காமராஜரும் கல்வி வளர்ச்சியும்!

காமராஜரும் கல்வி வளர்ச்சியும்!
Updated on
1 min read

காமராஜரின் பிறந்த நாள் ‘கல்வி வளர்ச்சி நாளா’க இன்று கொண்டாடப்படுகிறது. எல்லோரும் படித்துவிட்டால், வேலைக்கு எங்கே போவது என்று கேட்டவர்கள் இருந்த காலக்கட்டத்தில் கல்விப் புரட்சியை நிகழ்த்தியவர் காமராஜர். 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் முதலமைச்சராக காமராஜர் நீடித்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் கல்வியில் தனிக் கவனம் செலுத்தினார்.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் மூன்று மைல் தொலைவில் ஒரு நடுநிலைப் பள்ளி, 5 மைல் தொலைவில் ஓர் உயர் நிலைப் பள்ளி எனத் திறக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. 1954இல் 14 ஆயிரமாக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 1957இல் 15,800ஆக அதிகரித்தது.

1951இல் 637 என்கிற அளவில்தான் உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன. அந்த எண்ணிக்கை 1962இல் 1995ஆக உயர்ந்தது. படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1952இல் 3.33 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை 1962இல் 9 லட்சமாக உயர்ந்தது.

எல்லாப் பிள்ளைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வியை வழங்கினால் நாடு முன்னேறும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்த தலைவர் காமராஜர். கட்டாய இலவசக் கல்வி வழங்க குழு அமைத்து, அக்குழுவின் பரிந்துரைகளையும் செயல்படுத்தினார்.

அரசுப் பள்ளிகளை மட்டும் கவனிக்காமல் தனியார் பள்ளிகளையும் ஊக்குவித்தார். ‘பள்ளி வளர்ச்சித் திட்டம்’ என்கிற பெயரில் பள்ளிகளுக்குத் தேவையான பொருட்கள் பெற வழிவகுத்தார். முத்தாய்ப்பாக ‘இலவச மதிய உணவுத் திட்ட’த்தைக் கொண்டு வந்து, ஏழைக் குழந்தைகளும் பள்ளிக்கூடம் செல்வதை உறுதி செய்தார் காமராஜர்.

காமராஜர் கல்வியில் மேற்கொண்ட புரட்சிகரமான திட்டத்தால் 6 - 11 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது 45 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக அதிகரித்தது. தொடக்கக் கல்வியிலும், உயர்நிலைக் கல்வியிலும் கவனம் செலுத்திய காமராஜர், கலைக் கல்லூரிகளையும் தோற்றுவித்தார்.

இதேபோல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாலிடெக்னிக்குகள், பொறியியல் கல்லூரிகளையும் தொடங்கி வைத்தார். கல்விக்கென புரட்சிகரமான திட்டங்கள் பல கொண்டு வந்த காமராஜர் பிறந்த நாள், 2006இல் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்த நாளுக்கு இதற்கு மேலும் ஒரு சிறப்பு இருக்க முடியுமா?

ஜூலை 15 - காமராஜர் பிறந்தநாள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in