பொன்னேரி அருகே அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு ‘சீல்’

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பொன்னேரி: பொன்னேரி அருகே ஆண்டார்மடம் பகுதியில் அரசின் உரிய அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த தனியார் பள்ளிக்கு இன்று (அக்.31) மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அதிரடியாக ‘சீல்’ வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார்மடம் கிராமம் உள்ளது. இங்கு 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியை அதன் உரிமையாளர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து, பள்ளியை வாங்கியவர், கடந்த 2 ஆண்டுகளாக அரசின் உரிய அங்கீகாரம் இன்றி பள்ளியை நடத்தி வந்துள்ளார்.

ஆகவே, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அரசின் உரிய அங்கீகாரத்தை பெற சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்துள்ளனர். அவற்றை பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், அரசின் உரிய அங்கீகாரம் இன்றி கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆண்டார்மடம் தனியார் பள்ளியை இன்று காலை பள்ளிக் கல்வித் துறையின் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தேன்மொழி, பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளின் முன்னிலையில், திருப்பாலைவனம் காவல் ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்டோர் அடங்கிய காவல்துறை பாதுகாப்புடன் அதிரடியாக மூடி ‘சீல்’ வைத்தார்.

தொடர்ந்து, தற்போது 7-ம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த பள்ளியில் கல்வி பயின்று வந்த 70 மாணவ-மாணவியரை, ஆண்டார்மடம், பழவேற்காடு பகுதிகளில் உள்ள 3 தனியார் பள்ளிகள் சேர்க்க பெற்றோருக்கு அறிவுறுத்தி, அறிவிப்பு நோட்டீஸை மாவட்ட கல்வி அலுவலர் பள்ளி கதவுகளில் ஒட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in