Last Updated : 05 Nov, 2018 06:34 PM

 

Published : 05 Nov 2018 06:34 PM
Last Updated : 05 Nov 2018 06:34 PM

கரும்பலகைக்கு அப்பால்... 08 - தர்மத்தின் குரல் கேட்குதா?

ஏழாம் வகுப்பு. ஒரு சிறிய கதையைச் சொன்னேன்.

“இந்தக் கதையின் நீதி எனக்குத் தெரியும்” என்றான் ஒரு மாணவன்.

“நான் அப்படி ஏதும் கேட்கவில்லையே” என்றேன்.

“நான் சொல்றேன், ‘தவறு செய்தால் தண்டனை உண்டு’” என்றான்.

“அட, அப்படியா! நான் நீதிக்காகச் சொல்லவில்லை. இருந்தாலும் வாழ்த்துகள்” என்றேன்.

நீதிகள் வெறும் பதில்களாக முடிந்து விடுகின்றன.

நீதி, பொன்மொழிகளை ரசிக்கிறோம். சொல்கிறோம். அவற்றை நம் வாழ்வில் எத்தனை சதவீதம் பின்பற்றுகிறோம்?

புத்தகங்கள் நீதிகளைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. வாழ்வில் அவற்றைப் பழகுவதற்கான செயல்முறைகள் வீட்டில், சமூகத்தில், பள்ளியில்  இருக்கின்றனவா?

வலிமையான காட்சிகளால் பல்வேறு செய்திகளை இயல்பாக உணர்த்தும்  குறும்படம் ‘தர்மம்’.

சமூகத்தின் பிரதிபலிப்பு

பிச்சைக்காரக் கோலத்தில் ஒரு சிறுவன். அவன் கையில் அலுமினியத் தட்டைக் கொடுக்கிறார் அவனுடைய தாய். பிச்சை எடுக்கும்போது சொல்ல வேண்டிய வசனத்தை ஆங்கிலத்தில் சொல்லி அச்சிறுவனைத் திரும்பச் சொல்லச் சொல்கிறார். சிறுவன் சற்றே திணறுகிறான்.

“பிச்சைக்காரன் எப்படிம்மா இங்லீஷ்ல பேசுவான்?” என்று கேட்கிறான்.

மாறுவேடப் போட்டிக்குத் தயாராகும் பள்ளி மாணவன் இவன்.

மறுபுறம், புதிதாகப் போக்குவரத்துக் காவலராகப் பொறுப்பேற்று வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார் ஒரு இளைஞன், தெருவோரத்தில் யாசகம் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஒரு வயதான பிச்சைக்காரர். மாறுவேடப் போட்டிக்கு காரில் செல்லும் சிறுவன் தெருவோரத்தில் பிச்சை எடுக்கும் முதியவரைச் சந்திக்க நேருகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் சமூகத்தின் இன்றைய நிலையைத் தெளிவாகக் காட்டுகின்றன.

யாசகமும் லஞ்சமும்

படம் முடிந்ததும் உரையாடல் தொடங்கியது.

“படத்தோட ஆரம்பத்துல அந்தப் பையன் அம்மாவிடம் ஒரு  கேள்வி  கேட்டான் பாரு, அது எனக்குப் பிடிச்சிருந்தது. உங்களுக்கு எதெல்லாம் பிடிச்சிருந்தது? சொல்ல விரும்புறவங்க சொல்லலாம்” என்றேன்.

ஒவ்வொருவராகச் சொல்லத் தொடங்கினர்.

“உண்டியலில் காசு போடுறதுக்குப் பதிலா அந்தப் பிச்சைக்காரருக்குக் கொடுத்தது எனக்குப் பிடிச்சிருந்தது.”

“இங்கிலீஷ்ல சொன்னா மனசுல பதியல. தமிழில் சொன்னது அந்தப் பையனுக்கு அப்படியே ஞாபகம் இருக்கு.”

“அம்மாவோட பர்சா இருந்தாலும் கேட்காமல் காசு எடுக்கக் கூடாதுன்னு அந்தத் தாத்தா சொன்னது பிடிச்சிருக்கு.”

“பிச்சை எடுக்குறவங்களையும் மனுஷனா மதிக்காம அடிக்குறாங்க. அது பாவம்!” என்றான் ஒரு மாணவன்.

“அந்தப் பையன் நூறு ரூபாயைப் பிச்சைக்காரருக்குக் கொடுக்குறான். லஞ்சம் வாங்குறதும் நூறு ரூபாய். ரெண்டும் ஒண்ணா இருக்கு.”

‘லஞ்சம் கொடுத்தவனுக்கு ஒரு அறை குடுத்திட்டு கெத்தா நிக்கிறாரு போலீஸ். அதுதான் எனக்கு ரெம்பப் பிடிச்சுது.”

இப்படித் தங்களுக்குப் பிடித்த பல்வேறு காட்சிகளை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர். சில மாணவர்கள் தங்கள் மனத்தில் எழுந்த கேள்விகளைப் பகிர்ந்தனர்.

மாணவர்கள் திரும்பவும் பார்க்கலாமா என்று கேட்டனர். மீண்டும் அனைவரும் படத்தை ரசித்துப் பார்த்தோம். இந்தப் படம் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து வளரிளம்பருவ மாணவர்களிடையே பல்வேறு செயல்பாடுகளை வகுப்பறையில் தொடர முடிந்தது.

கையூட்டு வாங்குவது, கொடுப்பது குறித்த கலந்துரையாடல். இன்றைய சமூகத்தில் முதியவர்களின் நிலை குறித்த கலந்துரையாடல். பல்வேறு போட்டிகளில் பங்குபெற்ற அனுபவப் பகிர்வு போன்ற பல்வேறு செயல்பாடுகள் வகுப்பறையைப் பகிர்தலின் களமாக மாற்றின.

திணிக்கப்படும் பண்புகள்

குழந்தைகள் தங்களைச் சூழ்ந்திருக்கும் உலகை நன்கு கவனிக்கிறார்கள். இளம்பருவத்தில் சமூகப் பிழைகள் மீது கோபம் எழுகிறது. அது இயலாமையாக மாறி விடாமல் காக்கும் வழிமுறைகளே இன்றைய தேவை.

குழந்தைகளிடம் நீதி குறித்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் நம்மைப் பார்த்தே வாழ்க்கையைக் கற்றுக்கொள்கிறார்கள். நமது செயல்பாடுகளில் இருந்தே அனைத்தையும் உள்வாங்குகிறார்கள். நீதி சொல்லவும் கேட்கவும் சுவையாக இருக்கிறது. வாழ்வில் இல்லாமல் வாயில் சொன்னால் போதும் என்பதையும் நம்மிடமிருந்து அவர்கள் கற்றுக்கொண்டே இருக்கிறார்கள். 

மனிதப் பண்புகளை வலிந்து திணித்துக்கொண்டே இருக்கிறோம். இதைச் செய். இப்படிச் செய்! என்ற கட்டளைகளே இயந்திரத்தனமான செயல்களை உருவாக்குகின்றன. அதனாலேயே நாம் விரும்பும் வகையில் குழந்தைகளிடம் அவை நடிப்பாக மாறிவிடுகின்றன. அப்பா, அம்மா, உறவுகள், பள்ளி என ஆளுக்கு ஏற்றபடி, சூழலுக்கு ஏற்றபடி அது வெளிப்படுகிறது.

மனிதப் பண்புகள் இயல்பாகவே குழந்தைகளிடம் இருக்கின்றன. அந்த விதைகள் முளைத்து வேர்விட வேண்டும். அதற்கான காலம் கனியக் காத்திருக்க வேண்டும். பண்புகளை அனுபவமாக உணரும்போது அவை குழந்தைகளிடையே பழக்கமாக மலரும் சாத்தியக்கூறுகள் அதிகமாகலாம்.

‘தர்மம்’ படத்தின் காட்சிகள் இயல்பாகவும் வலிமையாகவும் பல மாதிரிகளை முன்னிறுத்துகின்றன. பலதரப்பட்ட மக்கள் நீதி, நேர்மையைப் பின்பற்ற முடியும் என்று செயலில் காட்டுகிறார்கள். இப்படியான உதாரணங்களே குழந்தைகளுக்குத் தேவை. அவை நம் வாழ்வில் குறைந்துகொண்டே வருவதுதான் வேதனை.

 

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x