

சென்னை ஐஐடியில் நடைபெற்ற மாணவர்களின் புத்தொழில் - அறிவியல் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த புதுமையான தயாரிப்புகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் ‘சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்போம்’ என்ற தலைப்பில் மாணவர்களுக்கான புத்தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த சிந்தனைகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலான கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில், இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 38 தயாரிப்புகள் மற்றும் அறிவியல் சிந்தனைகள் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இக்கண்காட்சியை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தொடங்கி வைத்துப் பேசும்போது, "ஜீரோ கார்பன் வெளியேற்றம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மாணவர்களின் சிந்தனைகளை செயலாக்கும் வகையில் 2-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. மாணவர்கள் எந்தத் துறையில் படித்தாலும் அவர்களுக்கான ஆர்வம் எங்கு இருக்கிறதோ அதை நோக்கித்தான் அவர்கள் சென்றுகொண்டிருப்பார்கள். பொறியியல் மாணவர்களை துறைவாரியாகப் பிரிக்காமல் இன்ஜினீயரிங் ஸ்கூல் என்ற வகையில் புதிய பாடமுறையை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "மாணவர்கள் தங்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் பல்வேறு தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர், இலையில் இருந்து பேப்பர் தயாரிப்பது, வாழைநாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குவது, மரத்திலிருந்து செயற்கையான பூக்களை உருவாக்குவது என பல்வேறு வகையான தயாரிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பிளாஸ்டிக் மற்றும் வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையிலான தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் சிந்தனைகளை புத்தாக்க தொழிலை (ஸ்டார்ட்-அப்) நோக்கி கொண்டு செல்வதுதான் கண்காட்சியின் தலையாய நோக்கம். இந்த ஆண்டு 38 கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த 10 சிந்தனைகளுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும்" என்றார்.
இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த மாணவர்களின் புதுமையான தயாரிப்புகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.