

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகளில் 1,149 காலி இடங்கள் உள்ளன. தகுதி உள்ளவர்கள் நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2025-26-ம் கல்வி ஆண்டில் சேர அவசர சிகிச்சை, மயக்க மருந்து, அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், எலும்பியல், சுவாச சிகிச்சை, இதயவியல், இசிஜி, மனநலம், மருத்துவப் பதிவேடு ஆகிய பிரிவுகளில் டெக்னீஷியன்கள் உள்ளிட்ட ஓராண்டு மருத்துவச் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்டான்லியில் 393 இடங்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் (கேஎம்சி) 319, சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) 254, கிண்டி கலைஞர் மருத்துவக் கல்லூரியில் 135, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் 48 என மொத்தமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த படிப்புகளில் மொத்தம் 1,149 காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
பிளஸ்-2 அறிவியல் பிரிவில் 40 சதவீதத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்ற, 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். பல்நோக்கு மருத்துவப் பணியாளர் படிப்புக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும். சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட சான்றிதழ் வகுப்புகளில் சேர, அந்தந்த அரசு மருத்துவக் கல்லூரிகளின் துணை முதல்வரை சந்தித்து நவ.14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.