Last Updated : 20 Nov, 2018 10:12 AM

Published : 20 Nov 2018 10:12 AM
Last Updated : 20 Nov 2018 10:12 AM

கரும்பலகைக்கு அப்பால்... 09 - தேவை காளைச்சண்டை அல்ல!

ஒன்பதாம் வகுப்பில் தொழில், வணிகம் சார்ந்த பாடங்கள். பாடப் பகுதிக்குள் நுழையும் முன் கலந்துரை யாடல்களை உருவாக்கலாம் எனத் தோன்றியது.

வணிகம் என்று கரும்பலகையில் எழுதினேன். இந்தச் சொல்லுக்குப் பொருள் என்ன என்று கேட்டேன். நேரம், வாரம், காலம், வாழ்க்கை, பொருள்களை மாற்றுதல், வருங்காலம், பண்டமாற்று, வியாபாரம், பொழுதுபோக்கு எனப் பல பொருள்களைச் சொன்னார்கள்.

வணிகம் என்பதுபோல வேறு சொற்களைச் சொல்ல முடியுமா என்று கேட்டேன். யோசனை, அமைதி தொடர்ந்தது. வணிகர், வணிகச் செய்தி, வணிக நிலையம் என்ற சொற்களைச் சொன்னேன்.  “ஆமாங்கய்யா, வியாபாரம்தான் வணிகம்” என்று உற்சாகக் குரல் எழுந்தது.

ஒரு தொழிலை ஏன் செய்யணும்?

வணிகம் என்றால் வியாபாரம். என்னென்ன வியாபாரம் செய்யலாம்?

உணவு, துணி, அரிசி ஆலை, மீன், தங்கம், புத்தகம், கார், வீட்டு உபயோகப் பொருட்கள், காலணி, வாகன உதிரி பாகங்கள் எனப் பதில்கள் வந்தன. சிலரிடம் ஏன் இந்த வியாபாரத்தைத் தேர்ந்தெடுத்தாய் என்று கேட்டேன். பெற்றோர் பார்க்கும் வியாபாரம் என்றார்கள்.

வியாபாரம் அல்லது ஒரு தொழிலை ஏன் செய்யணும்?

உயிர் வாழ, பணம் சம்பாதிக்க, தேவைகளை நிறைவேற்ற, பிறருக்கு உதவ, உழைப்பு, எதிர்காலம் நல்லா இருக்க என  மாணவர்கள் கூறினார்கள்.

உண்மைதான். வியாபாரம் செய்வதால் நன்மைகள் உண்டு. அதில் தீமைகள் உண்டா?

‘இருக்கு, தரமற்ற பொருட்களை விற்றல், அதிக விலை, போட்டி, பொறாமை, குழந்தைத் தொழிலாளர், ஏமாற்றுதல்” எனத் தீமைகளைப் பட்டியலிட்டார்கள்.

அடுத்ததாக ‘மணப்பாறை மாடுகட்டி...’ என்ற பாடலைத் திரையிட்டேன். பாடல் முடிந்ததும் ‘Man’ என்ற அனிமேஷன் படம்.  மனிதன் எவ்வாறு இயற்கையை அழிக்கிறான், இறுதியில் எப்படி அழிந்துபோகிறான் என்பதை ஆழமாக விளக்கும் படம்.

வருத்தமும் கோபமும் கலந்த குரல்கள்

படத்தைப் பார்த்து என்ன உணர்ந்தீர்கள்?

“மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை அழிக்கிறான். நிறைய அழிவுகளைச் செஞ்சுக்கிட்டே போறான்” என்று சொன்னார்கள்.

“அந்தப் பாட்டில் எல்லாவற்றையும் வளர்க்கிறார்கள். இந்தப் படத்தில் எல்லாவற்றையும் மனிதன் அழிக்கிறான்” என்று ஒரு மாணவன் சொன்னான்.

‘உண்மை. இந்தப் படத்தில் நிறையக் குறியீடுகள் இருக்கு. உதாரணத்துக்கு, கப்பலிலிருந்து கழிவுகளைக் கடலில் கொட்டும்போது கவனித்துப் பாருங்க. அந்த பேரல் மீது இருப்பது அணுக் கழிவுகளைக் குறிக்கும் குறியீடு’ படத்தை மீண்டும் பார்த்தோம்.

விவசாயம், தொழில், வியாபாரம் சார்ந்த உரையாடல்கள் நிகழ்ந்ததால்,‘மயிர்’ என்ற இன்னொரு குறும்படத்தைத் திரையிட்டேன். வறட்சியால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி, வழுக்கைத் தலையில் முடி வளர்க்க விரும்பும் இளைஞன், அழகு சார்ந்த வணிகம் குறித்த சிறிய படம். ஆனால் அழுத்தமான செய்தி.

படம் முடிந்தது. “விவசாயத்தை அழிச்சுக்கிட்டே போறோம். முடி, உயிரைவிட முக்கியமாப் போச்சு” என்று ஒரு குரல் எழுந்தது. வருத்தமும் கோபமும் கலந்த இளம் குரல்கள் ஆங்காங்கே ஒலித்தன.

“விவசாயத்தின் நிலை குறித்து நிறையப் பேசுவோம். இந்தப் படங்கள் குறித்த உங்களது எண்ணங்களை நாட்குறிப்பில் எழுதி வாங்க” என்றேன்.

மறு நாள் வகுப்புக்குச் சென்றதும் மாணவர்களின் நாட்குறிப்பு ஏடுகளை வாங்கிப்பார்த்தேன்.

விவசாயத்தின் இன்றைய நிலை, தண்ணீர் இல்லாததால் ஏற்பட்ட வறட்சி, இன்று விவசாயத்தை மதிப்பதில்லை, விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்படுகின்றன எனப் பிரச்சினைகளைப் பற்றி எழுதியிருந்தார்கள். முடி வளர்த்தல், முகத்தை அழகாக்குதல் போன்றவற்றுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கிறோம். விவசாயத்தை, இயற்கையைக் காக்க எதுவும் செய்வதில்லை என்பது போன்ற பல்வேறு எண்ணங்களுடன் விவசாயத்தைக் காப்பது யார் கடமை என்ற கேள்வியும் இருந்தது. இளம் தலைமுறையின் கோபம் எழுத்துகளில் கொப்பளித்தது.

ஐம்பதில் வளைக்க முடியாது. ஆனால், பதினைந்து அப்படியல்ல. உலகின் தீமைகளை உற்று நோக்கிக் கோபம் கொள்ளும் வயது. வேகமும் துடிப்புமிக்க இளைய தலைமுறையுடன் ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கையுடனும் உரையாட வேண்டாமா? அத்தகைய உரையாடல்களை வகுப்பறைக்குள் எளிதில் உருவாக்கிவிட முடியும். வகுப்பறைக்குள் வழிகாட்டிகள் இல்லாததாலேயே அவர்களின் அடையாளச் சிக்கல் மேலும் வலிமையாகிவிடுகிறது. அவர்க ளுடைய வேகம் எளிதில் தவறான திசைகளில் திரும்பிவிடுகிறது.

இளங்காளைப் பருவத்தினரை ஸ்பெயின் நாட்டுக் காளைச் சண்டை போலப் பல்வேறு தேர்வுகள், எதிர்காலப் பேராசைக் கனவுகள் போன்ற ஈட்டிகளால் குத்திக் கொல்கிறோம்.

அவர்களுக்குத் தேவை காளைச்சண்டை அல்ல, ஏறு தழுவுதல்.

 

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x