Last Updated : 02 Oct, 2018 12:46 PM

Published : 02 Oct 2018 12:46 PM
Last Updated : 02 Oct 2018 12:46 PM

கரும்பலகைக்கு அப்பால்... 03 - கற்பதிலா அல்லது கற்பித்தலிலா குறைபாடு?

‘இப்போ இருக்குற காம்படிஷன் வேர்ல்ட்ல மார்க் ரொம்ப முக்கியமா இருக்கு சார்’ என்று தொடங்கி இப்போதே தனது பையனை ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்குத் தயார் செய்வதாக ஒரு குரல். தொண்ணூறு மதிப்பெண்களுக்கு மேல், எண்பது மதிப்பெண்களுக்கு மேல், படிப்பு தவிர விளையாட்டு, நடனம் என்று எல்லாவற்றிலும் தனது மகன் சிறந்தவன் என ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் பெருமைகளைக்  கூறிக்கொள்கின்றனர்.

‘என்ன, மூர்த்தி சார் உங்க பையன் எப்படி?’ என்ற கேள்விக்கு மெதுவாய்த் தலை தூக்கி, ‘என் பையன் எப்போதுமே ஸ்பெஷல்தான் சார், எல்லாப் பாடத்திலேயும் தொண்ணூற்றி ஒன்பது மார்க்தான் எடுப்பான்’ என்று சொல்லும்போது தலை குனிந்து நின்று திட்டு வாங்கும் சிறுவனும் 1 மதிப்பெண் போடப்பட்ட விடைத்தாளும் காட்சியாக விரிகின்றன.

ஐந்தாம் வகுப்புப் படிக்கும் சராசரி மாணவன் கார்த்திக். பாசமான அம்மா, கண்டிப்பான அப்பா. நடுத்தரக் குடும்பம்.

படிக்காத பையனால் பெற்றோருக்குள் ஏற்படும் சண்டை, பையனின் எதிர்காலம் குறித்து வருந்தும் பெற்றோர், கோபித்துக்கொண்ட அம்மாவிடம் பேச வேண்டும் என்பதற்காகப்  படிக்கும் சிறுவன் என்று இயல்பான குறும்படம் ‘1 மார்க்’.

ஆர்வத்தோடும் கவலையோடும்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் இப்படத்தை ரசித்துப் பார்த்தார்கள். அரசுப் பொதுத்தேர்வு என்ற வார்த்தையைப் பலரும் சொல்லிப் பயங்காட்டும் வகுப்பல்லவா அது. கலந்துரையாடல் தொடங்கியது.

‘முதல் தடவையா எல்லாப் பாடத்திலேயும் பாஸாயிருக்கான் கைதட்டுங்கன்னு டீச்சர்’ சொல்ற வசனம் ரொம்பப் பிடிச்சிருந்தது.

‘கார்த்திக்கோட அப்பா ரேங்க் கார்டில் கையெழுத்துப் போடும்போது முகத்தை எப்போதும்போல இறுக்கமா வச்சிருக்காரு. வீட்டை விட்டு வெளியே வரும்போது சிரிக்கிறாரு. மகனைப் பார்த்துச் சிரிச்சு, கைகொடுத்துப் பாராடியிருந்தா நல்லா இருந்திருக்கும்.’ என்பது போன்ற படம் பற்றிய விமர்சனங்கள் எதிரொலித்தன.

படி, படி என்று எல்லோரும் சொல்றாங்க. கூடுதல் வகுப்புகள், மாலைநேரப் பயிற்சிகள், அதிகாலைப் படிப்பு, தியானம், நேர்த்திக்கடன், தொலைக்காட்சிக்குத் தடை, தேர்வு நேரத்தில் உணவுக் கட்டுப்பாடு, என்பன போன்ற அனைவரும் அறிந்த செய்திகளை ஆர்வத்தோடும் கவலையோடும் பகிர்ந்துகொண்டனர்.

ஒவ்வொருவரின் பேச்சும் மனதுக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்தன. ஒரு மதிப்பெண்ணில் தோல்வி என்பது எவ்வளவு கொடுமை? ‘எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க?’ என்ற நூலின் செய்திகள் நினைவுக்கு வந்தன. தேர்வு முறையில் எவ்வளவு குறைபாடுகள் இருக்கின்றன என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

பெருமிதங்களுக்காகவா குழந்தைகள்?

மருத்துவப் பரிசோதனை முடிவைப் போலத்தானே தேர்வு விடைத்தாள். என்ன எழுதியிருக்கிறார்கள்? எப்படி எழுதியிருக்கிறார்கள்? என்றல்லவா பார்த்திருக்க வேண்டும். அப்படிப் பார்த்திருந்தால் அவர்கள் எங்கு திணறுகிறார்கள் என்பதை அறிந்திருக்கலாம். ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்ற தெளிவு கிடைத்திருக்கும். முந்தைய தேர்வு விடைத்தாளுடன் அடுத்த தேர்வு விடைத்தாளை ஒப்பிட்டால் இன்னும் நிறையத் தெளிவு கிடைக்கும்.

கற்றலில் என்ன குறைபாடுகள் இருக்கின்றன, அவை எவ்வாறு ஏற்படுகின்றன என்று ஆசிரியர்தானே கண்டறிய வேண்டும். கற்றல் குறைபாடு என்று சொல்வது உண்மையில் கற்பித்தல் குறைபாடுதானே.

உடன் வேலை செய்பவர்கள், அக்கம் பக்கம் வசிப்பவர்கள்தான் நம் குழந்தைகள் மீது தீர்ப்பு எழுதுபவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் பெரியவர்களின் பெருமிதங்களுக்காகவே பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

பெற்றோரும் ஆசிரியரும் குழந்தைகளின் குறைகளை எல்லாம் கண்டறிந்து பட்டியலிடுவதில் தேர்ந்தவர்களாக இருக்கிறோம். ஒரு குழந்தையின் தனித்தன்மையை, ஆர்வத்தை எப்போது கண்டறியப் போகிறோம்?

நாளை என்ன செய்யலாம்?

போட்டி நிறைந்த உலகம் என்று சொல்லுகிறோம். ஒரு சில படிப்புகளை நோக்கிய மந்தைத்தனமான ஓட்டத்தை எத்தனை காலம் போட்டி என்று சொல்லப் போகிறோம்? வாய்ப்புகள் நிறைந்த உலகம் என்று குழந்தைகளின் கைபிடித்து எப்போது அழைத்துச் செல்லப்போகிறோம்?

காலாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்போகின்றன. மதிப்பெண் குறித்த எதிர்பார்ப்போடும் பயத்தோடும் குழந்தைகள் வகுப்பறைக்குள் காத்திருப்பார்கள்.

மதிப்பெண்ணை உரக்கச் சொல்லாமல் எல்லோருக்கும் விடைத்தாள்களைக் கொடுத்துவிட்டு, தனியே அழைத்து, எங்கு திணறியிருக்கிறார்கள் என்று சொல்லி, “நானிருக்கிறேன். உனக்குப் புரியும்படிச் சொல்லித் தருகிறேன். கவலை வேண்டாம்” என்று சொல்லும் ஆசிரியரைக் குழந்தைகள் சந்தித்தால் எவ்வளவு மகிழ்வார்கள்?

மாற்றங்கள் மலரும் வகுப்பறை கனவல்ல. நனவு ஆசிரியர்களின் செயல்.

‘1 மார்க்’ (22 நிமிடங்கள்)

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x