

காட்டாங்கொளத்தூர்: வாழ்க்கையில் பண்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும் என்று நீதிபதி மு.கற்பகவிநாயகம் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் தமிழ்ப்பேராயம் விருதுகள் வழங்கப்படு கின்றன. சிறுகதைகள், அறிவியல், நாடகம், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறைகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து, 11 படைப்பாளிகளுக்கு தமிழ்ப்பேராயம் விருதும், பணமுடிப்பும் வழங்கப்படும்.
இதன்படி, 15-வது ஆண்டு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழ்ப்பேராயம் புரவலரும், எஸ்ஆர்எம் பல்கலை. வேந்தருமான பாரி வேந்தர் தலைமை வகித்தார். தமிழ்ப்பேராயம் தலைவர் கரு.நாகராசன் வரவேற்றார். மொத்தம் 11 தலைப்புகளில், ரூ.11.90 லட்சம் மதிப்பிலான தமிழ்ப்பேராய விருதுகளை ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மு.கற்பக விநாயகம் வழங்கினார்.
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித், பாரதியார் கவிதை விருது கவிஞர் இளம்பிறை, அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது எழுத்தாளர் மருதன், ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது கே.பத்மஜா நாராயணன், அப்துல் கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது முனைவர் சசிக்குமார், பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது எழுத்தாளர் அமுதன், முத்தமிழறிஞர் கலைஞர் சமூகநீதி விருது எழுத்தாளர் பிருந்தா சீனிவாசன் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ பதிப்பக ஆசிரியர் தேவதாசன், சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது ஆசிரியர் வதிலை பிரபா, தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது செல்லப்பன், அருணாசலக் கவிராயர் விருது மு.வெ.ஆடலரசு, பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது கோ.தெய்வநாயகம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விழாவில் நீதிபதி மு. கற்பகவிநாயகம் பேசியதாவது: எஸ்ஆர்எம் பல்கலை. 40 ஆண்டுகளாக வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. மாணவர்கள் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் கல்வியை மட்டுமின்றி, ஒழுக்கத்தையும், பொறுப்புணர்ச்சியையும் கற்றுத் தர வேண்டும்.
மாணவர்கள் வாழ்க்கையில் பண்புள்ளவர்களாக நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பல்கலை. வேந்தர் பாரிவேந்தர் பேசும்போது, “சிறுகதைகள், அறிவியல், நாடகம், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து, அவற்றின் படைப்பாளிகளுக்கு விருதும், பணமுடிப்பும் வழங்கப்படுகிறது.
இதுவரை ரூ.3 கோடிக்கும் மேல் விருதும், பணமுடிப்பும் வழங்கியுள்ளோம். தமிழ் எழுத்தாளர்கள், உணர்வாளர்கள், அறிஞர்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன” என்றார். நிகழ்ச்சியில், பல்கலை. பதிவாளர் சு.பொன்னுசாமி, எஸ்ஆர்எம் வளாக நிர்வாகி இரா.அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்ப்பேராயம் செயலர் பா.ஜெய்கணேஷ், உதவிப் பேராசிரியர் மு.பாலசுப்பிரமணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.