

சென்னை: “அன்று கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் இன்றைய உயர்வுக்கு காரணம் திராவிட இயக்கம்” என்று சென்னையில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் (பிம்) 33-வது பட்டளிப்பு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மொத்தம் 197 பேர் பட்டம் பெற்றனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியது: “இந்தியாவிலேயே உயர் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. உயர் கல்வி சேர்க்கை விகிதம், என்ஐஆர்எஃப் தரவரிசை என பல குறியீடுகள் அதற்கு சான்றாக உள்ளன. இப்படி உயர் கல்வியில் தமிழகம் சிறக்க காரணம் யார்? ஒரு காலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து, இன்றைக்கு படித்து முன்னேறி, உலகம் முழுவதும் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் திராவிட இயக்கம்.
இந்த அடித்தளத்தில், உயர் கல்வியில் தலைசிறந்த தமிழகத்தை கட்டமைத்தவர் கருணாநிதி. உயர் கல்விக்கு என்று ஏராளமான திட்டங்கள் - கல்விக் கட்டணச் சலுகைகள், புதிய பல்கலைக்கழகங்கள் - நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் என்று உயர் கல்விக்காக அதிகமாக செய்தார்.
அதன் தொடர்ச்சியாகதான், திராவிட மாடல் அரசும், ஏழை எளிய மாணவ மாணவியரும், உலக தரத்தில் கல்வி பெற வேண்டும் என்று முதல்வரின் காலை உணவு திட்டம், கல்லூரி படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் - படித்து முடித்ததும் உடனடியாக வேலைவாய்ப்புப் பெறுவதற்காக நான் முதல்வன் திட்டம் - அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கு முதல்வரின் ஆய்வு திட்ட நிதி உதவி , வசதி வாய்ப்பு இல்லாத வீட்டு குழந்தைகளும் உலகின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்று மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள் என்று பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம்.
உலகம் எந்த வேகத்தில் மாற்றம் அடைகிறதோ, அந்த வேகத்திற்கு நாமும் ஈடுகொடுத்து ஓட வேண்டும். கொஞ்சம் அசந்தாலும், அவுட்-டேட் ஆகிவிடும் என்று சொல்லிவிடுவார்கள். அதேபோல், லீடர்ஷிப் என்றால், ஒருவர் வகிக்கக்கூடிய பதவியோ, அவர்கள் சம்பளமோ கிடையாது! அவர்கள் உருவாக்கும் பாசிட்டிவ் தாக்கம்தான்.
இந்த செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) காலத்தில், உங்களின் நேர்மைதான் உங்கள் அறிவை அளவிட உதவும். வெற்றிக்கும் ஒழுக்கத்திற்கும் இடையே சமநிலை மிகவும் அவசியம். எத்தனை மாற்றங்கள், வளர்ச்சிகள் வந்தாலும், சில அடிப்படைகள் எப்போதும் மாறாது. அதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
இதற்காக பெரிய பெரிய புத்தகத்தையெல்லாம் படிக்க வேண்டும் என்று இல்லை. எல்லாவற்றிற்கும் பொருந்தும் அடிப்படையான மேனேஜ்மெண்ட் பாடங்கள் திருக்குறளிலேயே நிறைய இருக்கின்றன. அந்த வாழ்க்கைப் பாடங்களை நீங்கள் ஒவ்வொருவரும் எப்போதும் மறக்காமல் இருக்க வேண்டும்.
எப்படிப்பட்ட சோதனையான காலத்திலும், எந்தச் சூழலிலும் நேர்மை, நம்பிக்கை, பொறுப்பு இதுபோன்ற விழுமியங்களை கைவிடாதீர்கள். நீண்டகால நோக்கில், இவை எல்லாம்தான் உங்கள் வாழ்க்கையை உயர்த்த அடித்தளமாக இருக்கும். எங்கு சென்றாலும், துணிச்சலாக, புதுமையாக, தெளிவாக, அதே நேரத்தில், அன்போடும் அறத்தோடும் செயல்படுங்கள்.
இன்றைக்கு நீங்கள் பட்டம் பெறுவது, கல்விக்கான - கற்றலுக்கான ஒரு முடிவு கிடையாது. இன்னும் கற்றுக்கொள்வதற்கான புது தொடக்கம் இது. நீங்கள் எல்லோரும் நல்ல மனிதர்களாக - வெற்றியாளர்களாக - மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக வளர வேண்டும். நீங்கள் உயர உயர வளரும்போது, உங்களுக்கு கீழே இருப்பவர்களையும் நீங்கள்தான் கைதூக்கி விட வேண்டும். இதுதான் உண்மையான தலைமைத்துவ பண்பு .
இந்திய துணைக்கண்டத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கடல் கடந்து வாழக்கூடிய வாணிபம் செய்த வரலாறும், ஆயிரம் ஆண்டு முன்பே கடல் கடந்து பல நாடுகளை வெற்றி கொண்ட வரலாறும் கொண்டது தமிழினம். இன்றைய நவீன உலகத்தில் பல்வேறு பன்னாட்டுப் பெரு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளாக நீங்கள் வர வேண்டும்.
பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை, கனவு எல்லாம். பல ரோல்மாடல்களை பார்த்து வளர்ந்த நீங்கள், அடுத்து வர இருக்கும் பலருக்கும் ரோல்மாடல்களாக விளங்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்வில் உயர் கல்வித்துறை செயலர் பொ.சங்கர், 'பிம்' தலைவர் ரவி அப்பாசாமி, நிர்வாகக் குழு உறுப்பினர் என்.பால பாஸ்கர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயகிருஷ்ணா, முதுகலை துறையின் தலைவர் ராகவேந்திரா, பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் பங்கேற்றனர்.