Last Updated : 22 Aug, 2018 12:04 PM

 

Published : 22 Aug 2018 12:04 PM
Last Updated : 22 Aug 2018 12:04 PM

ஆயிரம் வாசல் 18: கூத்தும் கற்கலாம் பாடமும் படிக்கலாம்

வட தமிழகத்தின் முக்கியக் கலையாகவும் இசை நாடக வடிவமாகவும் கட்டைக்கூத்து இருந்துவருகிறது. இக்கூத்து அழியாமல் இருக்க வரும் தலைமுறைக் குழந்தைகள் அதை மதிப்பு மிக்கதாக உணர வேண்டும்.

கூத்தைக் குழந்தைகள் முறையாகக் கற்க வேண்டும் என்ற எண்ணம் முதுபெரும் கூத்துக் கலைஞரான பொன்னுச்சாமி அவர்களின் மகன் ராஜகோபாலுக்கு இருந்திருக்கிறது. தான் வசிக்கும் பகுதியில் உள்ள கிராமக் குழந்தைகளுக்கு 1995 முதல், மாலை நேரத்தில் கூத்தை அவர் கற்றுக்கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

மாலை நேரத்தில் வெவ்வேறு இடங்களில் கற்றுக்கொடுப்பதைவிட ஒரு பள்ளிக்குள் இதைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் இன்னும் முறையாகச் செயல்பட முடியும் என்பதை உணர்ந்தனர் ராஜகோபாலும் அவருடைய மனைவி ஹன்னாவும். ஆகவே, கல்வியோடு இணைத்துக் கூத்தை முழுமையாகவும் கற்றுத்தரும் நோக்கில் அவர்கள் இருவரும் 2002-ல் கட்டைக்கூத்துப் பள்ளியைத் தொடங்கினர். 16 ஆண்டுகளாகத் தங்கும் விடுதியும் பள்ளியும் இணைந்து இயங்கிவருகின்றன. பள்ளி நேரத்தில் பாடமும் மற்ற நேரத்தில் கூத்து, பிற விஷயங்களையும் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

காலையில் 7 மணி முதல் 8 மணிவரை அடவு,  மதியம் 12 முதல் 1 வரை கூத்துப்பாடல் பாடுதல். மாலை 4.20 முதல் 5 மணிவரை ஆர்மோனியம், முக வீணை மற்றும் மிருதங்கம் ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. விடுமுறை நாட்களில் கூத்து சார்ந்த மற்ற நுட்பங்களான, அரிதாரம் பூசுதலுக்குப் பத்து நாள் பயிற்சி தரப்படுகிறது. கட்டியக்காரன் தன்னை இன்னும் செழுமைப்படுத்திக்கொள்வது போன்றவற்றையும் கற்றுத் தருகிறார்கள். மற்றபடி எல்லாப் பள்ளிகளையும் போல் பாடத்தை, அதுவும் தமிழ் வழிக்கல்வியில் சமச்சீர் பாடத்தைப் பயிற்றுவித்துவருகின்றனர்.

வேலை தரும் கூத்து

தங்கள் பள்ளிக்கு மூன்று காரணங்களுக்காகக் குழந்தைகள் படிக்க வருவதாகச் சொல்கிறது ராஜகோபால் தம்பதி. கூத்தை முறையாகக் கற்பது, வழக்கமான கல்வியில் ஆர்வமில்லாமல் இருப்பது, கற்றல் திறன் குறைவாக இருந்தால் இங்கு வந்தால் சரியாகிவிடும் எனும் நம்பிக்கை ஆகியவையே அந்தக் காரணங்கள். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, நல்ல கல்விக்கான இடமாகவும் இப்பள்ளி இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். 10 வயதுக்குமேல்தான் இப்பள்ளியில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றன.

50 குழந்தைகளை மட்டுமே சேர்க்கிறார்கள். இங்கே கல்வி பயின்றவர்கள் கிருஷ்ணா கூத்து கம்பெனி என்ற பெயரில் இயங்கி வருகிறார்கள். அதன்மூலம் பகுதி நேர வேலையில் ஈடுபடுவதுடன் கல்லூரிப் படிப்பையும் தொடர்கிறார்கள். கல்வியை முடித்து வெவ்வேறு பணிகளில் இருந்துகொண்டு கூத்துக் கலையில் ஈடுபடுகின்றனர். அத்துடன் கலையைக் கற்பிக்கும் வேலைகளிலும் அந்த மாணவர்கள் ஈடுபடுகிறார்கள்.

வகுப்புப் பாடங்களைக் கற்பிப்பதற்கு வெவ்வேறு கற்பித்தல் முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். அடிப்படை  ஆங்கிலம், கணிதத்துக்கான ஒரு திட்டம் ஆகியவற்றையும் செயல்படுத்திவருகிறார்கள். இத்திட்டம் வகுப்பின் அடிப்படையில் இல்லாமல் திறன் அடிப்படையில் இருக்கும் என்று சொல்கிறார் ராஜகோபால். முதல் நிலை ஆங்கிலத் திறன் குழுவில் மூன்றாம் வகுப்பு மாணவருடன் ஏழாம் வகுப்பு மாணவரும் இருப்பார்.

அதேபோல் நான்காம் நிலையிலும் மூன்றாம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் இருப்பார்கள். இந்நான்கு குழுக்களுக்கும் நான்கு ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கதைவழி ஆங்கிலம் கற்பித்தலை எடுத்துச் செல்கின்றனர். இவ்வாரத்துக்கான பாடப்பொருள் பச்சை நிறம் என்றால், ஒவ்வொரு திறன் குழுவுக்கேற்பக் கதையைத் தேர்வுசெய்து/ ஒரே கதையை மாற்றியமைத்து அதை மையமாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

கவனித்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல்  ஆகிய ஒவ்வொரு திறனுக்கும் 15 நிமிடங்கள் என அடுத்த ஆசிரியரிடம் ஓடுகின்றனர். கவனித்தல் திறன் வகுப்பில் கதையைக் கேட்பது/ படக்கதையைப் பார்ப்பது/ ஒலி ஒளிக்காட்சியாக இருக்கும். அதே கதையைப் பற்றி உரையாடலில், நடிப்பிலும் ஈடுபடுவார்கள். அவர்களது வாசிப்புத்திறனுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட கதையை வாசிப்பார்கள்.

நாடகங்களாகும் கதைகள்

ஆங்கில ஆசிரியர்களில் இருவர் தமிழ் தெரியாதவர்கள் என்பதால், அவர்கள் சுதந்திரமாகவும் தேவையை முன்னிட்டும் ஆங்கிலம் பேசுகின்றனர். முதல் நிலையில் இருப்பவர்கள் வாக்கிய உருவாக்கத்தில் ஈடுபட்டால் நான்காம் நிலையிலுள்ளவர்கள் ஆங்கிலக் கதைகளை நாடகமாக்குதலிலும் அதை நடிப்பதிலும் ஈடுபடுகின்றனர்.

“Sleeping lion, Snow white, red bangle, little prince, ugly duckling, cindrella” போன்ற கதைகளை நாடகமாக்கி அரங்கேற்றியுள்ளனர். “கதையை நாடகமாக மாற்றும்போது  ஆரம்பத்தை/ முடிவை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். இடையில் நிறைய பாட்டை நாங்களே எழுதிச் சேர்ப்போம், சிண்ட்ரெல்லாவின் செருப்பை வளையலாக மாற்றினோம். நடிக்கும்போது வேஷம் போடுவது பிடிக்கும். நாங்கள் ஆங்கிலத்தில் நடிப்பது வீட்டிலுள்ளவர்களுக்குப் பிடிக்கும்” என்கிறார்கள் ராஜகோபாலும் அவருடைய மனைவியும்.

அதேபோல் அறிவியல் பாடமான சீரான வேகம், சீரற்ற வேகத்தை அளப்பது பற்றி மாணவர்கள் குறிப்பிட்டது அருமையாக இருந்தது. மாணவர்கள் அதை விளக்கும்போது, “எந்த ஒரு வேகத்தையும் அளக்க முடியும். அதைக் கவனிக்கும்போதே அது சீரானதா சீரற்றதா என்று புரியும். அதைச் சரிபார்க்க கடிகாரத்தையும் அளவு நாடாவையும் வைத்துக்கொள்ள வேண்டும். ஓடுவதை, குதிப்பதை, பாடுவதை, நாம் எறியும் பந்தின் வேகத்தை என வகைப்படுத்தினோம். பின் அதை அளவிடவும் செய்தோம்” என்று கூறினர்.

aayiram 3jpgஎஸ்.சுந்தரலட்சுமிright

கூத்துக்காக ஆடுவோம், பாடுவோம், பின்பாட்டு பாடுவோம், அடவு, வசனம்பேசுதல், தாளம், ஆயுத மேந்துதல் என எல்லா வகுப்புகளும் இருக்கு. கட்டியக்காரனாக மாறும்போது காமடி பேசுதல், எடுத்து நடத்துதல் என எல்லாம் இருக்கும். எனப் பாடிக்காட்டினார்கள்.

தின்ன திடக்கம்

தின்ன திடக்கம்

தின்ன திடக்கம்

தின்னதா கிட்கிடதக தின்ன தின்னதா

தின்னதா கிட்கிடதக தின்ன தின்னதா

தின்னதா கிட்கிடதக தின்ன தின்னதா

திம் த திம் திம் திம்  தத்தித்ததக

திம் த திம் திம் திம்  தத்தித்ததக

திம் த திம் திம் திம்  தத்தித்ததக

பள்ளியைப் பற்றி அவர்கள் குறிப்பிடும்போது “தமிழ், ஆங்கிலம் என எந்தப் பாடம் நடத்தினாலும் புரிகிறது. எங்களை அடிக்க, திட்ட மாட்டார்கள், ஆங்கிலத்தில் பேச முடிகிறது. கதை தமிழிலும் ஆங்கிலத்திலும் தெரிகிறது. அடவு, கூட்டு பாடல், கட்டியக்காரன் வேஷம்… எல்லாமே எங்களுக்குப் பிடிக்கிறது”  என்றனர்.

அதோடு மாணவர்கள் அனைவரும், சிலை ரிலீஸ், பெட்டி ஆட்டம், காக்க முட்ட, நாயா எலும்பா, முதுகு பஞ்சர், குரங்காட்டம், அல்லையாம் முள்ளையாம், யானை விளையாட்டு, ஓணான் விளையாட்டு, மூக்கிள்ளி, ஐஸ் பாய், ஆவி மணி, நிலாகும்பல், திருடன் போலீஸ்…போன்ற  கிராமிய  விளையாட்டுகளை விளையாட முடிகிறது… என அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.

பள்ளியைத் தொடர்புகொள்ள: kuttu.kalai.kudam@gmail.com,
9944369600


கட்டுரையாளர்: கல்வி செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x