Last Updated : 26 Feb, 2019 10:30 AM

 

Published : 26 Feb 2019 10:30 AM
Last Updated : 26 Feb 2019 10:30 AM

பிளஸ் 2-வுக்குப் பிறகு: ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு நல்லதா?

ஓர் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, அதையொட்டி முதுகலைப் பட்டப் படிப்பைத் தனியாகப் படித்துவந்ததே காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறை. புத்தாயிரத்துக்குப் பிறகு ‘கன்கரன்ட் பாடத்திட்டங்கள்’ சில பல்கலைக்கழகங்களில் அறிமுகமாயின. ஒரு கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ படித்துக்கொண்டு தொலைதூரப் படிப்பாக  இன்னொரு பட்டப் படிப்பையோ பட்டயப் படிப்பையோ படிக்க வசதியாக இந்தப் படிப்பு அறிமுகமானது.

ஆனால், அதில் ஏற்பட்ட குளறுபடிகளால் அந்தப் படிப்பு விரைவிலேயே மூடுவிழா கண்டது. அதன்பிறகு அறிமுகமான படிப்புகள்தாம் ‘ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள்’. இந்தப் பட்டப்படிப்பு நல்லதா?

பிளஸ் டூவை முடித்த பிறகு இளங்கலை பிறகு முதுகலை (3+2 ஆண்டுகள்) என்ற நடைமுறைக்கு மாறாக, படிப்பைத் தொடங்கும்போது முதுகலைப் படிப்பையும் உறுதிசெய்யும் படிப்புதான் இது.

ஒவ்வொரு படிப்பைப் பொறுத்தும் கல்வி நிறுவனத்தைப் பொறுத்தும் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளின் காலம் மாறுபடுகிறது. 4 முதல் 7 ஆண்டுகள் வரையிலும்கூட ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான  நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் ஆகியவற்றில் 5 அல்லது 4 ஆண்டு காலப் படிப்பாக ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் வழங்கப்பட்டுவருகின்றன

சாதகம் என்ன?

காலங்காலமாகப் படித்துவந்த நடைமுறைக்கு மாறாக இந்தப் படிப்பைப் படிப்பது நல்லதா, கெட்டதா? “பெரிய பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கே இந்தப் படிப்பு கிடைக்கிறது. மற்ற படிப்புகளைவிட இந்தப் படிப்புக்குப் போட்டி குறைவு; கட்-ஆப் குறைவு.

நன்கு பரிச்சயமான பல்கலைக்கழகங்கள் இந்தப் படிப்பை வழங்குவது சாதகமான விஷயம். ஒருங்கிணைந்த படிப்புகளைப் படிப்பது தவறு அல்ல. இந்தப் படிப்பைப் படிப்போர், வளாக நேர்காணலிலேயே வேலைக்குத் தேர்வாகிவிடவேண்டும்” என்கிறார் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்று நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது இளங்கலை படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்துவிடுகிறார்கள். ஒருங்கிணைந்த படிப்பைப் படித்தவர்கள் அந்த வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அதிகப்படியான கல்வித் தகுதியாக நினைத்து வேலை கிடைக்காமல் போகும் அபாயம் உண்டு.

“எம்.எஸ்சி. எம்.டெக்.கில் ஒருங்கிணைந்த படிப்புகளை படித்துவிட்டு ஆசிரியர் பணிக்கு வருவது  கஷ்டமாகிவிட்டது. பொறியியல் கல்லூரிகளில் வேலைக்கு எடுக்கும்போது 4+2 ஆண்டுகள் படித்தவர்களைத்தான் வேலைக்கு எடுக்கிறார்கள். ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு படித்தவர்களைப் பரிசீலிப்பதில்லை.

ஒருவர் அறிவியலில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பைப் படிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் எம்.எஸ்சி. படித்துவிட்டு எம்.டெக். பண்ணலாம். அப்படிப் படித்துவிட்டு ஆசிரியர் பணிக்குப் போகும்போது கல்வித் தகுதி பற்றிய கேள்வி எழுகிறது. ஆசிரியர் பணிக்குப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.

வேறு வேலையை எதிர்நோக்கிப் படிப்பவர்கள் இந்தப் படிப்பைத் தேர்வு செய்யலாம். ஆனால், வளாக நேர்காணலிலேயே தேர்வாகிவிட வேண்டும்” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.

எப்படித் தேர்வு செய்வது?

இந்தப் படிப்பைத் தேர்வுசெய்யும் மாணவர்கள் இன்னொரு விஷயத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். இன்று தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டி ருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகமோ தன்னாட்சிக் கல்லூரிகளோ எதுவாக இருந்தாலும் காலத்துக்கு ஏற்ப ஒருங்கிணைந்த பாடத்திட்டங்களை மேம்படுத்தும் கல்வி நிறுவனங்களைத் தேர்வுசெய்வதே நல்லது.

pls-2-ppljpg

படிப்பில் சேரும்போது உள்ள தொழில்நுட்பத்துக்கும் படித்துவிட்டு வெளியே வரும்போது உள்ள தொழில்நுட்பத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இதை மனத்தில் வைத்து, உரிய தொழில்நுட்பங்களைப் பாடத்திட்டங்களில் அவ்வப்போது புகுத்தும் கல்வி நிறுவனங்களில் சேர முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.

“ஒரே கல்லூரியில் ஒருங்கிணைந்த படிப்பைப் படிக்கும்போது அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகளை மட்டுமே பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இதுவே இளங்கலையை ஒரு கல்லூரியிலோ முதுகலையை வேறொரு கல்லூரியிலோ படித்தால் வெவ்வேறுவிதமான உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

இதேபோல இளங்கலையில் ஒரு படிப்பைத் தேர்வுசெய்து படித்தால், அதன் பிறகு யோசித்து முதுகலையில் இன்னொரு படிப்பில் சேரலாம். ஆனால், ஒருங்கிணைந்த படிப்பில் தொடக்கத்திலேயே முதுகலைப் படிப்பை முடிவு செய்துவிடுவதால், வேறோரு படிப்பை இடையில் யோசிக்க முடியாது” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கா. கார்த்திகேயன்.

வழக்கமாக 10+2+3+2 அல்லது 10+2+4+2 என்று உயர்கல்வியைப் படிப்பவர்களைத்தான் தொழிற் நிறுவனங்கள் வேலைக்குத் தேர்வு செய்கின்றன. ஒருங்கிணைந்த படிப்புகளைப் படித்துவிட்டுச் செல்லும்போது வாய்ப்பு கொஞ்சம் குறைகிறது என்பதே யதார்த்தம். அதற்காக ஒருங்கிணைந்த படிப்புகளைப் படிப்பது தவறு என்று அர்த்தம் கிடையாது.

இந்தப் படிப்பைப் படித்தவர்கள் மத்திய மாநிலத் தேர்வாணையங்கள் நடத்தும் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்க முடியும். இந்தப் படிப்பைப் படிப்போர் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பைப் உறுதி செய்வது நல்லது என்பதை மறந்துவிடக் கூடாது.

எங்கெல்லாம் படிக்கலாம்?

ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் மத்திய பல்கலைக்கழங்களில் வழங்கப்படுகின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் போன்றவையும் இந்தப் படிப்பை வழங்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. எலெக்ட்ரானிக்ஸ் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பாக வழங்கப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் லைப் சயின்ஸ் படிப்பு வழங்கப்படுகிறது. இதேபோல் சில குறிப்பிட்ட படிப்புகள் சில பல்கலைக்கழங்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x