

சென்னை: அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை சார்பில் 10,000 மாணவர்களுக்கு ரூ.12 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார்.
இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் ஸ்டார்ஸ் திட்டத்தில் நடப்பாண்டில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர்கல்வியைப் பெறும் வகையில் ‘அனைவருக்கும் உயர் கல்வி’ அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் பேருக்கு ரூ.12 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
விஐடி பல்கலை.யில் 4,000 பேர் பிஹெச்டி படிக்கின்றனர். இவ்வாறு கூறினார். விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் கூறும்போது, “2024 ஷாங்காய் ஏஆர்டபிள்யூயு தரவரிசைப் பட்டியலில் இந்தியாவில் முதல் 2 இடங்களில் விஐடிவந்துள்ளது. பிஹெச்டி மாணவர்களுக்கு மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஊக்கத்தொகை அளிக்கிறோம்.
அமெரிக்காவின் ஸ்டான் ஃபோர்டு பல்கலை. வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய அளவில் வேலூர் விஐடி முதல் 5 இடங்களில் உள்ளது. அதேபோல் க்யூ.எஸ். உலக பல்கலைக்கழக தரவரிசையில் பொறியியல் தொழில்நுட்பத்துறையில் விஐடி 142-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 9-ம் இடம் பிடித்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஃபர் மேஷன் சிஸ்டம்ஸ் பாடப் பிரிவில் 110-வது இடத்திலும், டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு பாடப் பிரிவில் முதல் 100 இடத்திலும் உள்ளது.
தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் 2016 முதல் தொடர்ந்து விஐடி நாட்டின் முதல் 20 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளது. நடப்பாண்டில் பல்கலை. வரிசையில் 14-வது இடத்திலும், ஆராய்ச்சி வரிசையில் 14-வது இடத்திலும், பொறியியல் வரிசையில் 16-வது இடத்திலும், ஒட்டு மொத்ததர வரிசையில் 21-வது இடத்திலும் உள்ளது” என்றார்.
விஐடி துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், ரமணி பாலசுந்தரம், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி, இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி ஆகி யோர் உடனிருந்தனர்.