Last Updated : 09 Oct, 2018 11:37 AM

Published : 09 Oct 2018 11:37 AM
Last Updated : 09 Oct 2018 11:37 AM

கரும்பலகைக்கு அப்பால்... 04 - கேள்விகளைத் தேடுவோமா?

ஒன்பதாம் வகுப்பு மாணவர் களிடம் கூறினேன், முதல் பாடத்தின் முதல் பத்தியை வாசிங்க. அதிலிருந்து கேள்விகளை உருவாக்குங்க. எத்தனை கேள்விகள் வேண்டு மானாலும் எழுதலாம்.

வகுப்பில் சலசலப்பு.

தம்பிகளா, கேள்வி பதில் என்று மனப்பாடம் பண்ணவா மொழிப்பாடம் இருக்கு? கேள்வி பதில் குறிச்சுப் படிக்குறது, உரைநூலை வாங்கி அப்படியே மனப்பாடம் செய்றது இதெல்லாம் பயன் தராது. சொந்தமா யோசிச்சு எழுதவும் தெரியணும். முயற்சி பண்ணுங்க. எத்தனை நாட்கள்தான் பதிலைத் தேடுவீங்க? இன்று கேள்விகளைத் தேடுங்க! என்றேன்.

எல்லோருக்கும் அது சிரமமான காரியமாக இருந்தது. ஒரு சிலர் முயன்றனர். அந்தப் பாடவேளை முடியும்வரை யாருமே கேள்விகளை உருவாக்கியிருக்க வில்லை.

மதியப் பாடவேளையில் காணொளிக் காட்சி அரங்குக்கு மாணவர்களை அழைத்துச் சென்றேன். இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘கதைநேரம்’ தொடரில் வெளிவந்த ‘தப்புக்கணக்கு’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன்.

‘சொல்வதை மட்டும் கேள்!’

சக்தி என்ற பெண்குழந்தையின் கதை. எல்லாக் குழந்தைகளையும் போலவே சக்திக்கும் ஏராளமான கேள்விகள் எழுகின்றன. அவளது கேள்விகளுக்கு அக்கறையோடு பதில் சொல்ல முயல்கிறார் அவளுடைய தாத்தா.

“ரோஸ் கலர்ல இருக்குறதுனால ரோஸ்ன்னு பெயர் வச்சாங்களா?”

“ஆரஞ்சு கலர்ல இருக்குற ரோஸையும் ரோஸ்னுதானே சொல்றோம்?”

“ரோஸ்க்குத் தமிழ்ப் பெயர் ரோஜான்னு சொல்றே. உன் பெயர் மட்டும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒரே மாதிரி வைத்தியலிங்கம்னு சொல்றியே?”

என்ற சக்தியின் கேள்விகளில் குழந்தைத்தனத்தின் புதியதை அறியும் தன்மை மிளிர்கிறது.

ஒரு வாரத்துக்கு ஏழு நாட்கள். இரண்டு வாரங்களுக்கு எத்தனை நாட்கள்? என்ற கணக்கை 7 x 2 = 14 என்று சக்தி எழுதியதால் ஆசிரியை மதிப்பெண் தரவில்லை. தாத்தா பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் விசாரிக்கிறார். அது இரண்டாம் வாய்ப்பாட்டுக்கான கணக்கு. 2 x 7 = 14  என்றுதான் எழுத வேண்டும் என்று ஆசிரியை கூறுகிறார். தலைமையாசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர் அனை வருமே ஒரே பதிலையே கூறுகின்றனர்.

பள்ளியிலிருந்து சக்தியின் பெற்றோருக்குத் தகவல் சொல்லப்படுகிறது. சக்தியின் அப்பா விசாரிக்கிறார். சக்தி தனது பதிலுக்கான நியாயத்தைச் சொல்லுகிறாள். பெண் குழந்தை இப்படியெல்லாம் கேள்விகள் கேட்பது தவறு. இனிமேல் ஆசிரியை சொல்வதை மட்டுமே கேள் என்று அப்பா கண்டிக்கிறார்.

“உங்களுக்கு என்ன தோணுது?” என்று மாணவர்களிடம் கேட்டேன்.

தேடலின் திறவுகோல்

அந்தப் பாப்பா சொன்னது சரிதானே! எல்லாரும் தப்புன்னே சொல்றாங்களே!

ஆமாம். விடை சரி என்றாலும் அவங்க சொல்லித் தந்த மாதிரி எழுதாததால் தப்பென்று சொல்றாங்க.

“அது எப்படிங்கய்யா. அவங்க சொல்றதுதான் புரியல.”

“உங்களைப் போலவே எனக்கும் பாப்பா சொல்றதுதான் சரி. அந்தப் பாப்பாவுக்கு எவ்வளவு கேள்விகள் தோணுது. அது மாதிரி உங்களுக்கு என்ன தோணுது?”

அமைதியும் முணுமுணுப்பும் ஆங்காங்கே சிரிப்பும்.

பாடவேளை முடியப் போகுது. உங்களுக்கு ஏகப்பட்ட கேள்விகள் தோணும். எத்தனை கேள்விகள் என்றாலும் சரி. நாளை வரும்போது நாட்குறிப்பு ஏட்டில் எழுதிட்டு வாங்க. என்றேன்.

அடுத்த நாள் வகுப்புக்குள் நுழைந்ததும் ஆரவார வரவேற்பு. “ஐயா, கேள்விகள்!” “ஒவ்வொருத்தராக வந்து வாசிங்க” என்றேன். பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்தது யார்? கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்பது போன்றவற்றைத் தவிர்த்துச் சில கேள்விகள் அற்புதமானவை.

நாம் எதற்காக உயிர் வாழ்கிறோம்?

எப்படி மனத்தில் ஆசைகள் தோன்றுகின்றன?

ஏன் படிக்க வேண்டும்?

பள்ளியில் ஏன் 12-ம் வகுப்புவரை மட்டுமே இருக்கிறது?

ஏன் எங்களுக்குப் புத்தகங்களை மாற்றினார்கள்?

தமிழ்தான் முதலில் தோன்றியது என்றால் ஏன் உலகம் பூராவும் அதைப் பேசவில்லை?

முடி, நகம் மட்டும் வளர்ந்து கொண்டே இருப்பது எப்படி?

ஏன் ஒரு நடிகருக்கு ரசிகராக இருக்கிறோம்?

ஏன் காதலிக்கிறோம்?

இவை தவிரக் கடவுள், பேய் குறித்த கேள்விகள் அதிகம்.

“அனைவருக்கும் வாழ்த்துகள். கேள்விகளை எழுப்பினாலே பதிலைத் தேடத் தொடங்கிவிடுவோம். வகுப்பிலும் அவ்வப்போது இந்தக் கேள்விகள் குறித்துக் கலந்துரையாடலாம். பல்வேறு புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் வந்துவிட்டால் நிறையப் பதில்களும் புதிய கேள்விகளும் கிடைக்கும். இது சுவாரசியமான விளையாட்டு” என்றேன்.

நமது மொழியில் குழந்தைகளுடன் பேசுகிறோம். அதைப் புரிந்துகொள்ளாதவர்களை ‘மெல்லக் கற்போர்’ என்கிறோம். கற்றுத் தரும் முறையில், மொழியில்தான் குறைபாடுகள் இருக்கின்றன. மெல்ல மலரும்  குழந்தைகளைவிட மெல்ல மலரும் ஆசிரியர்களே அதிகம்.

வகுப்பறை தேடலின் தொடக்கப் புள்ளியாக மாறாமல் பலரின் கல்விக்கு முற்றுப்புள்ளியாக அமைவதே வேதனை. கேள்விகள்தாமே தேடலின் திறவுகோல்கள். கேள்விகளால் வகுப்பறையில் புதிய கதவுகள் திறக்கின்றன. அதுதானே கல்வி.

தப்புக்கணக்கு (24 நிமிடங்கள்)
 

 

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x