

காரைக்குடி: காரைக்குடி அருகே முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி ஒருவர், கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்த தனது ஓய்வுக்காலப் பணம் ரூ.30 லட்சத்தைச் செலவழித்துப் பயிற்சி மையம் ஏற்படுத்தியுள்ளார். மேலும், போட்டித் தேர்வுக்குத் தயாராவோருக்கு உதவ ரூ.25 லட்சம் மதிப்புள்ள வீட்டைப் பயிற்சி மையமாக மாற்றியுள்ளார்.
தான் மட்டும் உயர்ந்தால் போதாது, தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் உயர வேண்டும் என்று நினைப்போர் ஒரு சிலரே. அந்த வகையில் தனது ஓய்வூதியப் பணத்தில் திறன் பயிற்சி அளித்துக் கிராமப்புற இளைஞர்களை கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்ற தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் பி.பரமசிவம் (61).
காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த இவர், சென்னையில் வருமான வரித்துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மாற்றுத் திறனாளியான இவர், கிராமப்புற இளைஞர்களுக்காக தனது சொந்த ஊரான பள்ளத்தூரில் வாடகைக் கட்டிடத்தில் திறன் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இதற்காக தான் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்திலிருந்து ரூ.30 லட்சம் செலவழித்துள்ளார். அங்கு பணிபுரியும் 5 பயிற்சியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் இருந்து ஊதியம் வழங்குகிறார்.
இங்கு இலவசமாக தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி மென்பொருள் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த மையத்தில் 105 கிராமங்களைச் சேர்ந்த 838 பேர் சேர்ந்துள்ளனர். அதில் 525 பேர் முழுமையாகத் திறன் பயிற்சி பெற்று வெளியேறியுள்ளனர். சிலர் பல்வேறு பணிகளிலும் சேர்ந்துவிட்டனர். இந்நிலையில், போட்டித் தேர்வுக ளுக்குத் தயாராவோருக்கு உதவ ரூ.25 லட்சம் மதிப்பிலான வீட்டைப் பயிற்சி மையமாக மாற்றியுள்ளார். அங்கு அடுத்த மாதம் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன.
இது குறித்து பி.பரமசிவம் கூறியதாவது: எனது தாய், தந்தை படிக்காதவர்கள். நான் 10-வதாக பிறந்தேன். வறுமையிலும் நான் மட்டுமே படித்து முன்னேறினேன். என்னுடன் பிறந்தவர்கள் 5-ம் வகுப்பைக்கூட தாண்டவில்லை. ‘அறம் செய்ய விரும்பு’ என்ற ஆத்திச்சூடி என்னை சிறுவயதிலேயே மிகவும் கவர்ந்தது. அதிலிருந்தே ஏதாவது சமூகத்துக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
எங்கள் பகுதி நகரத்தார் பல்வேறு சமூக சேவைகளைச் செய்கின்றனர். எனது உயர் அதிகாரி ரவிச்சந்திரன், நமது குடும்பத்துக்காக அலுவ லகத்தில் பணியாற்றுவது முக்கியமல்ல. பிறருக்காக பணியாற்ற வேண்டும் என்று கூறினார். இது எனக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது. கல்வியால்தான் எனது குடும்பம் உயர்ந்தது. எனது மகன்கள் இருவரும் நல்ல நிலையில் உள்ளனர்.
அதேபோல், கிராமப்புற இளைஞர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி, வாழ்வில் ஒளியேற்றினால், அவர்களது குடும்பமும் முன்னேறும். அதற்காக இந்தச் சேவையைச் செய்கிறேன். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றதும், அக்டோபரில் பயிற்சி மையத்தைத் தொடங்கினேன். நல்லுள்ளம் படைத்த சிலர் நன்கொடை வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர். இதுபோன்ற சேவைகளைத் தொடர்ந்து செய்து எனது ஓய்வுக் காலத்தை பயனுள்ள வகையில் கழிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.