அரசுப் பள்ளிகளில் பணிநிரவல் கலந்தாய்வு: ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்க தடை!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) மாறுதல் கோரி 90,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலமாக தேவையுள்ள வேறு பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்படுவார்கள்.

அதன்படி இந்த ஆண்டு உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஜூலை 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால், பொதுவில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களில் பல்வேறு குளறுபடிகள் நிலவியதாகவும், பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாமல் பணிநிரவல் செய்யக் கூடாது என்று இடைநிலை ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பணிநிரவலுக்கு உட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி ஆணை பெறுமாறு வற்புறுத்தக் கூடாது.

அதேபோல், வற்புறுத்தி பணிநிரவல் ஆணை ஏதேனும் வழங்கப்பட்டதாக புகார் பெறப்படின் சார்ந்த அலுவலர் மீது கடுமையான ஒழங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், ஒப்புதல் கடிதமும் பெற வேண்டாம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல் குறித்து எந்த அறிவிப்பு இல்லாதது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in