தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தை அமல்படுத்த உத்தரவு

தமிழக அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தை அமல்படுத்த உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை கற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் மேம்பாட்டுக்கான திறன் இயக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி மற்றும் கணிதப் பாடத்தின் கற்றலை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் எஸ்சிஇஆர்டி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும், 9-ம் வகுப்புக்கான பயிற்சிக் கட்டங்கள் மற்றும் கையேடுகள் விரைவில் தயாரித்து வழங்கப்படும்.

இதுதவிர, திறன் இயக்கத்தை விரைந்து தொடங்கும் வகையில் 6 முதல் 8-ம் வகுப்புக்கான ஆசிரியர் கையேடுகளின் டிஜிட்டல் பிரதிகளும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றைக் கையாள்வது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் தரப்பட உள்ளன. இந்த இயக்கத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, மொழி மற்றும் கணிதப் பாடங்களில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை கண்டறிய, அடிப்படை மதிப்பீடு தேர்வு ஜூலை 8 முதல் 10-ம் தேதி வரை நடத்தப்பட வேண்டும். இதற்கான வினாத்தாள்கள் மாநில மதிப்பீட்டு புலத்தில் முன்கூட்டியே பதிவேற்றம் செய்யப்படும். தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் ஜூலை 18-ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். அதன்பின்னர், திறன் இயக்கத்துக்கு தேர்வான மாணவர்கள் விவரம் வெளியிடப்படும்.

திறன் பயிற்சி புத்தகம் 2 பகுதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முதல் பகுதி அடிப்படை கற்றலை வலுப்படுத்தும் நோக்கிலும், 2-ம் பகுதியில் மிகவும் முக்கியமான கற்றல் விளைவுகளை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இது சார்ந்த நடைமுறைகளை பின்பற்றி திறன் இயக்கத்தை திறம்பட நடத்தி முடிப்பதற்கான பணிகளை முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in