

சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆராய்ச்சி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலை. துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி தலைமை வகித்தார். பதிவாளர் கி.சிவசங்கீதா வரவேற்புரையாற்றினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற 30 பள்ளிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற கருப்பொருள்களில் தங்கள் ஆராய்ச்சி சார்ந்த சுவரொட்டிகள் மற்றும் புதுமையான கருத்துகளை வழங்கினர்.
‘ஆராய்ச்சியை எவ்வாறு தொடங்குவது’ மற்றும் ‘மருத்துவத் துறையில் ஆராய்ச்சி’ என்ற தலைப்பில் பல்வேறு அமர்வுகள் நடத்தப்பட்டன. விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை துணைவேந்தர் பாராட்டி கவுரவித்தார்.
இந்நிகழ்வில் துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி பேசியதாவது: மாணவர்கள் இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், புதுமையையும் ஊக்குவிப்பதில் இந்தத் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது. ஆராய்ச்சியை கற்றலின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருத மாணவர்களை தூண்டியுள்ளது.
பள்ளி மாணவர்களிடையே ஆராய்ச்சி நோக்கு நிலையை வளர்ப்பதற்கும், எதிர்கால கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வழிவகுப்பதற்கும் பல்கலைக்கழக அளவிலான தொடர்ச்சியான முயற்சியின் தொடக்கமாக இது அமைந்துள்ளது.
இத்திட்டம், படைப்பாற்றல் மற்றும் ஆரம்பகால ஆராய்ச்சி, கற்றல் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என்றார்.நிறைவாக, சென்னை ராகஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கன்சர்வேடிவ் பல் மருத்துவம் மற்றும் எண்டோடோன்டிக்ஸ் துறையின் இணை பேராசிரியர் சி.நிர்மலா நன்றியுரையாற்றினார்.