இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வான 2,346 பேரின் பின்னணியை ஆராய உத்தரவு

இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வான 2,346 பேரின் பின்னணியை ஆராய உத்தரவு
Updated on
1 min read

இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,346பேர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம்(டிஆர்பி) மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவர்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் 2,346 பேர் கொண்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இவர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அரசுப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடத்தில் மாணவர்களுக்கு கல்வி, நல்லொழுக்கம், கற்பித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள தேர்வு பெற்ற நபர்கள் பணியில் சேருவதற்கு முன்பு குற்றச்செயலில் ஈடுபட்டு வழக்குகளில் தண்டனை அல்லது வழக்கு ஏதும் நிலுவையில் உள்ளதா என்பதை பணிநியமனத்துக்கு முன்பு ஆய்வு செய்ய வேண்டும். இதை கருத்தில் கொண்டு டிஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,346 பேரின் வீட்டு முகவரியுடன் கூடிய பட்டியல் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவரின் விவரத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பி அவர்கள் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்று ரகசியமான முறையில் அறிக்கை பெற்று, கோப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது என அறிக்கை பெறப்பட்டால் உடனடியாக அந்த நபருக்கு பணி நியமனம் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், அந்த தகவலை உடனடியாக தொடக்கக் கல்வித் துறைக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in