Last Updated : 14 Aug, 2018 10:38 AM

Published : 14 Aug 2018 10:38 AM
Last Updated : 14 Aug 2018 10:38 AM

துறை அறிமுகம்: ஏறுமுகத்தில் மரபு மருத்துவம்

ஆங்கில மருத்துவ முறைக்கு இணையாக அறிவியல் பரிசோதனை அடிப்படையிலான நம்பகத்தன்மையோடு பக்க விளைவுகளற்ற முழுமையான சிகிச்சை அளிப்பவை மரபு மருத்துவத் துறைகளான சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவம் ஆகியவை. மாறிவரும் வாழ்க்கை முறைகளில் பாரம்பரியம் மீது அதிகரிக்கும் ஆர்வத்தால் முன்பைவிட இத்துறைகள் மீது மக்களின் கவனம் திரும்பி உள்ளது.

மருத்துவர்–நோயாளி விகிதம் சீராக மரபு மருத்துவர்கள் அவசியம் என அரசு கருதுகிறது. ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கி ‘ஆயுஷ்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைச்சகம் வாயிலாக அரசு புதிய திட்டங்கள், நிதி உதவிகளைத் தந்து வருகிறது. ஆயுஷ் மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மட்டும் நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ.1,627 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக மரபு மருத்துவத் துறை சார்ந்த ஆராய்ச்சிகள், மருந்துப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் புதிய வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், மருத்துவச் சுற்றுலா சந்தையைக் குறிவைத்து, அனைத்து மரபு மருத்துவ முறைகளையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான ஒருங்கிணைந்த மருத்துவக் குடில்கள் தொடங்கப்படுகின்றன. இந்த வகையில் மாற்று மருத்துவச் சந்தையின் மதிப்பு 1000 கோடி டாலர்களில் இருந்து 2020-ல் 1,500 கோடி டாலருக்கு எகிறும் எனக் கணிக்கப்படுகிறது.

மாற்றி யோசிக்கலாம்

பிளஸ் டூ முடித்தவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கே அதிகமாகப் போட்டிபோடுகிறார்கள். இந்தப் படிப்பில் இடம் கிடைக்காதவர்களின் தேர்வாக மட்டுமே இருந்துவந்தது மரபு மருத்துவப் படிப்பு. அந்த நிலை தற்போது மாறிவருகிறது. மரபு மருத்துவத்தின் தனிச் சிறப்புக்காகவும் பல மாணவர்கள் இன்று ஆயுஷ் படிப்புகளைத் தேடிவரத் தொடங்கி இருக்கிறார்கள்.

அலோபதி படிப்புக்கான கால அளவு, பயிற்சிக் காலம், பாடத்திட்டம், தேர்வு நடைமுறைகள், ஆராய்ச்சிகள் என அனைத்துக்கும் நிகராக மரபு மருத்துவப் படிப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஆங்கில மருத்துவர் தகுதியைப் பெறுவதைவிட மரபு மருத்துவர் ஆவதற்கான கல்விச் செலவு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. ஆங்கில மருத்துவப் படிப்பைப் போன்றே முதுநிலைப் படிப்புகள் முதல் ஆராய்ச்சி படிப்புவரை மரபு மருத்துவத்திலும் சிறப்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.

பாரம்பரியப் பெருமை: ஆயுர்வேதம்

இந்தியாவில் பற்பசை முதல் வலி நிவாரணிகள் வரையிலான தனிநபர் பராமரிப்புப் பொருட்களின் சந்தையில் 41 சதவீதம் ஆயுர்வேதம் உள்ளது. B.A.M.S. எனப்படும் இளநிலை ஆயுர்வேதப் பட்டப் படிப்பை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தை வசப்படுத்தலாம்.

எங்கே படிக்கலாம்?

> ஜெய்ப்பூர் தேசிய ஆயுர்வேத மருத்துவ நிறுவனம்

> வாரணாசி மருத்துவ அறிவியல் நிறுவனம்

> ஜோத்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆயுர்வேதப் பல்கலைக்கழகம்

> நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி

ஆகியவை ஆயுர்வேத மருத்துவக் கல்வி நிறுவனங்களில் பிரசித்தி பெற்றவை. இவை தவிர சென்னையில் மூன்று தனியார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

அரேபிய யுனானி

அரேபியர்களால் கொடையாக உலகுக்கு வழங்கப்பட்ட ஒரு முழுமையான சிகிச்சையாக அறியப்படுவது யுனானி. ஆயுர்வேத மருந்துப் பொருட்களுக்கு இணையாக இந்தியாவில் தயாரிக்கப்படும் யுனானி மருந்துப் பொருட்களுக்கு உலகெங்கும் பரவலான சந்தை உள்ளது.

யுனானியில் இளநிலை மருத்துவப் படிப்பை (B.U.M.S.) முடித்தவர்கள் முதுநிலையாக எம்.டி., அல்லது எம்.எஸ்., படிக்கலாம். அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தை மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கான எம்.டி படிப்புகள் உள்ளன. இந்திய யுனானி மருத்துவர்கள் மாதம் பல லட்சம் ஊதியத்துடன் அதிக அளவில் வளைகுடா நாடுகளில் பணிபுரிகிறார்கள்.

எங்கே படிக்கலாம்?

> பெங்களூருவில் அமைந்திருக்கும் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் புகழ் பெற்றது.

> தமிழகத்தில் அரசு யுனானி மருத்துவக் கல்லூரி சென்னை அரும்பாக்கத்தில் செயல்படுகிறது.

> சென்னை, கோயம்புத்தூர், சேலத்தில் தனியார் யுனானி மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.

உடலும் மனமும்: ஹோமியோபதி

ஜெர்மனியைத் தாயகமாகக் கொண்ட இந்த மருத்துவ முறை அலோபதிக்கு அடுத்தபடியாக மருத்துவ உலகில் கோலோச்சுகிறது. உடல் பாதிப்புகள் மட்டுமன்றி மனம், உணர்வுரீதியிலான காரணங்களை ஆராய்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையாக இது மதிக்கப்படுகிறது. B.H.M.S. படித்து முடித்து ஹோமியோபதி மருத்துவராக உடல் தகுதி அவசியம். பொதுவாகப் பார்வை, செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் இழந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.

எங்கே படிக்கலாம்?

> கொல்கத்தா தேசிய ஹோமியோபதி மருத்துவ நிறுவனம்

> மகாராஷ்டிரா மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், நாசிக்

> கோழிக்கோடு அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி

> திருச்சூரில் செயல்படும் கேரள மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

> ஜெய்ப்பூர் ஹோமியோபதி பல்கலைக்கழகம் போன்றவை ஹோமியோபதி பயில்வதற்கான முன்னணிக் கல்வி நிறுவனங்களாகும்.

> தமிழகத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மதுரையில் செயல்படுகிறது.

> சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம், நாமக்கல் ஆகிய இடங்களில் 9 தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன.

யோகா மற்றும் இயற்கை மருத்துவம்

இயற்கையாக உடல் தனது நோய்த்தன்மையில் இருந்து விடுபடும் ஆற்றலை ஊக்குவித்தல், உணவையே மருந்தாகப் பயன்படுத்துதல், உடலின் நச்சுகளைக் கழிவாக வெளியேற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் பக்க விளைவுகள் மற்றும் உபாதைகள் இன்றி சிகிச்சை அளிப்பதை இயற்கை மருத்துவம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதனுடன் இணைந்த யோகா (B.N.Y.S.) மூலம் உடலுக்கு உரிய பயிற்சி அளிக்க முடிகிறது.

எங்கே படிக்கலாம்?

> சென்னை அரும்பாக்கத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி.

> கோயம்புத்தூர், சேலம், கன்னியாகுமரியில் தனியார் கல்லூரிகள் இப்படிப்பை அளிக்கின்றன.

தமிழ் போற்றும் சித்த மருத்துவம்

அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் சித்த மருத்துவர் பணியிடம் உண்டு. இவை தவிர தனியார் மருத்துவ சேவையிலும் வரவேற்பு உடையது. சித்த மருத்துவம் (B.S.M.S.) பயில பிளஸ் டூவில் தமிழை முதல் பாடமாகப் படித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அண்மையில் அரசு நீக்கியுள்ளது.

ஆனால், சித்த மருத்துவப் படிப்பின் முதலாமாண்டில் தமிழ் கட்டாயப் பாடமாகும்.

எங்கே படிக்கலாம்?

> பாளையங்கோட்டையில், சென்னை அரும்பாக்கத்தில் தலா ஒரு அரசு சித்த மருத்துவக் கல்லூரி

> கன்னியாகுமரியில் 2, சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் 7 தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள்

> நாட்டிலேயே முதல் முறையாக 'சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம்’ ரூ.60 கோடியில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட உள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x