

சென்னை: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 1,996 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 10-ம் தேதி வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு அன்றைய தினமே தொடங்கி ஆக.12-ம் தேதிமுடிவடைந்தது. தேர்வுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 530 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த செப்.30-ம் தேதி ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும். பாடத்தேர்வுடன் சேர்த்து கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வும் நடைபெறும்.
இதனிடையே, புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்படுவதால், தேர்வுக்கு தயாராகும் வகையில் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என விண்ணப்பதாரர்கள் பலர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன், தேர்வை தள்ளிவைத்தால் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். அதையடுத்து நீதிபதி, தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது, எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார்.