

சென்னை: ‘ஆடை வடிவமைப்பில் ஜொலிக்க படைப்பாற்றலும் புதுமையும் வேண்டும்’ என்று கைத்தறி துறை செயலர் வி.அமுதவல்லி தெரிவித்தார். சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிஃப்ட்) 14-வது பட்டமளிப்பு விழா அந்நிறுவனத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் கைத்தறி, துணி நூல், கைவினைப் பொருள், ஜவுளி மற்றும் காதி துறையின் செயலர் அமுதவல்லி கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பதக்கங்கள், விருதுகள் மற்றும் பட்டங்களை வழங்கினார். பேஷன் டெக்னாலஜி இளநிலை படிப்பில் 250 பேர், முதுநிலை படிப்பில் 34 பேர் என மொத்தம் 284 பேர் பட்டம் பெற்றனர்.
அதைத் தொடர்ந்து அமுதவல்லி பட்டமளிப்புவிழா உரையாற்றும்போது கூறியதாவது: ‘ஆள் பாதை ஆடை பாதி’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அந்த வகையில், ஒருவரின் ஆளுமையை மேம்படுத்தும் உன்னதமான பணியை ஆடை வடிவமைப்பு மாணவர்களாகிய நீங்கள் செய்கிறீர்கள்.
ஆடை வடிவமைப்பு துறையில் ஜொலிக்க வேண்டுமானால் புதுமையும் படைப்பாற்றலும் அவசியம் இருக்க வேண்டும். கூடவே பராம்பரியமும் மிக்கதாக இருந்தால் அது அனைவரையும் ஈர்க்கும். இன்றைய உலகில் தொழில்நுட்பங்கள் புதிதாக புதிதாக வந்த வண்ணம் உள்ளன. எனவே, மாணவர்கள் தொழில்நுட்ப திறனை தொடர்ந்து புதுப்பித்து வரவேண்டும். உங்கள் படைப்புகளில் தனித்துவம் மிளிர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிஃப்ட் முன்னாள் மாணவரும், ஜேக்கப் அண்ட் க்லூஸ்டர் ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் தலைமை புதுமை கண்டுபிடிப்பு அலுவலருமான ஷாமி ஜேக்கப் பேசும்போது, “ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், இன்டர்நெட் ஆப் திங்க் என தொழில்நுட்பத் துறை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. எனவே அதற்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதோடு சமூக அக்கறை இருக்க வேண்டியதும் அவசியம்” என்றார்.
நிஃப்ட் டீன் நூபுர் ஆனந்த் பட்டமளிப்பு உறுதிமொழி வாசித்தார். முன்னதாக, நிஃப்ட் இயக்குநர் திவ்யா சத்யன் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அப்போது, “இந்த ஆண்டு பட்டம் பெற்றவர்களில் 90 சதவீதம் பேர் வளாக நேர்காணல் வாயிலாக முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
எஞ்சிய 10 சதவீதம் பேர் மேற்படிப்புக்கும், தொழில்முனைவோர் ஆகவும் செல்கிறார்கள்” என்றார். நிறைவாக, நிஃப்ட் இணை இயக்குநர் டி.பிரவீன் நாகராஜன் நன்றி கூறினார். விழாவில் நிஃப்ட் வளாக கல்வி ஒருங்கிணைப்பாளர் பீரகா செலாபதி, ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் கலந்துகொண்டனர்.