தமிழகத்தில் ஆர்டிஇ சேர்க்கையில் 70,449 குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: நடப்பாண்டு தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் 70,449 குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 7,717 தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின் கீழ் இதுவரை 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்த திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால், 2025- 26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை நிறுத்தி வைத்தது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி ஆர்டிஇ திட்டத்தில் தனது பங்கு நிதியை மத்திய அரசு விடுவித்தது. அதன்பின் நடப்பாண்டில் ஆர்டிஇ மாணவர் சேர்க்கை பணிகள் தாமதமாக தொடங்கப்பட்டன.

இதையடுத்து பள்ளிகளில் ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர 82,016 பேர் விண்ணப்பித்தனர். அவற்றில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த 2 நாட்கள் நடத்தப்பட்டன. முதல் நாளில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட குறைந்த விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தகுதியான மாணவர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து 2-வது நாளான நேற்று நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் முன் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதை மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்களும் ஆய்வு செய்தனர். ஒட்டுமொத்தமாக ஆர்டிஇ ஒதுக்கீட்டில் 70,449 குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: ”தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான ஆர்டிஇ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் வெளிப்படையான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் சேர 82,016 குழந்தைகள் விருப்பம் தெரிவித்தன. அதில் விதிமுறைகளின்படி எல்கேஜி வகுப்பில் சேர 70,350 குழந்தைகளுக்கும், ஒன்றாம் வகுப்பில் சேர 99 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தற்போது ஆர்டிஇ சேர்க்கை பெற்றவர்களிடம் பள்ளிகள் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது. ஏற்கெனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், அதை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் பெற்றோர்களிடம் திருப்பிதர வேண்டும். இதற்கு முன்பு ஆர்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் 2020- 21ம் கல்வியாண்டில் 69,225 குழந்தைகளுக்கும், 2021- 22ல் 55,671, 2022- 23ல் 66,042, 2023- 24ல் 69,936, 2024- 25ல் 71,398 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in