

ஆங்கிலேயரின் வருகைக்குப் பின்னர் இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் பெருநகரமாக சென்னை விளங்கினாலும் இன்னும் பழமையையும் கட்டுப்பெட்டித்தனங்களையும் அது இழக்கவில்லை. நவீனமும் மரபும் இழைந்து உறவாடும் சென்னையில் நூற்றாண்டைக் கடந்து நிற்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் அகில இந்திய அளவில் கல்வி சேவைக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் புகழ்பெற்றவை.
இந்தக் கல்வி நிறுவனங்கள் அறிவியல், கணிதம், கலை, இலக்கியம், அரசியல் எனப் பல துறைகளில் உலகளாவிய பங்களிப்பு செய்த அறிஞர்களையும் வழங்கியுள்ளன. சென்னை என்னும் பெரிய ஆலமரம் உலகை நோக்கி நீட்டிய கிளைகளில் சிலர் இவர்கள்…
நரம்பியலின் மார்க்கோபோலோ
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்தவர்; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தை நரம்பியல், உளவியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் விளையனூர் சுப்ரமணியன் ராமச்சந்திரன் அவருடன் மருத்துவம் படித்த சகாக்களால் ‘சென்னைப் பையன்’ என்று பிரியத்துடன் அழைக்கப்படுபவர்.
பரிணாமவியல் அறிஞரும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளருமான ரிச்சர்ட் டாக்கின்ஸ், இவரை ‘நரம்பியலின் மார்க்கோபோலோ’ என்று குறிப்பிட்டுள்ளார். பார்வை உணர்வு, ஆட்டிசம், பொய்த்தோற்ற உறுப்புகள் சார்ந்து தனது ஆராய்ச்சியின் மூலமும் சிகிச்சை வழியாகவும் இவர் நிகழ்த்திய கண்டுபிடிப்புகள் தனித்துவமானவை. மனித மனத்தின் செயல்பாடு குறித்து அசாத்தியமான உள்ளுணர்வுகளும் நேரடி சிகிச்சை அனுபவங்களும் உள்ள பேராளுமைகளுள் ஒருவர் என்று நோபல் அறிஞர் எரிக் காண்டல் இவரைப் பற்றிக் கூறியுள்ளார்.
இவர் எழுதிய நூல்களான ‘எமர்ஜிங் மைண்ட்’, ‘டெல் டேல் ப்ரெய்ன்’ ஆகியவை புகழ்பெற்றவை. இந்திய அரசியல் சாசன வரைவை அம்பேத்கருடன் இணைந்து எழுதிய சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரின் பேரனான ராமச்சந்திரனுக்குத் தற்போது 67 வயது. சோழர் காலச் செப்புச்சிலைகளிலும் கர்நாடக இசையிலும் ஓவியங்களிலும் ஈடுபாடும் நிபுணத்துவமும் கொண்டவர். நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர்.
கிராமப்புற விவசாயியின் வரைபடம்
வெகுஜன ஊடகங்களில் அதிகமாக எழுதப்படாத இந்திய கிராமப்புற விவசாயிகளின் நிலை குறித்து தொடர்ந்து எழுதிய கட்டுரைகளால் இந்தியப் பொது மனசாட்சியை உலுக்கியவர். விவசாயத் துறை மீது அரசுகள் காட்டும் அலட்சியம், கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலங்களை இந்திய நகர்ப்புற மக்களுக்கு இவர்தான் தனது செய்திக்கட்டுரைகள் வழியாக முதலில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி வி.வி. கிரியின் பேரனான பி. சாய்நாத், சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்தவர். ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் மகசேசே விருதைப் பெற்ற பி. சாய்நாத்,
‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் கிராமப்புற விவகாரங்கள் பிரிவின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சாய்நாத் எழுதிய புத்தகமான ‘எவரிபடி லவ்ஸ் எ குட் ட்ரொட்’, வெளிவந்த 1996-ம் ஆண்டிலிருந்து சிறப்பாக விற்பனையாகும் கட்டுரைப் புத்தகமாக திகழ்கிறது. இந்தப் புத்தகத்துக்காக இந்தியா முழுவதும் ஒரு லட்சம் கிலோமீட்டர் பயணம்செய்து விவசாயிகளைச் சந்தித்த அனுபவம் இவருக்கு உண்டு.
இந்தியாவிலும் வெளிநாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் இந்த நூல் பாடநூலாகப் பயிலப்படுகிறது. இதன் 34-வது பதிப்பை சமீபத்தில் பெங்குவின் நிறுவனம் பெங்குவின் க்ளாசிக் பிரிவில் வெளியிட்டுள்ளது. கிராமப்புற விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசுக் கொள்கை உருவாக்கத்தில் 1990-கள் முதல் சாய்நாத்தின் கட்டுரைகள் அதிகபட்ச தாக்கத்தைச் செலுத்திவருகின்றன.
சினிமாவின் முதல் பார்வையாளன்
முதல் படமான ‘ராக்’-ல் தொடங்கி எட்டு தேசிய விருதுகளைப் பெற்ற இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ஸ்ரீகர் பிரசாத், சென்னை புதுக்கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். ப்ரீஸ், ஃபேட், மான்டாஜ் எடிட்டிங் முறைகளில் வல்லவராக அறியப்படும் ஸ்ரீகர் பிரசாத், தந்தை அக்கினேனி சஞ்சீவியிடம் எடிட்டிங்கைக் கற்றவர். “நான் படித்த இலக்கியம், சினிமா என்னும் படைப்பை அனுபவித்துப் பணியாற்றுவதற்கான மனநிலையை எனக்குத் தந்தது.
இதழியல் மீதான ஆர்வம் எனக்கு ஒரு கதையைச் சிறப்பாகச் சொல்வதற்குக் கற்றுத் தந்தது. ஒரு இயக்குநர் தன் கதையைச் சொல்வதற்கு நான் உதவுகிறேன்.” என்கிறார்ஸ்ரீகர் பிரசாத். இயக்குநர்கள் மணிரத்னத்துக்குப் பிரியமான படத்தொகுப்பாளரான இவர், இந்தியாவின் சிறந்த இயக்குநர்களான விஷால் பரத்வாஜ், ஷாஜி. கருண், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். கையால் பிலிமை வெட்டி படத்தொகுப்பு செய்யும் பணியை மூவியாலாவில் தனது 19 வயதில் ஆரம்பித்து எடிட்டிங் தொழில்நுட்பத்தில் நடந்த அத்தனை வளர்ச்சிகளோடும் சேர்ந்து வளர்ந்த சில டெக்னீசியன்களில் இவரும் ஒருவர்.
சக்திவாய்ந்த பெண்மணி
பாரம்பரியம் மிக்க சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.எஸ்சி. வேதியியல் படித்தவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட்டில் படித்துவிட்டு அமெரிக்கா சென்ற இந்திரா நூயி உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளில் ஒருவர் என்று அமெரிக்க அதிபரால் கூறப்படுபவர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய பெண்ணாக உலகின் சக்திவாய்ந்த பெருநிறுவனங்களில் ஒன்றான பெப்சிகோ குளிர்பான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றியுள்ள இவர், தனது ஓய்வை சமீபத்தில் அறிவித்தார்.
2006-ம் ஆண்டு பெப்சி தலைமைப் பதவியை இவர் ஏற்றபோது, அமெரிக்காவின் முன்னணி நிலை வகிக்கும் 500 பொது நிறுவனங்களில் ஒரு டஜனுக்கும் குறைவான பெண்களே தலைமைப் பதவியில் இருந்தனர்.
“தற்போது நான் ஒரு ரோல்மாடலாகிவிட்டேன். எல்லாரும் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நடவடிக்கையிலும் நான் கவனத்துடன் ஈடுபட வேண்டும்.” என்று பதவியேற்றவுடன் பிபிசி நேர்காணலில் கூறினார். அதிபர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஹிலாரி கிளிண்டன் இவரது தோழி.
தமிழகக் கல்வியின் கட்டுமானக் கர்த்தா
சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படித்து அமெரிக்காவின் மின்னசோட்டாவில் பி.எச்டி. முடித்த முனிரத்னா அனந்த கிருஷ்ணன் கான்பூர் ஐ.ஐ.டி.யின் தலைவராகவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். தமிழக அரசின் இணைய வழி நிர்வாகத்துறைக்கு ஆலோசகராகப் பல முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தியவர். கணினித் தமிழ் பயன்பாட்டைப் பரப்பியதில் இவரது பங்களிப்பு அதிகம்.
கணினிப் பொறியியல் படிக்கும் மாணவர்கள் கணினித் தமிழில் ஆராய்ச்சி செய்ய முன்வர வேண்டுமென்பது இவரது கனவு. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம்வரை பாடங்களை மறுவரைவு செய்யும் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவராகத் தற்போதும் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதாலும் இவர் கவுரவிக்கப்பட்டுள்ளார். அறிவியல் வளர்ச்சிக்காக பிரேசில் அரசு தரும் உயர்ந்த விருதான நேஷனல் ஆர்டர் ஆப் சயின்டிஃபிக் ஆப் மெரிட்-ஐ வென்றுள்ளார்