துறை அறிமுகம்: சிறப்பாசிரியர் ஆக முன்வருவோம்!

துறை அறிமுகம்: சிறப்பாசிரியர் ஆக முன்வருவோம்!
Updated on
3 min read

ஆசிரியப் பணி என்பதை அறப் பணி என்பார்கள். அதிலும் சிறப்புக் குழந்தைகளுக்கு ஆசிரியராகும்போது, அந்த ஆசிரியப் பணி முழுமையடைகிறது. சிறப்புக் குழந்தைகள் மீதான அக்கறையும் விழிப்புணர்வும் தற்போது அதிகரித்துவரும் சூழலில் அவர்களுக்கான ஆசிரியராகும் தகுதியை வளர்த்துக்கொள்வோருக்குச் சிறப்பான ஊதியமும் மன நிறைவும் கொண்ட பணிவாய்ப்பும் காத்திருக்கின்றன.

காத்திருக்கும் வாய்ப்புகள்

மனம், உடல் பாதிப்பு அடிப்படையில் சிறப்புக் குழந்தைகள் மருத்துவ ரீதியாக அடையாளம் காணப்படுகிறார்கள். பெற்றோரால் கூடப் போதிய அரவணைப்பை வழங்க இயலாத இந்தக் குழந்தைகளைப் பராமரித்து, அவர்களின் தடுமாற்றங்களை உள்வாங்கி, திறன்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பு சிறப்பு ஆசிரியரைச் சாரும்.

இதனாலேயே வெளிநாடுகளில் பொதுவான ஆசிரியர்களைக் காட்டிலும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகம். நம் நாட்டில் இந்த விழிப்புணர்வையும் சிறப்பு ஆசிரியர்களின் முக்கியத்துவத்தையும் நகரப் பகுதிகளில் உணரத் தொடங்கி உள்ளனர். இந்த வகையில் அதிகரித்துவரும் சிறப்புப் பள்ளிகள், அரசு சார்பிலான அதிகரிக்கும் பணி வாய்ப்புகள் ஆகியவற்றை உத்தேசித்து அவை தொடர்பான கல்வித் தகுதிகளை வளர்த்துக்கொள்வது விரைவில் பயனளிக்கும்.

தற்போதைக்குத் தன்னார்வ அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசுத் துறைகள், பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பாசிரியர்களுக்கான பணியிடங்கள், தனியார் சிறப்புப் பள்ளிகள், பராமரிப்பு மையங்கள், சிறப்புப் பயிற்சியாளர்கள், எனப் பரந்த பணி வாய்ப்புகள் சிறப்புக் குழந்தைகளுக்கான சிறப்பாசிரியர்களுக்குக் காத்திருக்கின்றன.

டிப்ளமோ படிப்புகள்

பிளஸ் டூ முடித்ததும் ஆசிரியப் பணிக்கான D.T.Ed. பட்டயப் படிப்பை மேற்கொள்வது போலவே, சிறப்புக் குழந்தைகளுக்கான D.S.E. (Diploma in Special Education) எனப்படும் சிறப்புக் கல்விக்கான பட்டயப் படிப்பையும் பெறலாம். சிறப்புக் குழந்தைகளின் பல்வேறு பாதிப்புகளைப் பொறுத்து இந்தப் பட்டயப் படிப்புகளின் உட்பிரிவுகளில் சேரலாம்.

உதாரணத்துக்கு, மனவளர்ச்சி குன்றியவர்கள், செரிபரல் பால்ஸி, ஆட்டிசம், கற்றல் குறைபாடு, ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள், செவித்திறன் குறைபாடு, பார்வைக் குறைபாடு எனத் தொடங்கி அவை நீளுகின்றன.

இரண்டாண்டுப் படிப்பில் முதலாமாண்டு அனைவருக்கும் பொதுவாகவும் இரண்டாமாண்டில் குறிப்பிட்ட பாடப் பிரிவைச் சார்ந்தும் பாடத்திட்டம் அமைந்திருக்கும். இந்தியப் புனர்வாழ்வு கவுன்சிலின்(Rehabilitation Council of India- http://www.rehabcouncil.nic.in/) அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இவற்றைப் படிக்கலாம். இவற்றில் பல்வேறு படிப்புகளைத் தொலைநிலைக் கல்வியாகவும் பெறலாம். ஆசிரியர் பணிக்குத் தங்களைத் தயார் செய்பவர்கள், வழக்கமான படிப்புகளுடன் கூடுதலாக இந்தப் பட்டயப் படிப்பையும் மேற்கொண்டு தங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ளலாம்.

praveenajpgபிரவீனா கார்மெல்right

பி.எட். படித்தல் சிறப்பு

பட்டயப் படிப்பைப் போன்றே பட்டப் படிப்பாகவும் சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர் தகுதியைப் பெறலாம். Rehabilitation science, Rehabilitation management என பி.எஸ்சி. பட்டமாகவும் இவற்றைப் பெறலாம். சிறப்பாசிரியர்களுக்கான பி.எட். பட்டத்தைப் பெறுவதில் ஆசிரியப் பணிக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்குக் கூடுதல் அனுகூலம் உண்டு என்கிறார், திருச்சி சிறப்புப் பள்ளி ஒன்றின் இயக்குநரான பிரவீனா கார்மெல். “எந்தத் துறையில் பட்டப் படிப்பு முடித்தவர்களும் தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் வாயிலாகச் சிறப்பாசிரியருக்கான பி.எட். படிப்பில் சேரலாம். பின்னர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அரசுப் பள்ளி ஆசிரியர் ஆகலாம்.

அரசுப் பணி தாமதமானால் தனியார் பள்ளி அல்லது சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளிகளில் ஆசிரியர் ஆகலாம். மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த சிறப்பாசிரியர் பணியிடங்களுக்குத் தொகுப்பூதியம் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது. மற்றபடி சிறப்புப் பள்ளிகளில் தலா 2 ஆசிரியர் பணியிடங்களும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் அரசுப் பணியிடமாகப் பள்ளிக்கு ஓர் ஆசிரியர் பணியிடமும் வாய்ப்புகளாக உள்ளன.

இந்தச் சிறப்பாசிரியர் பி.எட். சேர்க்கையில் மாற்றுத் திறன் அடைவைப் பொறுத்து முன்னுரிமைகள் உண்டு. விண்ணப்பதாரர் மாற்றுத் திறனாளியாக இருந்தாலோ அவருடைய பெற்றோர் மாற்றுத் திறனாளி என்றாலோ 10 மதிப்பெண்கள் கூடுதலாகக் கிடைக்கும். மேலும் சிறப்புப் பள்ளிகளில் ஆசிரியப் பணி அனுபவமாகக் குறைந்தது 2 ஆண்டுகள் பெற்றிருப்பின் கூடுதலாக 10 மதிப்பெண்கள் கிடைக்கும். மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகையும் தனியாக உண்டு” என்று விளக்குகிறார் பிரவீனா கார்மெல்.

சான்றிதழ் படிப்புகள்

பட்டய, பட்டப் படிப்புகள் வரிசையில் சான்றிதழ் படிப்புகளுக்கும் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் பணி வாய்ப்பு உண்டு. இந்தப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள், தெரபிஸ்ட், உதவி ஆசிரியர் ஆகியோர் வரிசையில் குழந்தைப் பராமரிப்பாளர் பணியிடமும் முக்கியமானது. இந்தச் சிறப்புக் குழந்தைகள் பராமரிப்புக்கு எனப் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன.

அடிப்படைப் பள்ளிக் கல்வித் தகுதி இருந்தால் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோராக இருப்பவர்களும் இந்தப் பராமரிப்பாளர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். சான்றிதழ் தகுதியுடன் பராமரிப்பாளராகப் பணியில் சேருபவர்களுக்கு, அனுபவத்தின் அடிப்படையில் இதர பணியிடங்களுக்கான பதவி உயர்வும் கிடைக்கும்.

ஒரே குடையின் கீழ் பல்வேறு படிப்புகள்

மத்திய அரசின் நேரடி கல்வி நிறுவனமான NIEPMD (http://niepmd.tn.nic.in/) சிறப்பாசிரியர்களுக்கான பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. சிறப்புக் குழந்தைகளின் பல்வேறு குறைபாடுகளின் கீழ் ஏராளமான பட்டயப் படிப்புகளுடன் அவர்களுக்கான பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி படிப்புகளையும் வழங்குகிறது. சிறப்பாசிரியர்களுக்கான பி.எட்., எம்.எட்., மருத்துவ உளவியல் நிபுணருக்கான எம்.ஃபில்., முதுநிலைப் பட்டயம் போன்றவற்றையும் இங்குப் படிக்கலாம். தமிழகத்தில் இந்த நிறுவனம் சென்னை அருகே முட்டுக்காட்டில் அமைந்துள்ளது.

மனநிறைவே மதிப்பானது

sirappujpg

கல்வித் தகுதி எதுவானாலும் இவை அனைத்துக்கும் விஞ்சிய தகுதி ஒன்று சிறப்புக் குழந்தைகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கு அவசியம். “சிறப்புக் குழந்தைகளைப் புரிந்துகொள்வது, அவர்களின் தனி உலகில் பிரவேசித்து அவர்களுடன் உரையாடுவது, அவர்களின் நம்பிக்கையைப் பெறுவது, இவற்றின் வழியாக அவர்களின் திறன்களை மேம்படுத்துவது ஆகியவை மிகவும் முக்கியமானவை.

சாதாரணக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதைவிடச் சிறப்புக் குழந்தைகளிடம் கற்பித்தலைக் கொண்டுசெல்வதற்கு அசாத்திய பொறுமை தேவைப்படும். மேலும் அவர்களுடன் இருக்கையில் சகிப்புத்தன்மை கடைப்பிடிப்பது அவசியம்.

சிறப்புக் குழந்தைகளுக்கான பணியில் ஊதியத்தைவிட மனநிறைவும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான மகிழ்ச்சியுமே மதிப்புமிக்கது” என்கிறார் சிறப்புக் குழந்தைகள் ஆசிரியரான வானதி பாலசுப்பிரமணியன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in