டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு முடிவு வெளியீடு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: ஏறத்தாழ 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி இன்று (புதன்கிழமை) பிற்பகல் வெளியிட்டது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசையை தேர்வாணையத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை 12-ம் தேதி நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இந்த ஆண்டு குருப்-4 தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக பெரும்பாலான தேர்வர்கள் தெரிவித்தனர். ஒட்டுமொத்தமாகவே அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வு கடினமாக இருந்ததால், கட் ஆப் மதிப்பெண் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இதற்கிடையே, தேர்வு முடிவடைந்த பின்னர் வெவ்வேறு பதவிகளில் கூடுதலாக 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆக அதிகரித்தது. குருப்-4 தேர்வு முடிவு அக்டோபர் இறுதிக்குள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே அதிகாரப் பூர்வமாக அறிவித்திருந்தது. தீபாவளிக்கு முன்பாக தேர்வு முடிவு வெளியாகலாம் என தேர்வர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், குருப்-4 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டன. இந்த இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு மதிப்பெண் மற்றும் தரவரிசையை அறிந்து கொள்ளலாம்.

அடுத்த கட்டமாக ஆன்லைன் சான்றிதழ் சரி பார்ப்புக்கு அனுமதிக்கப்படும் தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in