

பாடப் புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் ரசித்து வாசிக்கக்கூடிய பலவிதமான புத்தகங்கள் இருக்கின்றன. கல்வி குறித்து அண்மையில் வெளியான நூல்களில் குறிப்பிடத்தகுந்தவை:
தமிழைத் தேடிய தந்தை
ஓர் ஆங்கில ஆசிரியருக்குத் தன்னுடைய மகள் ஓர் தமிழ்வழிப் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற கனவு. அதற்காக சென்னையின் வீதிகள்தோறும் அலைந்து திறந்து தன்னுடைய மகள் ஈரோடையை (பெரியாரின் ஊர் நினைவாக வைத்த பெயர்) தமிழ்வழிப் பள்ளியில் பெரும்பாடுபட்டுச் சேர்த்த வாழ்க்கை அனுபவத்தின் தொகுப்பே, ‘தமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்!’ நூல். ஆசிரியர் நலங்கிள்ளியின் இந்த அனுபவப் பகிர்வின் ஒரு பகுதி ஏற்கெனவே இந்து தமிழ் நாளிதழின் நடுபக்கத்தில் இடம்பெற்று வாசகர்களின் பெருமதிப்பைப் பெற்றது.
தமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின் அனுபவம்! | நலங்கிள்ளி | ஈரோடை வெளியீடு | அலைபேசி: 9840418421
மெளனத்தைக் கலைக்கும் கல்வி!
சிந்திக்கும் திறனின் வழியாக உரையாடவும் செயலாற்றவும் வல்லமை பெற்றவர்கள் மனிதர்கள். ஆனால், இன்றைய ஆசிரியர் மாணவருக்கு இடையிலான உறவு, கல்வி நிலையங்கள் செயலாற்றும் முறை, பாடநூல் அமைக்கப்பட்ட விதம் எல்லாமே நம்மீது மெளனத்தைப் போர்த்துபவையாகவே உள்ளன என்று கால் நூற்றாண்டுக்கு முன்பே விமர்சித்தவர் கல்வியாளர் பாவ்லோ ஃப்ரேய்ரே. இந்த மெளனத்தைத் தகர்க்க அவர் முன்வைத்த மாற்றுக் கல்விமுறையைச் சுருக்கமாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம்.
‘மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன?’ | அ.மார்க்ஸ் | அடையாளம் பதிப்பகம் | ரூ.50/- | தொலைபேசி- 04332 273444
எது வளர்ச்சி?
பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்ப மேம்படுத்தலும்தான் முன்னேற்றம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அத்தகைய நம்பிக்கையில் இருந்து விடுபட்டுச் சமூக வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுவதே உண்மையான முன்னேற்றம் என்று உணர்ந்த நாடுகளில் ஒன்று பின்லாந்து. அங்கு ஏற்பட்ட திகைக்க வைக்கும் 108 சமூகக் கண்டுபிடிப்புகளைப் பேசுகிறது 17 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பின்லாந்து காட்டும் வழி’ புத்தகம்.
பின்லாந்து காட்டும் வழி | தொகுப்பு: இல்க்கா டாய்பாலே - தமிழில்: காயத்ரி மாணிக்கம் | ரூ.300 | கிழக்குப் பதிப்பகம், 177/103, அம்பாள் கட்டடம், முதல் மாடி, அவ்வை சண்முகம் சாலை (லாயிட்ஸ் ரோட்) ராயப்பேட்டை, சென்னை - 600014, தொலைபேசி – 044-4200-9603
மொழி ஆளுமைக்கு!
பிழையின்றித் தமிழ் மொழியைப் பேசவும் எழுதவும் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இருந்தாலும் கால மாற்றத்துக்கு ஏற்பத் தகவமைக்கப்பட்ட நூல்கள் தேவைப்படுகின்றன. தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆங்காங்கே மொழியில் தடுமாறும் ஆய்வாளர்கள்வரை தமிழ் மொழியை எளிமையான முறையில் பயில ‘தமிழ் மொழி ஒலி அடிப்படைகள்’ கைகொடுக்கும்.
தமிழ் மொழி ஒலி அடிப்படைகள் | முனைவர் பிரகாஷ் | வெ.வேலா வெளியீட்டகம் | ரூ.40/- | தொலைபேசி: 0422-2382614
பிரித்தறிவோம்
எதற்கெடுத்தாலும் ‘நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?’ என்று கேட்டுப் பழமை வாதங்களைப் பரப்பும் போக்கு அண்மைகாலமாக தலைதூக்கி இருக்கிறது. ஆனால், பழங்காலத்தில் நிகழ்ந்ததாகவும் இருந்ததாகவும் சொல்லப்படுபவற்றில் எது உண்மை, எது பொய் என்பதைப் பிரித்து அறிவதுதானே பகுத்தறிவு! இதை அறிவியல்பூர் வமாகவும் வரலாற்று சமூகவியல் பார்வையிலும் அலசி ஆராயும் புத்தகம்தான் மனநல மருத்துவர் ஷாலினியின், ‘கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்’.
கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ் | ஷாலினி | கருஞ்சட்டைப் பதிப்பகம் | ரூ.80 | தொலைபேசி - 044-42047162.
தொழில்நுட்பக் கில்லாடி ஆகலாம்
ஒரு விரல் நுனி அளவிலான கருவிக்குள் எப்படி ஒரு நூலகத்தின் புத்தகங்களை எல்லாம் அடுக்க முடிகிறது, நூற்றுக்கணக்கான திரைப்படங்களை வைக்க முடிகிறது, ஆயிரக்கணக்கான பாடல்களைச் சேமிக்க முடிகிறது என்பதுபோன்ற கேள்விகளுக்கான விடை ஒரு எலெக்ட்ரானிக் மாணவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவற்றை ‘டிஜிட்டல் எல்க்ட்ரானிக்ஸ்’ கையடக்கப் புத்தகத்தின் நான்கு பாகங்கள் கதைபோல விவரிக்கின்றன.
டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் – பாகம் 1, 2, 3, 4 | பாலாஜி சார் பதிப்பகம் | நெ.28, டாக்டர் அம்பேத்கர் சாலை, கோடம்பாக்கம், சென்னை – 600 024
உணர்ந்துப் படிக்கலாம் அறிவியலை
இன்று உலகம் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய பங்காற்றி இருப்பது அறிவியல்தான் என்றாலும் மூடநம்பிக்கைகளுக்குப் பின்னே ஏனோ மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அதற்குக் காரணம் இயற்கையின் புதிரான ரகசியங்களை விளக்கும் அறிவியலை அனைவருக்கும் கொண்டுசேர்க்கத் தவறியதே. அப்படி தவறவிட்டதைப் பிடிக்கும் முயற்சியே ‘அறிவு தேடலில் அறிவியல் உணர்வு’.