Last Updated : 11 Dec, 2018 11:09 AM

 

Published : 11 Dec 2018 11:09 AM
Last Updated : 11 Dec 2018 11:09 AM

கரும்பலகைக்கு அப்பால்... 10 - பசியின் கொடுமை

காலை வணக்கக் கூட்டம்.

மாணவர்களை வரிசையாக நிற்கவைத்துக் கொண்டிருந்தேன்.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலோர் அந்த வயதுக்குரிய வளர்ச்சியுடன் இல்லை. காலையிலேயே சோர்வாகவும் காணப்பட்டார்கள்.

“எல்லாரும் காலையில் சாப்பிட்டீங்களா? சாப்பிடாதவங்க இருக்கீங்களா?”

36 மாணவர்களில் 27 கைகள் உயர்ந்தன. அதிர்ச்சியாக இருந்தது.

“சாப்பிடாமல் பள்ளிக்கு வரக் காரணம் என்ன?”

பள்ளிக்குக் கிளம்புவதற்குள் சமைக்க மாட்டாங்க.

வீட்டு வேலைகளை முடித்துவிட்டுக் கிளம்பத்தான் நேரம் இருக்கும்.

டீ, அப்பம் சாப்பிடுவதால் பசிப்பதில்லை.

பஸ்ஸுக்கு லேட்டாயிடும்.

என்று பல காரணங்களைச் சொன்னார்கள்.

‘கண்ணீர் வந்திருச்சு!’

“சரி. சாப்பிடாமல் வகுப்பில் இருக்கும்போது உனக்கு எப்படி இருக்கும்?” என்று கேட்டேன்.

“தலை சுத்தி கிறுகிறுன்னு வந்திருக்கு.”

“சாப்பிடலேன்னா வயிறு வலிக்கும்.”

“எனக்குத் தூக்கம் வந்துட்டே இருக்கும்.”

“பசிக்கும்போது எதையுமே கவனிக்க முடியாது.”

அன்றாட உணவுக்காக உழைக்கும் மக்களுக்குப் பசியாற உணவு கிடைப்பதே இல்லை. அதனால் வயதுக்கு ஏற்ற சத்து கிடைக்காமல் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாத குழந்தைகளே இங்கு அதிகம்.

எழுத்தாளர் கே. ராஜாராம் எழுதிய சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘பசி’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன்.

அம்மாவுக்கு உடல் நலமில்லாததால் சாப்பிடாமல் பள்ளிக்கு வருகிறான் ஒரு சிறுவன். காலை வேளையில் பாடங்கள் உணவைப் பற்றியதாகவே இருக்கின்றன. பாடத்தைக் கவனித்தும் கவனிக்க முடியாமலும் தவித்துக்கொண்டே சத்துணவுக்காகக் காத்திருக்கிறான்.

குழந்தைகள் பசியால் என்னென்ன சிரமங்களை எதிர்கொள்ளுகிறார்கள் என்பதை நுட்பமாகவும் உருக்கமாகவும் விளக்கும் குறும்படம்.

முன்பே நிறையக் கலந்துரையாடி விட்டாலும் படத்தின் கதை மாணவர்களுக்கு நெருக்கமாக இருந்ததால் இறுக்கமான மனநிலையில் உட்கார்ந்திருந்தார்கள். யாரும் எதுவுமே பேசவில்லை. மெதுவாக ஒரு குரல் எழுந்தது. ‘கண்ணீர் வந்திருச்சு!’ அதைத் தொடர்ந்து சில குரல்கள் அதை ஆமோதித்தன.

சூழல் முக்கியம் இல்லையா?

பசி இருந்தால் கல்வியில் கவனம் செலுத்த இயலாது என்றுதானே காமராசர் மதிய உணவுத்திட்டம் கொண்டுவந்தார். மதிய உணவு சத்துணவாகி அதில் முட்டையும் சேர்ந்திருக்கிறது. மகிழ்ச்சி. இத்தனை ஆண்டு காலமும் மதிய உணவில் பல்வேறு மாற்றங்களைச் செய்துகொண்டே இருந்திருக்கிறோம். காலை உணவு குறித்து ஏன் யோசிக்கவே இல்லை?

கற்பித்தல் முறைகள் குறித்து யோசிக்கிறோம். கற்றல் சூழல் குறித்து ஏன் சிந்திக்கவில்லை?

சாப்பிடவே வழியற்ற குழந்தைகளிடம் தூக்க முடியாத அளவு புத்தகங்களைக் கொடுத்து ‘படி படி’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். படிப்பதால் எதிர்காலத்தில் பல்வேறு வசதிகளைப் பெறலாம் என்ற கனவை விதைக்கலாம். இன்றைக்குப் படிப்பதற்கு யார் உணவு தருவார்? வறுமையில்லா நாடு என்பதுதானே கனவாக இருக்க வேண்டும்.

நெகிழி இல்லா வளாகம்போல் பசியில்லாப் பள்ளி வளாகங்கள் எப்போது உருவாகும்?

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x