மாதம் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் முதுகலை டிப்ளமா படிப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: முதுகலை பட்டதாரிகள் மாதம்தோறும் ரூ.8,000 உதவித் தொகையுடன் தொல்லியல், கல்வெட்டியல் பாடங்களில் முதுகலை டிப்ளமா படிப்பு படிக்கலாம் என தமிழக அரசு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் 2 ஆண்டு கால தொல்லியல், கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை மற்றும் அருங்காட்சியகவியல் முதுகலை டிப்ளமா படிப்புகளும், ஓராண்டு கால சுவடியியல் முதுகலை டிப்ளமா படிப்பும் வழங்கப்படுகின்றன.

தொல்லியல் படிப்பில் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்களும், கல்வெட்டியல் படிப்பில் தமிழ், இந்திய வரலாறு, பண்டைய வரலாறு, தொல்லியல் வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றோரும், மரபு மேலாண்மை படிப்பில் பொறியியல் பட்டதாரிகளும், மானுடவியல், சமூகவியல், வேதியியல், இயற்பியல், உயிரியல், நிலத்தியல் (ஜியாலஜி)-இவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் சுவடியல் படிப்புக்கு தமிழில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு ஜூலை 20-ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பத்தை தொல்லியல் துறையின் இணையதளத்தில் (www.tnarch.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து, "ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை 600 008" என்ற முகவரிக்கு ஜூலை மாதம் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த முதுகலை டிப்ளமா படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.8 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 044 - 2819 0023 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in