

ஆகஸ்ட் 12: தேசிய நூலகர் நாள்
‘சொர்க்கம் என்பதை ஒரு பெரிய நூலகமாகத்தான் நான் கற்பனை செய்து வைத்திருக்கிறேன்’ என்றார் தத்துவஞானி சாக்ரடீஸ். மேலை நாடுகளில் பொது நூலகங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு நிகரான மரியாதையைப் பெற்றிருக்கின்றன.
ஆனால், தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்த பொது நூலகமாக இருந்தாலும், அங்கே நீங்கள் ஒரு காட்சியைக் காண முடியும். கூரைகளில் ஒட்டடை, புத்தகங்களில் தூசி, ஓடாத மின் விசிறி, அமர்வதற்குப் போதுமான இருக்கைகள் இல்லாதது, இன்முகம் காட்டாத நூலகர் ஆகியவை அடங்கிய காட்சியே அது. பெரும்பாலான பொது நூலகங்களின் நிலை இதுதான்.
இந்த நூலகர்கள் எல்லாம், ‘இந்திய நூலக அறிவியலின் தந்தை’ எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனைப் பற்றியும், அவர் அளித்துச் சென்ற ‘நூலக அறிவியலின் ஐந்து விதிகள்’ பற்றியும் தெரிந்துகொண்டால், குறைந்தபட்சம், ‘நூலகம் என்பது புத்தகங்களைக் கடன் கொடுக்கும் இடம்’ எனும் புரிதலைத் தங்கள் அளவிலாவது மாற்றிக்கொள்வார்கள் என நம்பலாம்!
கணிதமே முதல் காதல்!
1892 ஆகஸ்ட் 9 அன்று, சீயாழியில் (இன்றைய சீர்காழி) ராமாமிர்தம் – சீதாலட்சுமி தம்பதிக்குப் பிறந்தார், சீயாழி ராமாமிர்த ரங்கநாதன். சுருக்கமாக எஸ்.ஆர்.ரங்கநாதன். ஆகஸ்ட் 9 அன்று பிறந்திருந்தாலும், பள்ளிச் சான்றிதழ்களில் அவரது பிறந்த தேதி ஆகஸ்ட் 12 என்று பதிவானது. எனவே, அதுதான் பலராலும் அதிகாரப்பூர்வமான ரங்கநாதனின் பிறந்த தேதியாகவும் கொள்ளப்படுகிறது.
ஆறு வயதில் தந்தையை இழந்த ரங்கநாதன், தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கணிதத் துறையில் இளநிலைப் பட்டமும் மாநிலக் கல்லூரியில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். மங்களூர், கோவை உள்ளிட்ட அரசுக் கல்லூரிகளிலும் மாநிலக் கல்லூரியிலும் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றினார். இன்றைக்கு அவர் சிறந்த நூலகராக அறியப்பட்டாலும், அவருடைய முதல் காதல், கணிதம் கற்பித்தலே!
1924-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகர் ஆனார். அடுத்த 20 ஆண்டுகளுக்கு, ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல், பணியாற்றினார். தனக்குத் திருமணமான நாளில்கூட, திருமண நிகழ்ச்சிகள் முடிந்தவுடன், மதியம் பணிக்கு வந்துவிட்டாராம்!
நூலக அறிவியலில் மேலும் சில விஷயங்களை அறிந்துகொள்வதற்காக, லண்டனுக்குச் சென்றார் ரங்கநாதன். அங்கு நூலகங்கள் துறை வாரியாக, அறிவியல்பூர்வமாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தன. அதன் விளைவே ‘கோலன் கிளாஸிஃபிகேஷன்’ எனும் அவருடைய நூல் பகுப்பாக்க முறை உருவானது. புத்தகங்களைத் துறை வாரியாகப் பிரித்து, அவற்றில் உட்பிரிவுகளை ஏற்படுத்தி, அவற்றுக்குத் தனித்தனி எண்கள் ஒதுக்கி, அவற்றை அலமாரிகளில் முறையாக அடுக்கிவைத்து, அவற்றை வகைமைப்படுத்தி, பட்டியலிடுவதுதான் இந்த முறை.
உதாரணத்துக்கு, ’19-ம் நூற்றாண்டில் இதய அறுவை சிகிச்சையின் வரலாறு’ எனும் தலைப்பில் ஒரு புத்தகம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் புத்தகத்தை வெறுமனே ‘மருத்துவம்’ எனும் தலைப்பின் கீழ் அதுவரை வகைமைப்படுத்தி வந்தார்கள். ரங்கநாதனின் ‘கோலன் நூல் பகுப்பு முறை’ அறிமுகமாவதற்கு முன்பு அதுதான் நிலை.
ஆனால், ரங்கநாதன் அதே புத்தகத்தை ‘மருத்துவம்’, ‘அறுவை சிகிச்சை’, ‘இதயம்’, ‘19-ம் நூற்றாண்டு’ என்று பல்வேறு உட்பிரிவுகளை உருவாக்கி, புத்தகத்தை அடுக்கிவைப்பார். இதனால், குறிப்பிட்ட இந்தப் புத்தகத்தைத் தேடி வரும் ஒருவர், மிகக் குறைந்த நேரத்தில், மிகக் குறைந்த தேடலில் இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம்.
நூலக வரலாற்றில் ‘முதல்’கள்…
ரங்கநாதன், தனது ‘கோலன் நூல் பகுப்பு முறை’யை 1933-ல்தான் அறிமுகப்படுத்தினார். ஆனால், நூலகங்களைச் சாதாரண மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியை, 1929-லேயே ஆரம்பித்துவிட்டார். லண்டனில் நூலக அறிவியல் பயிற்சி முடித்துத் திரும்பியவுடன், ‘சென்னை நூலகச் சங்கம்’ ஒன்றை ஏற்படுத்தி மாட்டு வண்டிகளில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு, கிராமங்களை நோக்கிச் சென்றார். நாட்டின் முதல் நடமாடும் நூலகம் அப்படித்தான் மன்னார்குடியில் தோன்றியது.
அதுவே, ‘விரிவாக்கக் கல்வி’யின் முதல் படியாகவும் அமைந்தது. அதே காலத்தில்தான் நூலக அறிவியலில் மக்களுக்குப் பயிற்சியளிக்க, தனிப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அது பின்னாளில், சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, இந்தியாவில் நூலகச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தவர் ரங்கநாதன். இவரது முயற்சியால் 1948-ல், தமிழகத்தில்தான் முதன்முதலில் நூலகச் சட்டம் இயற்றப்பட்டது.
அதே ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் பட்ட மேற்படிப்பையும் 1950-ல் முனைவர் படிப்பையும் அறிமுகம் செய்தார் ரங்கநாதன். காமன்வெல்த் நாடுகளிலேயே முதன்முதலாக நூலக அறிவியலில் இத்தகைய பட்டங்கள் வழங்கப்பட்டது அதுவே முதல் முறை!
இவை மட்டுமல்லாது, இலங்கையில் இருந்த யாழ் நூலகத்தை வடிவமைத்தது, நூலகங்களில் ‘ரெஃப்ரென்ஸ்’ பிரிவு தொடங்கியது, நூலகத்தில் புத்தகங்களை வாசகர்களே தேடி எடுத்துக்கொள்ளும் ‘ஓபன் ஆக்சஸ் முறை’, வீட்டுக்கே சென்று நூல்கள் தருவது, நீண்ட நேரத்துக்கு நூலகங்களைத் திறந்துவைப்பது எனப் பல புதுமைகளைச் செய்தவர் ரங்கநாதன்.
ஐந்து விதிகள்!
1931-ல் ‘நூலக அறிவியலின் ஐந்து விதிகள்’ எனும் படைப்பை வெளியிட்டார் ரங்கநாதன். அந்த ஐந்து விதிகள்: புத்தகங்கள் பயன்படுத்தப்படுவதற்கானவை என்பது முதல் விதி. அதாவது, புத்தகங்கள், மக்களால் எளிதில் அணுகப்பட வேண்டும் என்பதே இதன் சாராம்சம்.
இரண்டாம் விதி, ஒவ்வொரு வாசகருக்குமான புத்தகம். வாசகர், தான் விரும்புகிற புத்தகத்தைத் தானே தேடிச் சென்று எடுத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு புத்தகத்துக்கும் யாராவது ஒரு வாசகர் இருப்பார், என்பது மூன்றாம் விதி. அதாவது, இந்த உலகத்தில் ‘இது யாருக்கும் பயன்படாத புத்தகம்’ என்று எதுவுமில்லை என்பது இதன் உட்பொருள்.
நான்காம் விதி, வாசகரின் நேரத்தைச் சேமிக்க வேண்டும். நூல் பகுப்பு முறை ஏற்படுத்தப்பட்டதே இதற்காகத்தான்.
ஐந்தாம் விதி, நூலகம் என்பது எப்போதும் வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு அமைப்பு. நூலகம் என்பது புத்தகம் தேடுவதற்கான இடம் என்பதைத் தாண்டி, மருத்துவ உதவிகள் செய்வது, வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துவது, ஐ.ஏ.எஸ். போன்ற குடிமைப் பணித் தேர்வுகளுக்குப் பயிற்சியளிப்பது என இன்றைக்கு, பொது நூலகங்கள் வளர்ந்திருப்பதே இதற்குச் சான்று.
தன் வாழ்நாள் முழுவதும் காந்திய வழியில் எளிமையாக வாழ்ந்த ரங்கநாதன், தன் கணிதப் பேராசிரியர் எட்வர்ட் ராஸ் நினைவாக 1925-ல், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் ‘கணிதத் துறை நல்கை’ உருவாக்கவும், 1956-ல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தன் மனைவி சாரதா ரங்கநாதனின் பெயரில் ‘நூலக அறிவியலுக்கான இருக்கை’யை உருவாக்கவும் தன் சேமிப்புகளை வாரி வழங்கினார்.
1972 செப்டம்பர் 27-ல் மறைந்த இவரைப் பற்றி, பிரபல எழுத்தாளர் ராண்டார் கை, அருமையான ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார் (காண: http://www.isibang.ac.in/~library/portal/). நூலக அறிவியலுக்காக உழைத்த இவரது பிறந்த நாளை ‘தேசிய நூலகர் நாளாக’ கொண்டாடுவதைத் தவிர வேறு என்ன பெரிய பெருமையை நாம் இவருக்குத் தந்துவிட முடியும்?எஸ்.ஆர்.ரங்கநாதன்