பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகிறது

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகிறது
Updated on
1 min read

சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூன் 27) வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் இதில் அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.

இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூன் 27) வெளியிடப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார். மேலும், கலந்தாய்வு காலஅட்டவணையையும் அவர் வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர், மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் புருஷோத்தமன் கலந்துகொள்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in