய குழந்தை தேர்ச்சி பெறவில்லையென்றாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்குப் பெற்றோர் தள்ளப்படுகின்றனர். இதில் அரசு தலையிட்டு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை போல சிறப்பு ஆசிரியரே சான்றிதழ் கொடுக்கலாம் என ஆணையைப் பிறப்பிக்கலாம்.

10-ம் வகுப்பில் மொழிப்பாடம் விலக்கு பெற்று பிளஸ் 1 வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் செல்லும்போதோ பிளஸ் 2 முடித்து கல்லூரிக்குச் செல்லும் போதோ இவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, கற்றல் குறைபாடு குறித்த விழிப்புணர்வு அனைத்து மட்டத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தொடக்கப் பள்ளிகளிலும் ஒரு சிறப்பு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இளம் வயதிலேயே அடையாளம் கண்டு இக்குழந்தைகளுக்கு உரிய பயிற்சியை அளிக்க முடியும். அறிவுத் திறனும் தனித் திறமைகளும் அதிகமிருந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையென ஏங்கும் இக்குழந்தைகள் முறையாகக் கையாளப்படாவிட்டால், சமூகப் பிரச்சினைகளும் ஏற்படலாம் எனச் சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதேநேரம் அரசு, பள்ளி, பெற்றோர் ஆகிய மூன்று நிலைகளிலும் கற்றல் குறைபாட்டுடைய குழந்தைகள் சரியாகக் கையாளப்பட்டால் பல மேதைகள் உலகுக்குக் கிடைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அரசு தரும்சலுகை

உரிய மருத்துவச் சான்றிதழுடன் அரசுப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இவ்வகை மாணவர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்குகிறது.

# இரண்டாவது மொழியிலிருந்து விலக்கு பெறலாம். அதாவது, தமிழ்வழி கற்பவர்கள் ஆங்கிலத் தேர்வு எழுதத் தேவையில்லை. ஆங்கில வழி கற்பவர்கள் தமிழ்த் தேர்வு எழுதத் தேவையில்லை.

# தேர்வில் ஒரு மணிநேரம் அதிகமாக ஒதுக்கப்படும்.

# எழுத்துப் பிழைகளுக்கோ இலக்கணப் பிழைகளுக்கோ மதிப்பெண் குறைக்கப்படாது.

# எழுதஅதிகச் சிரமப்படுபவர்களுக்கு ‘ஸ்கிரைப்’ (Scribe)  சலுகை வழங்கப்படுகிறது.

- கட்டுரையாளர், துறைத் தலைவர்,
தொன்போஸ்கோ உளவியல் நிறுவனம்
தொடர்புக்கு: anneflorenceammu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x