ஆசிரியர்கள் பற்றாக்குறை: புதுவையில் பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

ஆசிரியர்கள் பற்றாக்குறை: புதுவையில் பெற்றோருடன் பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
Updated on
1 min read

புதுச்சேரி: ஆசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வித் துறையை கண்டித்து பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுவை அடுத்த வீராம்பட்டினத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர் நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு 7 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கல்வித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும், இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள், இன்று காலை தங்களது பிள்ளைகளுடன் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு உள்ளே செல்லாமல், பள்ளி நுழைவுவாயில் முன் குழந்தைகளுடன் அமர்ந்து, கல்வித் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த கல்வித் துறை முதன்மை கல்வி அதிகாரி குணசேகரன், சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஆசிரியர் பற்றாக்குறையை போக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கல்வி அதிகாரி உறுதியளித்தார். இதனையடுத்து, பெற்றோர்களும், மாணவர்களும் போராட்டத்தை கைவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in