

மதுரை: ராமநாதபுரத்தில் படிக்கும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்னும் ஓராண்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்காமலே டிகிரி வாங்கி சென்றுவிடுவர். அதற்குள்ளாவது மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்டித்தர வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரூ.50 லட்சத்திலான நவீன டெக்சாஸ் ஸ்கேன் மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: ”கடந்த 2018-ல் டிசம்பர் 17-ம் தேதி 7 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பஞ்சாப், பிஹார், ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கட்டி முடித்துவிட்டனர். தமிழகம் நீங்கலாக 6 மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதி வழங்கியது.
தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் ஜெய்க்கா நிதி நிறுவனத்தின் 85 சதவீத நிதி உதவியும், 15 சதவீதம் மத்திய அரசும் நிதி ஒதுக்கியது. 2019 ஜனவரி 27-ல் பிரதமர், அப்போதைய முதல்வர் பழனிசாமி, எம்.பி தேர்தலை மனதில் வைத்து அடிக்கல் நாட்டினர். 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதி வரை எதுவுமே செய்யவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான 222 ஏக்கர் நிலத்தை ஆதாரபூர்வமாக வழங்கியது. தொடர்ந்து தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து வலியுறுத்தினார். இதற்கிடையில் 2022-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு 50 மாணவர்கள் சேர்ந்தனர்.
தமிழக முதல்வர் மறுத்திருந்தால் எய்ம்ஸ் வராமல் போயிருக்கும். எனவே ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அந்த மாணவர்கள் படிக்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கினார். தற்போது வரை 4 ஆண்டுகளில் 200 எய்ம்ஸ் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், இன்னும் எய்ம்ஸ் கட்டி முடிக்கவில்லை. இன்னும் ஓராண்டு முடிந்தால் எய்ம்ஸ் மாணவர்கள் கல்லூரியை பார்க்காமலே டிகிரி வாங்கி சென்றுவிடுவர்.
அம்மாணவர்கள் கல்லூரியை பார்த்துவிட்டு செல்லும் வகையில் கட்டி முடிக்க வேண்டும். அதில் நமக்கும் பொறுப்பு இருக்கிறது என தமிழக முதல்வர், எங்களை 2023-ல் பிப்.6, 7-ம் தேதி ஜப்பான் போகச் சொன்னார். தமிழகத்தில் இருந்து நானும் ஒரு குழுவோடு சேர்ந்து டோக்கியோவில் உள்ள ஜெய்க்கா நிறுவன துணைத் தலைவரை சந்தித்து கடிதம் கொடுத்தோம்.
ஜெய்க்காவின் டெல்லி பிரதிநிதியான ஆதித்யாபூரி என்ற சகோதரியை அழைத்துச் சென்றோம். அங்கு கொடுத்த பின்புதான் மருத்துவக் கல்லூரி மருத்துமனையை கட்டத் தொடங்கியுள்ளனர். அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி. அதனை விரைந்த கட்டித்தர மத்திய அரசுக்கு எல்லா வகையில் உறுதுணையாக இருந்து வருகிறோம்.
மேலும், அங்கு 33 கிலோ வாட் மின்சார உபயோகத்திற்கு ரூ.13 கோடி 13 லட்சத்து 71 ஆயிரத்து 148-ம், குடிநீர் கட்டமைப்புக்கு ரூ.11 கோடி 66 லட்சமும் தமிழக அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசோடு இணைந்தே மாநில அரசு செயல்படுகிறது. எய்ம்ஸ் விரைந்து கட்டி முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், மதுரை தெற்கு எம்.எல்.ஏ திரமு.பூமிநாதன், மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் இயக்குநர் சுகந்தி ராஜ குமாரி, மு.பூமிநாதன் எம்எல்ஏ, மருத்துவக் கல்லூரி டீன் அருள் சுந்தரேஷ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.